தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தொகுப்புரை

  • 4.5 தொகுப்புரை

    இப்பாடத்தின் வழி அறிந்து கொண்டனவற்றைத் தொகுத்துக் காண்போம்.

    தளை என்பது நான்காவது செய்யுளுறுப்பு.

    நின்ற சீரின் ஈற்றசையும் வரும் சீரின் முதலசையும் பந்தப்படுவது தளை.

    தளை ஏழு. இவ்வேழு தளைகளையும் ஒன்றிய தளை, ஒன்றாத தளை என்னும் வகையுள் அடக்கலாம்.

    ஒன்றிய தளைகள் நான்கு. அவை: நேர் ஒன்றாசிரியத்தளை, நிரை ஒன்றாசிரியத்தளை, வெண்சீர் வெண்டளை, ஒன்றிய வஞ்சித்தளை.

    ஒன்றாத தளைகள் மூன்று. அவை: இயற்சீர் வெண்தளை, கலித்தளை, ஒன்றாத வஞ்சித்தளை.

    இயற்சீர் வெண்தளை இரு அமைப்பில் வருகின்றது; ஒன்று, மா முன் நிரை என்று; மற்றொன்று, விளம் முன் நேர் என்று.

    பாக்களின் பெயரால் தளை வழங்கப்படுகின்றது. வெண்டளையை வெண்சீர் உண்டாக்கினால் வெண்சீர் வெண்டளை; இயற்சீர் உண்டாக்கினால் இயற்சீர் வெண்டளை.

    நின்ற சீரின் ஈற்றசையும் வந்த சீரின் முதலசையும் ஒன்றிவரின் ஒன்றிய தளை; ஒன்றாவிடின், ஒன்றாத தளை.

    ஆசிரியப்பாவுக்குரிய தளைகள் இரண்டு. ஒன்று, நேரொன்றாசிரியத் தளை மற்றொன்று, நிரையொன்றாசிரியத்தளை.

    வெண்பாவுக்குரிய தளைகள் இயற்சீர் வெண்டளையும் வெண்சீர் வெண்டளையுமாகிய இரண்டு.

    கலிப்பாவுக்குரிய தளை ஒன்றே. அது. கலித்தளை. அகவல்சீர், வெண்சீர், வஞ்சிச்சீர் என்று இருப்பதுபோலக் கலிச்சீர் என்ற ஒருவகைச்சீர் இல்லை.

    அசைச்சீர், இயற்சீர், பொதுச்சீர் எனப் பெயர் வந்தமைக்கான காரணங்கள் இவை என்பது.

    அசைச்சீரை, மாச்சீர், விளச்சீர் என வகைப்படுத்தி, இயற்சீர் என்றாகப் பாவித்து வரும் சீரின் முதலசையை நோக்கித் தளை காணல்.

    கண்ணிய பூவினத்தைக் காய்ச்சீராகக் கொண்டும், கனியொடு ஒக்கும் நிழல்சீர் என்றதைக் கொண்டும் தளைகளைக் காணல் வேண்டும்.

     

    தன் மதிப்பீடு : வினாக்கள் - II
    1.
    வெண்டளை எத்தனை வகைப்படும்?
    2.
    இயற்சீர் வெண்டளையை உண்டாக்கும் சீர் எது?
    3.
    வெண்சீர் வெண்டளையை உண்டாக்கும் சீர் எது?
    4.
    ஆசிரியத்தளையை உண்டாக்கும் சீர் எது?
    5.
    வஞ்சித்தளையை உண்டாக்கும் சீர் எது? அது, என்ன வாய்பாட்டினது?
    6.
    கலித்தளையை உருவாக்கும் சீர் எது? அத்தளை உண்டாக வருஞ் சீரின் முதலசை எவ்வாறு வரவேண்டும்?
    7.
    செய்யுளின் ஈற்றிலன்றி இடையில் நிரையசையும், நேரசையும் தனித்தனி ஒரு சீராக ஒரோவழி வந்தால் அவற்றை எவ்வாறு கொண்டு தளை காண வேண்டும்?
    8.
    பொதுச்சீரில் `பூ’ என முடிபவற்றையும், `நிழல்’ என முடிபவற்றையும் தளை காணும்போது எவ்வாய்பாட்டுச் சீரினவாகக் கருதுவர்?

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 11-09-2017 17:27:12(இந்திய நேரம்)