Primary tabs
-
3.3 ஆநிரை மீட்கச் செல்லல்
வெட்சி வீரர்கள் கவர்ந்து சென்ற தமது ஆநிரையைக் கரந்தை வீரர் மீட்டு வருதல் பொருட்டுச் செல்வதைப் பற்றிக் கரந்தை அரவம், அதரிடைச் செலவு என்னும் இரு துறைகள் கூறுகின்றன(அதா் - வழி).
பறிகொடுத்த ஆநிரைகளை மீட்பதற்காக, மன்னனின் ஆணைப்படி மறவர் கூடுகின்றனர். அப்போது எழும் முழக்கம் ஆதலின் கரந்தை அரவம் எனப்பட்டது. அரவம் - ஒலி; ஓசை.
- கொளுவின் பொருளும் கொளுவும்
தமது ஆநிரைகளை வெட்சியார் கைப்பற்றிய செய்தியை அரசன் பறையறைந்து தெரிவித்தான். அதனைக் கேட்டவுடனேயே கரந்தையார் தாங்கள் செய்து கொண்டிருந்த வேலையை மேலும் தொடராமல் அப்படியே போட்டுவிட்டு விரைந்து ஓரிடத்தில் குழுமினர். குழுமிய அதனைக் கூறுவது கரந்தை அரவம் எனப்பெறும்.
நிரைகோள் கேட்டுச் செய்தொழில் ஒழிய
விரைவனர் குழூஉம் வகைஉரைத் தன்று.எடுத்துக்காட்டு வெண்பா:
கால்ஆர் கழலார்; கடும்சிலையார்; கைக்கொண்ட
வேலார்; வெருவந்த தோற்றத்தார்; - காலன்
கிளர்ந்தாலும் போல்வார்; கிணைப்பூசல் கேட்டே
உளர்ந்தார்; நிரைப்பெயர்வும் உண்டு.- வெண்பாவின் பொருள்
கரந்தை மறவர்கள், தமது காலிலே வீரக்கழலை உடையவர்கள்; கையிலே, கொடுமையை வெளிப்படுத்தும் வில்லை உடையவர்கள்; வேலினையும் கொண்டவர்கள்; தம்மைக் கண்டவரை அஞ்சவைக்கும் தோற்றப் பொலிவை உடையவர்கள்; கூற்றுவனாகிய எமன் வெகுண்டது போன்ற சினத்தை உடையவர்கள். இவர்கள், ‘பசுநிரையை வெட்சிமறவர் கவர்ந்து சென்றனர்’ என்ற செய்தியை அறிவிக்கும் தடாரியின் ஓசையைக் கேட்டதும் போருக்கு எழுந்தனர். ஆதலால், இவர்கள் வெட்சியார் கவர்ந்து சென்ற பசுவின் திரளை மீட்கக் கூடும்.
- துறைப் பொருத்தம்
இதனால், நிரை மீட்கும் போரில் ஒரு பகுதியை உரைத்தமை புலனாகின்றது.
அதர் - வழி; செலவு - செல்லுதல். நிரை மீட்சியில் இறங்கிய கரந்தையார், வெட்சி மறவர்கள் நிரையுடன் செல்லும் வழியிடைச் செல்வது பற்றிக் கூறுவதால், அதரிடைச் செலவு எனப் பெற்றது.
- கொளுவின் பொருளும் கொளுவும்
தம்மால் போற்றப்படாத வெட்சி மறவர் தாம் கவர்ந்து சென்ற ஆநிரையோடும் போன வழியில் கரந்தையார் அவற்றை மீட்கும் பொருட்டுச் சென்றதைச் சொல்வது, அதரிடைச் செலவு என்னும் துறையாகும்.
ஆற்றார் ஒழியக் கூற்றெனச் சினைஇப்
போற்றார் போகிய நெறியிடை ஏகின்று