தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தமிழிலக்கண வகைகள்

  • 1.1 தமிழிலக்கண வகைகள்

    தமிழிலக்கணம் ஐந்து வகைப்படும் என்று சொல்வது ஒரு மரபுச் செய்தி. எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்கிற இவையே ஐந்து வகை இலக்கணங்கள் ஆகும். இவை ஐந்தையும் ஒன்றாகவோ, சிலவற்றைப் பற்றியோ அல்லது இவற்றுள் ஒரு வகையைக் குறித்தோ தமிழ் இலக்கண நூல்கள் இயற்றப் பெற்றுள்ளன. புலமை இலக்கணம் என்னும் ஆறாம் வகையும் சேர்ந்துள்ளது.

    1.1.1 யாப்பு இலக்கணம்

    பாடல்கள் எழுதுவதைப் பாட்டுக்கட்டுதல் என்று இன்றும் கிராமப்புறங்களில் கூறுகின்றனர். யாத்தல் என்னும் சொல்லுக்குக் கட்டுதல், பிணைத்தல், தளைத்தல் என்று பொருள். செய்யுளுக்குரிய உறுப்புகள் ஓர் ஒழுங்கமைதியோடு கட்டப்பெறுகின்றன. எனவே இது யாப்பு என்னும் சொல்லால் குறிக்கப்பட்டது. யா என்னும் வினையடிச் சொல்லிலிருந்து இச்சொல் வந்தது. செய்யுள் குறிப்பிட்ட ஓர் ஓசையைப் பெறும் வகையில் செய்யுள் உறுப்புகள் சேர்த்து அமைக்கப் பெறுகின்றன. இவை பற்றிய செய்திகளைத் தமிழ் யாப்பு இலக்கண நூலார் பேசி உள்ளனர்.

    • பல பெயர்கள்

    பாடப்படுவதற்குப் பாட்டு அல்லது பாடல் என்று பெயர். தமிழில் செய்யுள் என்பதற்குப் பல பெயர்கள் உள்ளன. யாப்பு, தூக்கு, தொடர், பாட்டு என்பன அவற்றுள் சில.

    • யாப்பிலக்கணம்

    குறிப்பிட்ட ஓர் ஓசை அமையும் வகையில், எழுத்து, அசை, சீர் முதலான யாப்பு உறுப்புகளைச் சேர்த்து அமைப்பதற்கு யாப்பிலக்கணம் என்று பெயர். இவ்வுறுப்புகள் தகுந்த முறையில் பிணைக்கப்படுவதால் இவ்விலக்கணத்தை யாப்பு எனும் பெயரால் குறித்தனர்.

    1.1.2 யாப்பிலக்கணப் பழமை

    வாய்மொழிப் பாடல்கள் வளர்ச்சி பெற்று மொழியின் அடிப்படை அலகுகளாகிய எழுத்து, சொல் முதலியவை உருப்பெற்ற காலத்தில் யாப்பிலக்கணம் தோன்றியிருக்க வாய்ப்பில்லை. மக்கள் வாழ்வியலைச் சார்ந்து பொருளிலக்கணம் தோன்றி அதனை வெளிப்படுத்துவதற்கு உரிய வடிவம் தேவைப்பட்ட போது, யாப்பு உருப்பெற்றிருக்கக் கூடும். வாய்மொழிப் பாடல்களே, கால வளர்ச்சியில், புலவர்களால் செப்பம் செய்யப் பெற்றதால் பாவகைகள் தோன்றியிருக்கக் கூடும். எவ்வாறாயினும், ஓசைகளின் அடிப்படையிலேயே செய்யுள் செய்வதற்குரிய யாப்பு இலக்கணம் தோன்றி வளர்ந்திருக்க வேண்டும்.

புதுப்பிக்கபட்ட நாள் : 07-09-2017 17:05:01(இந்திய நேரம்)