தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

இளைஞர் சிறப்பு

  • 3.5 இளைஞர் சிறப்பு

    இளைய வீரன் ஒருவனின் செயல்களை அடுத்து வரும் மூன்று துறைகளும் கூறுகின்றன. அவை: ஆளெறி பிள்ளை, பிள்ளைத் தெளிவு, பிள்ளையாட்டு ஆகியவையாம்.

    3.5.1 ஆளெறி பிள்ளை

    ‘இளங்கன்று பயம் அறியாது’. இளமை, வளமையை உடையது. பிள்ளைமைத் தன்மையுடைய மறவன் பிள்ளை எனப்படுகின்றான். அவன், தன்னுடைய வளமை சான்ற வீரம் துணையாக மறவர் பிறரை எறிகின்றான் (வீழ்த்துகின்றான்) என்பதால், இத்துறை ஆளெறி பிள்ளை என்னும் பெயரைத் தாங்குகின்றது.

    • கொளுவின் பொருளும் கொளுவும்

    பின்னிட்டு ஓடி வருகின்ற கரந்தை மறவரை, மேலும் ஓடாதபடிக்கு எதிர்சென்று தடுத்து, இகழ்து கூறி, வெட்சி மறவர்கள் அத்துணைப் பேர்க்கும் தான் ஒருவன் மட்டுமே அஞ்சாது நின்று, அவர்களை வெட்டி வீழ்த்திய செய்தியைக் கூறுவது, ஆளெறி பிள்ளை என்னும் துறையாம்.

    வருவாரை எதிர்விலக்கி ஒருதானாகி ஆள்எறிந்தன்று.

    வெட்சியார்க்கு ஆற்றாது களத்தினின்றும் பிறர் திரும்பவும், ஒரு கரந்தை மறவன் மட்டும் திரும்பானாய்த் தான் ஒருவனாகிப் பகைவர்களை எறிந்தான்.

    3.5.2 பிள்ளைத் தெளிவு

    மேல் வருவதாகிய விளைவை எண்ணாமையே பெரும்பாலும் இளைஞர்களது இயல்பு. இது முன்னரும் கூறப்பெற்றது அல்லவா? பிள்ளை ஒருவன் போரில் புண்ணை ஏற்கிறான். ஏற்குமவனிடம் ‘விழுப்புண்பட்ட நாளே உற்ற வாழ்நாள்; படாத நாள் வீழ்நாள்’ என்ற தெளிவு பிறக்கின்றது. இத்தெளிவு காரணமாக, ஏற்ற புண்ணிற்கு மகிழ்ந்து ஆடுதல் பற்றிக் கூறுவதால் பிள்ளைத் தெளிவு என்ற குறியை இத்துறை பெறுகின்றது.

    • கொளுவின் பொருளும் கொளுவும்

    துடி என்னும் இசைக் கருவியின் கண்முகம் மகிழ்ந்து இசைக்கப்படுவதால் மிக்கு ஒலிக்கின்றது. ஒலிக்க ஒலிக்கப் போர்க்களத்தில் தான் ஏற்ற விழுப்புண்ணுக்கு மகிழ்ந்து கரந்தை மறவன் ஒருவன் ஆடுவதைக் கூறுவது பிள்ளைத் தெளிவு என்னும் துறையாம்.

    கண்மகிழ்ந்து துடிவிம்மப்
    புண்மகிழ்ந்து புகன்று ஆடின்று

    (கண் என்பது துடியின் மையப் பகுதியைக் குறிக்கிறது.)

    3.5.3 பிள்ளையாட்டு

    பிள்ளை + ஆட்டு = பிள்ளையாட்டு. பிள்ளை - முன்னர்க் கூறியபடி மேல் வரும் விளைவுக்கு அஞ்சாத பிள்ளைத் தன்மையை உடைய ஒரு கரந்தை மறவன் ஆடிய கூத்துப் பற்றியதாகலின் பிள்ளையாட்டு எனப் பெற்றது.

    • கொளுவின் பொருளும் கொளுவும்

    வெட்சி மறவராகிய பகைவரின் குடலை மாலையாகத் தனது வேலில் சூட்டி, அவ்வேலினைக் கீழ்மேலாகத் திருப்பி விருப்பமுடன் போர்க்களத்தே கரந்தை மறவன் ஆடியதை அறிவிப்பது பிள்ளையாட்டு எனும் துறையாகும்.

    கூடலர்குடர் மாலைசூட்டி
    வேல்திரித்து விரும்பிஆடின்று.
புதுப்பிக்கபட்ட நாள் : 06-11-2017 14:29:45(இந்திய நேரம்)