தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

போர் நிகழ்ச்சிகள்

  • 3.6 போர் நிகழ்ச்சிகள்

    போரில் இடம்பெறும் சில நிகழ்ச்சிகளைப் பின்வரும் மூன்று துறைகள் விளக்குகின்றன.

    3.6.1 கையறு நிலை

    ஏதேனும் ஒரு பொருளை இழந்தால், அதனை முயற்சியால் மீளவும் பெற முடியும். கூற்றத்தின் வாய் வீழ்ந்தால் ஆகுமா? ஆகாதல்லவா? அப்போது, செயலற்ற நிலை உண்டாகும். அதனைக் கையறு நிலை என்பர். தங்களைப் பேணிய கரந்தையான் ஒருவன் ஆநிரை மீட்புப் போரில் இறந்ததனால் செய்வது இன்னதென்று அறியாத பாணர் வருந்தியதை உரைக்கின்ற துறையாதலின் கையறுநிலை எனப் பெற்றது.

    • கொளுவின் பொருளும் கொளுவும்

    வாளினைக் கொண்டு போர் புரியும் போர்க்களம், அச்சம் வருவதற்குக் காரணமாக உள்ளது. இத்தகு போர்க்களத்தில் ஆநிரை மீட்கப் போரிட்ட கரந்தை மறவன் இறந்துபட்டான். அவன், மறவன் மட்டுமன்று; பாணர், பொருநர் முதலிய இசைக் கலைஞர்களான சுற்றங்களைப் பாதுகாத்த புரவலனும் ஆவான். அவனுடைய இறப்புப் பாண்மக்களைச் செய்வதறியாத நிலைக்குக் கொண்டு சென்றது. சென்ற அந்நிலையை உரைப்பது கையறு நிலை என்னும் துறையாம்

    வெருவரும் வாளமர் விளிந்தோன் கண்டு
    கருவி மாக்கள் கையறவு உரைத்தன்று.

    (விளிந்தோன் = இறந்தவன்; கையறவு = துன்பம்)

    எடுத்துக்காட்டு வெண்பா:

    நாப்புலவர் சொல்மாலை நண்ணார் படைஉழக்கித்
    தாப்புலி ஒப்பத் தலைக்கொண்டான் - பூப்புனையும்
    நற்குலத்துள் தோன்றிய நல்லிசையாழ்த் தொல்புலவீர்
    கல்கொலோ சோர்ந்திலஎம் கண்.

    பாண் மாக்களைப் பல்காலும் புரந்த கரந்தையான் களத்தில் பட்டான். பட்ட அவனைக் கண்டு, உளநாளை இனிக் கழிப்பது யாங்ஙனம் எனப் பேதுறுகின்றனர்.

    சான்றாகக் காட்டப்படும் வெண்பா கூறுவதாவது: “பகைவர் படையைப் புலிபோலக் கலக்கிய வீரன் வீழ்ந்து கிடக்கிறான். அதைக் கண்டும் நம் கண்கள் இற்றும் வீழவில்லை. கண்ணீரும் சோரவில்லை. அவை கல்லோ!” ‘கல்லோ’ என்ற வினாத் தொடர், கையறவை உணர்த்துகின்றது.

    3.6.2 நெடுமொழி கூறல்

    தம்மைத் தாமே உயர்த்திக் கூறிக் கொள்ளும் மொழி நெடுமொழி எனப் பெறும்.

    • கொளுவின் பொருளும் கொளுவும்

    கரந்தை மன்னனுக்கு, அவனுடைய படை மறவன் ஒருவன் தான் போர்க்களத்தில் சிறந்து செயல்பட்ட பெருமையைத்தானே எடுத்துக் கூறுவது நெடுமொழி கூறல் என்னும் துறையாம்.

    மன்மேம் பட்ட மதிக்குடை யோனுக்குத்
    தன்மேம் பாடு தான்எடுத்து உரைத்தன்று.

    எடுத்துக்காட்டு வெண்பா:

    ஆளமர் வெள்ளம் பெருகின் அதுவிலக்கி
    வாளொடு வைகுவேன் யானாக - நாளும்
    கழிமகிழ் வென்றிக் கழல்வெய்யோய்! ஈயப்
    பிழிமகிழ் உண்பார் பிறர்.
    • வெண்பாவின் பொருள்

    அரேச! நான் ஒருவனே, வெட்சி மறவராகிய பகை வெள்ளம் மிக்குவருமாயின் அவ்வெள்ளத்தைக் கல் அணையாகி நின்று தடுத்து நிறுத்துவேன். என்னை ஒழிந்த பிற மறவர் எல்லாரும் நீ வழங்கும் கள்ளின் தெளிவை உண்டு உன்னொடும் இங்கேயே தங்கட்டும்.

    தனது வீரத்தைப் பெரிதும் மேம்படுத்துக் கூறும் கரந்தை மறவன் ஒருவன், பகைவர் பகையை எதிர்கொள்ளத் தான் ஒருவனே போதும் என்கின்றான் என்பது கருத்து.

    3.6.3 பிள்ளைப் பெயர்ச்சி

    பிள்ளை எனப்படுவது காரிப் பறவை. இது, சிலபோது போர்க்களத்தில் தீ நிமித்தம் காட்டும்.அதனை மனங்கொள்ளாமல், போரிட்டு வென்று ஆநிரையை மீட்பர் கரந்தையார். பிள்ளை விலக்கியும் (தடை செய்தும்) அதனை விலக்கியமையால் இத்துறை பிள்ளைப் பெயர்ச்சி எனப் பெயர் பெறுகின்றது.

    • கொளுவின் பொருளும் கொளுவும்

    ஆநிரையை மீட்கும் போரினைக் கரந்தை மறவன் ஒருவன் மேற்கொண்டான்; வெட்சி மறவர் புரியும் போரினைத் தாங்கினான். அப்போது, காரிப்புள் தீ நிமித்தம் காட்டியது. காட்டவும் அந்நிமித்தத்தைப் பொருட்டாகக் கொள்ளாமல் அதனைப் புறக்கணித்தான்; போரிட்டு நிரையை மீட்டான். மீட்ட அவனுக்குத் தார்மாலையணிந்த கரந்தை மன்னன் தண்ணளி செய்தான். தண்ணளி செய்ததை விளம்புவது பிள்ளைப் பெயர்ச்சி என்னும் துறையாம்.

    போர்தாங்கிப் புள்விலக்கியோனைத்
    தார்வேந்தன் தலையளித்தன்று.

    எடுத்துக்காட்டு வெண்பா :

    பிணங்குஅமருள் பிள்ளை பெயர்ப்பப் பெயராது
    அணங்குஅஞர்செய்து ஆள்எறிதல் நோக்கி - வணங்காச்
    சிலையளித்த தோளான் சினவிடலைக்கு அன்றே
    தலையளித்தான் தண்ணடையும் தந்து.
    • வெண்பாவின் பொருள்

    போர் புரியும் களத்தில் காரிப் பறவை தீ நிமித்தம் காட்டி விலக்கவும், அவ்விடத்தைவிட்டு நீங்காதவனாய், பகை மறவரை வெட்டி வீழ்த்தும் கரந்தை மறவனுக்குப் பார்த்த அந்த நாளிலேயே பரிசுப் பொருளாக மருத நிலத்தை அளித்தான் அரசன்.

புதுப்பிக்கபட்ட நாள் : 06-11-2017 14:38:34(இந்திய நேரம்)