தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தொகுப்புரை

  • 2.9 தொகுப்புரை

    ஆநிரை கவர்தலாகிய ஒழுக்கம், வெட்சித் திணை எனப் பெறும்; இத்திணை அகப்பொருள் திணைகளுள் ஒன்றாகிய குறிஞ்சிக்குப் புறன்; இவ்வெட்சி ஒழுக்கம் மன்னுறு தொழில், தன்னுறு தொழில் என்று இரு வகைப்படும்; பொதுவாக வெட்சித் திணைச் செய்திகளை ஐந்து வகைப்படுத்தலாம்; அவை கவர்தல், பேணல், அடைதல், பகுத்தல், வணங்கல் என்பனவாம்; கவர்தலாவது ஆநிரை கவர்தல்; பேணலாவது, கவர்ந்த ஆநிரைகளைப் பாதுகாத்தல்; அடைதலாவது கவர்ந்து பேணிய ஆநிரைகளைக் கைக்கொண்டு தன்னூரை அடைதல்; பகுத்தலாவது கொண்டு வந்துசேர்த்த ஆநிரைகளை மறவர்க்கும் துடியர்க்கும் புள்வாய்ப்பச்சொன்ன புலவர்க்கும் பாணர்க்கும் எனப் பல்லோர்க்கும் பகிர்ந்து கொடுப்பது; வணங்கலாவது ஆநிரையைக் கவர்வதற்குத் துணையாகவும் அருளும்படியாகவும் பராவுதல்; இந்த ஐந்து வகைகளில் அடங்கும் துறைகளின் பெயர்க்காரணம், அவற்றின் விளக்கம், வெண்பாவின் கொளுக் கருத்து, பொருந்தி வரும் அமைதி ஆகியனவற்றை இதுகாறும் பார்த்தவற்றால் அறிந்தோம்.

    தன் மதிப்பீடு : வினாக்கள் - II
    1)
    ‘தலைத் தோற்றம்’ - இத்துறையை விளக்குக.
    2)
    கவர்ந்த ஆநிரையை யார் யாருக்குப் பகுத்துக் கொடுத்தல் மரபு?
    3)
    பங்கை மிகுதியாகக் கொடுப்பது யாருக்கு? இஃது எத்துறையின் பாற்படுகின்றது?
    4)
    பிள்ளை வழக்கு என்னும் துறையை விளக்குக.
    5)
    தெய்வங்களை வழிபடும் நிலை எத்தனை வகைப்படும்? அவை யாவை?

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 11-09-2017 17:23:23(இந்திய நேரம்)