தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

யாப்பருங்கலக்காரிகை

  • 1.4 யாப்பருங்கலக்காரிகை

    ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக, தமிழ் யாப்புப் பயில்வோரால் பெரிதும் போற்றப்படும் ஒரு நூல் யாப்பருங்கலக்காரிகை. தொல்காப்பியத்திற்குப் பின் தோன்றிய யாப்பியல் நூல்களுள் இதுவே சிறப்புப் பெற்றது. காரிகை என்றே இந்நூல் குறிக்கப்படுகிறது.

    1.4.1 ஆசிரியர்

    யாப்பு பற்றித் தமிழில் தோன்றிய யாப்பருங்கலக்காரிகை நூலின் ஆசிரியர் அமிதசாகரர் என்பவராவார். இவர் பெயர் அமுதசாகரர், அமிர்த சாகரர் என்பனவாகவும் வழங்கப் பெற்றுள்ளது. இப்பெயர் கீழ்வரும் சொற்களால் உருவானது.

    அமித = அளவு கடந்த
    சாகரர் = கடல் என்னும் பெயரர்

    இதனை, ‘அளப்பரும் கடற்பெயர் அருந்தவத்தோனே’ என்னும் காரிகை நூலின் பாயிர அடியும் உறுதிப்படுத்தும். இவர் வரலாறு பற்றி ஏதும் சான்று கிடைக்கவில்லை. அருகக்கடவுளை இவர் வழிபட்டுள்ளார் என்பதை, பாயிர முதல் செய்யுளால் அறியலாம். இதனால் இவர் சமணர் என்று அறிகிறோம்.

    அமிதசாகரர் காலம் கி.பி. 10ஆம் நூற்றாண்டு. கி.பி. 11ஆம் நூற்றாண்டில் வீரசோழியம் எனும் நூலை இயற்றிய புத்தமித்திரனார் என்பவருக்குக் காலத்தால் முற்பட்டவர், இவர். யாப்பியலில் புலமை பெற்ற குணசாகரர் என்பவர் இந்நூலுக்கு உரை எழுதியுள்ளார். இவர் வரலாறு பற்றியும் ஏதும் சான்றுகள் கிடைக்கவில்லை.

    1.4.2 நூல் யாப்பும், அமைப்பும்

    யாப்பருங்கலக்காரிகை என்னும் நூல் கட்டளைக் கலித்துறை என்னும் யாப்பில் இயற்றப்பட்டுள்ளது. காரிகை என்னும் சொல்லுக்கே கட்டளைக் கலித்துறை என்று ஒரு பொருள் உள்ளது. இந்நூல் செய்யுள்கள் மகடூஉ முன்னிலையாக எழுதப்பட்டுள்ளன.

    • மகடூஉ முன்னிலை

    எதிரில் ஒரு பெண் இருப்பது போலவும், அவளை விளித்து அவளிடம் பேசுவது போலவும் எழுதும் முறைக்கு மகடூஉ முன்னிலை என்று பெயர். மகடூஉ என்பதற்குப் பெண் என்று பொருள். முன்னிலை என்பதற்கு முன்னிலையாக்கிப் பேசுவது என்று பொருள். காரிகை என்பது பெண் என்னும் பொருள்தரும் ஒரு சொல். எனவே, காரிகையை முன்னிலைப்படுத்திப் பேசுவதாக இந்நூல் செய்யுள்கள் அமைந்திருப்பதால் இந்நூலுக்குக் காரிகை என்றும் ஒரு பெயர் வழங்குகிறது. இந்நூல் செய்யுள்களையும் காரிகை என வழங்குவதுண்டு.

    • கட்டளைக் கலித்துறை

    இந்நூல் செய்யுள்கள் எல்லாம் கட்டளைக் கலித்துறை என்னும் யாப்பினால் ஆனவையே. கட்டளைக் கலி என்பதற்கு எழுத்தெண்ணிப் பாடப்படும் கலி யாப்பு என்று பொருள். துறை என்பது பா இனத்தின் ஒரு வகைக்குரிய பெயர்.

    எழுத்தெண்ணிப் பாடுகிறபொழுது ஒற்றெழுத்துகள் அனைத்தையும் விட்டுவிட்டு, உயிர் அல்லது உயிர்மெய் எழுத்துகளை மட்டும் எண்ணி எழுதுவது வழக்கம். ஒரு (செய்யுள்) அடி நேரசையில் தொடங்கினால் ஒற்று நீக்கி 16 எழுத்துகள் இருக்குமாறும், நிரையசை கொண்டு தொடங்கினால் ஒற்று நீக்கி 17 எழுத்துகள் இருக்குமாறும் பாடுவர். இதன்படி நான்கடிகள் உடைய ஒரு கலித்துறைச் செய்யுள் நேரசையில் தொடங்கினால் ஒரு செய்யுளில் மொத்தம் 64 எழுத்துகளும், நிரையசையில் தொடங்கினால் அச்செய்யுளில் மொத்தம் 68 எழுத்துகளும் இருக்கும்.

    யாப்பருங்கலக்காரிகையில் நேரசை கொண்டு தொடங்கும் செய்யுள்கள் இருபத்தியொன்றும், நிரையசை கொண்டு தொடங்கும் செய்யுள்கள் இருபத்து மூன்றும் உள்ளதாக அந்நூலின் உரை கூறுகிறது. ஆயினும், இன்று கிடைக்கும் அச்சு நூல்களில் அறுபது காரிகைகள் உள்ளன. மிகுதியாக உள்ள 16 செய்யுள்கள் உரையாசிரியரால் எழுதப்பட்ட உரைக்காரிகைகளாம்

    • காரிகை நூலின் அமைப்பு

    யாப்பருங்கலக்காரிகை மூன்று இயல்களை உடையது. நூல் அமைப்பைப் புரிந்து கொள்வதற்குக் கீழ்வரும் வரைபடம் உதவும்.

    முதல் இயலாகிய உறுப்பியலில் எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை ஆகிய செய்யுள் உறுப்புகள் பற்றிக் கூறப்பட்டுள்ளன.

    இரண்டாம் இயலாகிய செய்யுளியலில் வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா ஆகிய பாக்களுக்குரிய இலக்கணம் பேசப் பெற்றுள்ளது. இறுதியில் மருட்பா பற்றியும் கூறப்பட்டுள்ளது. நான்கு வகைப் பாக்களின் இனங்களும் கூறப்பட்டுள்ளன.

    ஒழிபியலில் முன் இரு இயல்களில் இடம்பெற்ற செய்திகளுக்கான ஒழிபுச் செய்திகள் தரப் பெற்றுள்ளன.

    • ஒழிபுச் செய்திகள்

    ஒழிபுச் செய்திகள் என்பன முன்னர்க் கூறப்பட்ட செய்திகளுக்கு வேறுபட்டு வருவனவும், அங்குக் கூறப்படாதனவும், அங்குக் கூறப்பட்டவற்றிற்கு மேலும் விளக்கம் தருவனவும் ஆன செய்திகள் எனலாம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 07-09-2017 18:23:37(இந்திய நேரம்)