தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பாட முன்னுரை

  • 4.0 பாட முன்னுரை

    இனிய மாணாக்கர்களே! முந்தைய பாடங்களில் செய்யுள் உறுப்புகள் ஆறனுள் முதல் மூன்று உறுப்புகளாகிய எழுத்து, அசை, சீர் என்பவற்றைப் பற்றிப் படித்தீர்கள். இந்தப் பாடத்தில் நான்காம் உறுப்பாகிய தளையைப் பற்றிப் படிக்க இருக்கின்றீர்கள்.

    `வட்டம்’ என்பது ஒருசொல், `செயலர்’ என்பது ஒரு சொல். இவ்விரு சொல்லும் தொடரும்போது `வட்டம் செயலர்’ என்று தான் வரல் வேண்டும். `வட்டம்’ என்பதன் ஈற்றிலமைந்த `ம்’ என்ற மெல்லெழுத்தை ஒலிக்க முயற்சி எடுத்துக்கொண்ட நாவாலும், உதடுகளாலும் உடனடியாகச் ’செயலர்’ என்பதன் முதலில் அமைந்த `ச்’ என்ற வல்லெழுத்தை உச்சரிக்க முடியவில்லை. ஆதலால், நாக்கு `வட்டம்’ என்பதன் இறுதியிலுள்ள `ம்’ என்ற ஒலியைக் கெடுக்கின்றது. ஒலிப்பதில் எளிமை வேண்டிக் கெடுத்த இடத்தில் `ம்’-க்கு மாறாக `ச்’ என்ற ஒலியை இட்டுக் கொள்கின்றது; `வட்டச் செயலர்’ என எளிமையாக ஒலிக்கின்றது. இச்செய்கையை எழுத்திலக்கணம் `புணர்ச்சி’ என்கின்றது; புணர்ச்சியின்போது நிகழும் மாற்றங்களைத் தோன்றல் - திரிதல் - கெடுதல் ஆகிய `திரிபு’ என்கின்றது; யாதொரு திரிபும் இல்லையெனின் `இயல்பு புணர்ச்சி’ என்கின்றது. சுருங்கச் சொன்னால், நிலைமொழியின் ஈற்றெழுத்தொடு வருமொழியின் முதலெழுத்து இயல்பு அல்லது திரிபு வகையில் இயைவது புணர்ச்சி எனலாம் போலத் தோன்றுகின்றது. இதுபோலவே, நின்ற சீரின் ஈற்றசையும் வரும் சீரின் முதலசையும் தம்முள் யாதோ ஒரு வகையில் கட்டுப்படுவது, தளை எனப்படுகிறது. ஒருவனும் ஒருத்தியும் திருமணம் என்னும் நிகழ்வால் கட்டுறுகின்றனர். கட்டுறுவதைக் குழூஉக்குறி போலக் ```கால்கட்டு’ப் போட்டுவிட்டேன் அவனுக்கு’’ - எனும் பெரியோரைக் காண்கின்றோமே!

    கட்டு, பந்தம், பிணைப்பு, தொடக்கு, தளை என்பன ஒரு பொருளை உணர்த்தி வரும் சொற்கள். உழவர்களிடம் இத்`தளை’ என்னும் சொல்லாட்சி மிகுதியாகவே உள்ளது. அவர்கள் கற்றையாகக் கட்டப்பட்ட நாற்று முடிச்சையும் `தளை’ என்பர். தளையளவு (ஒரு கட்டு) நாற்றினை நட்ட வயல்பரப்பையும் `தளை’ என்பர். இனி, யாப்பிலக்கணத்தார் கூறும் தளை குறித்த செய்திகளைப் பார்ப்போம்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2017 11:26:21(இந்திய நேரம்)