Primary tabs
1.5 தொகுப்புரை
யாப்பிலக்கணம் என்பது செய்யுள் இலக்கணமாகும். தொல்காப்பியம் தொடங்கி இக்காலம் வரை யாப்பு நூல்கள் மட்டுமே இருபதிற்கு மேல் தோன்றியுள்ளன. இந்நூல்களை இயற்றியோர், எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்னும் ஐந்திலக்கண அமைப்பிலும், இவற்றுள் தனி ஒரு வகை அல்லது இரு வகை எனத் தம் விருப்பத்திற்கு ஏற்பவும் இலக்கண நூல்கள் இயற்றியுள்ளனர்.
இந்நிலையில் வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு சிந்தனைப் போக்குடன் இலக்கண நூலார் தம் நூல்களைப் படைத்துள்ளனர். தமிழில் இப்போக்கில் பல யாப்பு நூல்கள் தோன்றின. அவற்றுள் யாப்பருங்கலக் காரிகை என்னும் நூலைத் தமிழைப் பயில்வோர் மிகுதியாகப் பயின்றுள்ளனர்; இன்றும் பயின்று வருகின்றனர்.
யாப்பருங்கலக்காரிகை என்பது கி.பி.10ஆம் நூற்றாண்டில் தோன்றியது. இந்நூலுள் மூன்று இயல்கள் உள்ளன. இவற்றுள் செய்யுள் உறுப்புகள், செய்யுள்களின் இலக்கணம் ஆகியன விளக்கப் பெற்றுள்ளன. அடுத்து வரும் பாடங்களில் இவை பற்றித் தெளிவாக அறியலாம்.