தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

முதல் யாப்பிலக்கண நூல்

  • 1.2 முதல் யாப்பிலக்கண நூல்

    கிடைத்துள்ள தமிழ் நூல்களுள் தொல்காப்பியம் என்னும் இலக்கண நூலே காலத்தால் முந்தியது. அந்நூலின் மூன்றாவது அதிகாரமாகிய பொருளதிகாரத்தில் செய்யுளியல் என்பது எட்டாவது இயலாக அமைந்துள்ளது. இதில்தான் யாப்பிலக்கணச் செய்திகள் இடம் பெற்றுள்ளன. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட அந்நூலில் தொல்காப்பியர் தம் காலத்திற்கு முந்திய யாப்பியல் சிந்தனையாளர்களைப் பலவாறு குறிப்பிட்டுள்ளார். யாப்பறி புலவர், நல்லிசைப் புலவர், நூல் நவில் புலவர் என்பன போன்ற தொடர்களால் சுட்டியுள்ளார். எனவே, அவர் காலத்திற்கு முன்பிருந்தே யாப்பியற் சிந்தனை இருந்துள்ளது என அறியலாம். எனினும், தனிப்பட்ட ஒரு நூற் பெயரையோ, புலவர் பெயரையோ தொல்காப்பியர் குறிப்பிடவில்லை.

    இலக்கியத்தைக் கண்டு இலக்கணம் படைப்பது உண்டு. ஆகவே தொல்காப்பிய காலத்திற்கு முன்பே பல இலக்கியங்கள் இருந்திருக்கக் கூடும். அவற்றிலிருந்தே இலக்கணங்களை உருவாக்கியிருப்பர். இவ்வாறு சிந்தித்தால் தமிழில் பலநூறு ஆண்டுகட்கு முன்பிருந்தே செய்யுள் இலக்கியமும், அது சார்ந்த யாப்புப் பற்றிய சிந்தனையும் வளர்ந்து வந்துள்ளன என்பது தெளிவாகப் புலப்படும்.

    1.2.1 தொல்காப்பியச் செய்யுளியல் செய்திகள்

    தொல்காப்பியர் தம் நூலில் அக்காலத்தில் பயன்படுத்திய யாப்பு முறையை ஒட்டி ஏழு பெயர்களைக் குறிப்பிட்டுள்ளார்.

    1) பாட்டு
    2) உரை
    3) நூல்
    4) வாய்மொழி
    5) பிசி
    6) அங்கதம்
    7) முதுசொல்

    என்பன அவை. மேலும், செய்யுள் இயற்றுவதற்குத் தேவைப்படும் உறுப்புகளைத் தொல்காப்பியர் இரு தொகுதிகளாகக் கூறியுள்ளார்.

    முதல் பிரிவில் காணப்படும் 26 உறுப்புகள் வருமாறு:

    1) மாத்திரை
    2) எழுத்து
    3) அசை
    4) சீர்
    5) அடி
    6) யாப்பு
    7) மரபு
    8) தூக்கு
    9) தொடை
    10) நோக்கு
    11) பா
    12) அளவு
    13) திணை
    14) கைகோள்
    15) கூற்றுவகை
    16) கேட்போர்
    17) களன்
    18) காலம்
    19) பயன்
    20) மெய்ப்பாடு
    21) எச்சம்
    22) முன்னம்
    23) பொருள் வகை
    24) துறை
    25) மாட்டு
    26) வண்ணம்

    செய்யுளுக்கு அடிப்படையான உறுப்புகளும், செய்யுளின் பொருள் புலப்பாட்டுக்கு உதவும் உறுப்புகளும் இவற்றுள் இடம் பெற்றுள்ளன.

    அதே நூற்பாவில் இரண்டாவது பிரிவில் எண்வகை வனப்புகள் செய்யுள் உறுப்புகளாகத் தனியே சுட்டப்பெற்றுள்ளன. இவ்விரு பிரிவுகளிலும் சேர்த்து மொத்தம் 34 உறுப்புகள் செய்யுளுக்கு உரியனவாகக் கூறப்பெற்றுள்ளன.

    • எண்வகை வனப்புகள்
    1) அம்மை
    2) அழகு
    3) தொன்மை
    4) தோல்
    5) விருந்து
    6) இயைபு
    7) புலன்
    8) இழைபு

    வனப்பு என்பது அழகு என்று பொருள்படும். பல உறுப்புகள் ஒன்று சேர்ந்தபோது உருவாகும் செய்யுள் அழகு, அது.

    1.2.2 தொல்காப்பியச் செய்யுளியல் உரைகள்

    தொல்காப்பியர் கூறிய செய்திகள் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டன. ஆதலால் இவற்றின் பொருளை விளங்கிக் கொள்வதற்கு ஏற்பப் பலர் உரை எழுதியுள்ளனர். தொல்காப்பியச் செய்யுளியலுக்கு மூவர் எழுதிய உரைகள் முதன்மையானவை. இவர்களுள் இளம்பூரணர் என்பவர் காலத்தால் முற்பட்டவராவார். இவர் இவ்வியலுக்கு எளிமையாகவும், சுருக்கமாகவும், தெளிவாகவும் உரை எழுதியுள்ளார். நூல் முழுவதற்கும் உரை எழுதிய இளம்பூரணர் கி.பி.11-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். நூல் முழுமைக்கும் இவர் உரை உள்ளது.

    பேராசிரியர், நச்சினார்க்கினியர் என்பாரும் இவ்வியலுக்கு உரை எழுதிய உரையாசிரியர்களாவர். பேராசிரியர் எழுதிய உரை தொல்காப்பியப் பொருளதிகாரத்தின் பின் நான்கியல்களுக்கு மட்டுமே கிடைத்துள்ளது.

    நச்சினார்க்கினியர் பெரிதும் பேராசிரியர் உரையைப் பின்பற்றியே செய்யுளியலுக்கு உரை எழுதியுள்ளார். இவர் உரை, நூல் முழுமைக்கும் உளது.

    இளம்பூரணர் உரை தொல்காப்பியர் கால யாப்பியல் சிந்தனையுடன், இவர்கால யாப்பியற் சிந்தனைகளையும் சேர்த்து எழுதப்பெற்ற இயல்பினதாகும். பிற உரையாசிரியர்கள் இருவரும் தொல்காப்பியர் சிந்தனைகளே யாப்பியலுக்குப் போதுமானவை எனும் கருத்துடன் உரை செய்துள்ளனர். பாடத்தில் பின்னர்த் தேவைப்படும் இடங்களில் இவை பயன்படுத்தப் பெறும்.

    தன் மதிப்பீடு : வினாக்கள் - I
    1.
    யாப்பிலக்கணம் என்றால் என்ன?
    2.
    தொல்காப்பியருக்கு முன்பே தமிழகத்தில் யாப்பியல் சிந்தனையாளர் இருந்தனரா?
    3.
    தொல்காப்பியர் செய்யுள் உறுப்புகளாகக் கூறுவன எத்தனை?
    4.
    வனப்பு என்பது யாது? எத்தனை? இரண்டன் பெயர்களைத் தருக.
    5.
    நச்சினார்க்கினியர் எழுதிய தொல்காப்பிய உரை எவர் உரையைப் பெரிதும் பின்பற்றியுள்ளது?
புதுப்பிக்கபட்ட நாள் : 07-09-2017 17:34:43(இந்திய நேரம்)