Primary tabs
4.1 தளை
`தளைதல்’ என்பது தொழிற்பெயர். இதன் முதனிலை அல்லது பகுதி `தளை’ ஆகும். இதன் பொருள் கட்டுதல், பிணைத்தல், யாத்தல் என்பனவாம். இதனை முன்னரும் பார்த்தோம்.
யாதானும் நாடாமால்
என்னும் போது எழும் இசைக்கோலம் (Rhythm) அல்லது ஒலிநடை வேறு.
செல்வப்போர்க் கதக்கண்ணன்
என்னும் போது தோன்றும் இசைக்கோலம் அல்லது ஒலிநடை அல்லது ஒலிலயம் வேறு. வேறுபட்ட ஒலிநடையைத் தோற்றுவதற்குக் காரணமாக அமைபவை எவை? முன்னர் நின்ற சீரும், நின்ற சீரை அடுத்துத் தொடர்ந்து வந்த சீரும்தாம். சொல்லப்போனால், சிறப்பாக இந்த இசைவேறுபாட்டினை ஏற்படுத்துவன நின்ற சீரின் ஈற்றசையும் வந்த சீரின் முதலசையுமே என்றுதான் சொல்ல வேண்டும்.
எனவேதான் யாப்பிலக்கணம், நின்றசீரின் ஈற்றசையோடு வந்த சீரின் முதல் அசை தளைந்து நிற்க இரண்டு சீர்களால் உருவாவதே தளை என்கின்றது.
சீர் இரண்டு - தட்டு நிற்றலின் தளையே
என்பது பழம்பாடல் அடி. தட்டு - தளைந்து.
மக்கள் அவர்பொருள் (குறள். 63)
இதன்கண் `மக்கள்’ என்பது நின்ற சீர். `அவர்பொருள்’ என்பது வந்த சீர். இவற்றின் ஈற்றசையும் முதலசையும் இணைகின்றன. இணையும்போது `மக்கள்’ என்ற நின்றசீர், நிரையசையை முதலாக உடைய `அவர் பொருள்’ என்னும் வரும் சீரை அவாவுகின்றது.
நன் மக்கள் பேறு (குறள். 60)
`மக்கள்’ என்பது `நன்மக்கள்’ என்றவாறு மேலும் ஓர் அசையைப் பெற்று மூவசைச்சீராக அமையுமாயின், செப்பலோசையை (வெண்பாவுக்குரிய ஓசை) உண்டுபண்ண, நேரசையை முதலாக உடைய சீரை அவாவுகின்றது (பேறு).
`நன்மக்கள்’ என்னும் இதுவே துள்ளல் ஓசையை (கலிப்பாவுக்குரிய ஓசை) உண்டாக்க நிரையசையை முதலில் பெற்ற மேலுமொரு மூவசைச்சீரை வேண்டுகின்றது / அவாவுகின்றது.
(எ-கா) `நன்மக்கள் அவாவினார்கள்’
இவற்றிலிருந்து நாம் அறிந்துகொள்வன யாவை? ஒன்று, சீர் இரண்டு குறிப்பிட்ட ஒலி ஒழுக்கில் ஒன்றை ஒன்று அவாவும் என்பது; மற்றொன்று, தளை உருவாக்கத்தில் நின்ற சீரின் ஈற்றசைக்கும் வந்த சீரின் முதலசைக்கும் பெரும்பங்கு உண்டு என்பது; பிறிதொன்று, ஓசையை உண்டாக்குவதில் சீர் ஒன்றில் அமைந்திருக்கும் அசைகளின் எண்ணிக்கையும் பங்கு வகிக்கின்றது என்பது.
(1)(2)(3)(4)`அகரமுதலஎழுத்தெல்லாம்ஆதி(5)(6)(7)பகவன்முதற்றேஉலகு’இதனில் `அகரம்’ என்பது நின்ற சீர். நின்ற சீர் என்னும் பெயர், வந்த சீரை நோக்கி வைத்தது ஆகும். ’முதல’ என்பது வந்த சீர். `எழுத்தெல்லாம்’ என்னும் வரும் சீரை நோக்க `முதல’ என்பது நின்ற சீர். ஆதி என்னும் வருஞ்சீரை நோக்க `எழுத்தெல்லாம்’ என்பது நின்ற சீர். `பகவன்’ என்னும் வரும் சீரை நோக்க, `ஆதி’ என்பது நின்ற சீர். பகவன் வந்த சீர். `முதற்றே’ என்ற வருஞ்சீரை நோக்கப் `பகவன்’ என்பது நின்ற சீர். `உலகு’ என்னும் வருஞ்சீரை நோக்க `முதற்றே’ என்பது நின்ற சீர். `உலகு’ என்பதனின் மேல் ஒரு சீர் இல்லாமையால் `உலகு’ என்பது நின்ற சீராகவில்லை. இவ்வாறே, `அகரம்’ என்பதன் முன் ஒரு சீர் இல்லாததால் அது வரும் சீராகவில்லை; நின்ற சீராகவே அமைகின்றது.
ஆக, ஒரு பாடலின் முதல் சீரும் இறுதிச்சீரும் தவிர மற்ற இடைநின்ற எல்லாச் சீர்களும் ஒருகால் நின்ற சீராகவும் ஒருகால் வந்த சீராகவும் கருதப்படத்தக்கவை என்பதும், இவ்வாறு கருதியே தளை காணப்பட வேண்டும் என்பதும், இதனால் தெரிய வருகின்றன.
இந்தப் பார்வையில், தளை என்பது, சீர்களின் தொடர் இயக்கத்தில் நின்ற சீர் என்றதன் ஈற்றசையும், வந்த சீர் என்றதன் முதலசையும் தளைந்து நிற்பது தளை என்ற விளக்கத்தைப் பெறமுடியும்.
உலகம் யாவையும்
இதனைப் பாருங்கள். இது, கம்பராமாயணக் கடவுள் வணக்கப் பாடல் தொடர். இதில் உலகம் என்பது நின்ற சீர். யாவையும் என்பது வந்த சீர்.
(அ)
நின்ற சீர்வந்த சீர்உ லக ம்கு குகு ஒஇணைக் குறில்தனிக் குறில் ஒற்றுநிரைநேர்யாவை யு ம்நெகு கு ஒதனி நெடில்இணைக் குறில் ஒற்றுநேர்நிரைபுளிமா (வாய்பாடு)கூவிளம் (வாய்பாடு)நேர் முன் நேர்
நின்ற சீரின் ஈற்றசையும் நேர் ; வந்த சீரின் முதலசையும் நேர். `நேர் முன் நேர்’ என ஒன்றுபட்டு (ஒன்றி) வருகின்றன. ஒன்றுதல் - பொருந்துதல்.
(ஆ)
நின்ற சீர்வந்த சீர்செல்வப்போர்க்கதக்கண்ணன்செ ல்வ ப்போ ர் க்கு ஒகு ஒநெ ஒ ஒதனிக் குறில் ஒற்றுதனிக் குறில் ஒற்றுதனி நெடில் ஈரொற்றுநேர்நேர்நேர்க த க்க ண்ண ன்கு கு ஒகு ஒகு ஒஇணைக் குறில் ஒற்றுதனிக் குறில் ஒற்றுதனிக் குறில் ஒற்றுநிரைநேர்நேர்தேமாங்காய் (வாய்பாடு)புளிமாங்காய்நேர் முன் நிரைஇதில் நின்ற சீரின் ஈற்றசை நேர்; வந்த சீரின் முதலசை நிரை. `நேர் முன் நிரை’ என வேறுபட்டு (ஒன்றாது) வருகின்றது.
இவ்வாறு ஒன்றியும் ஒன்றாதும் வருவதைக் கருதி, முன்னர்த் தளை என்பதற்கு அளித்த விளக்கத்துடன், `தளை என்பது சீர்களின் தொடர் இயக்கத்தில் நின்ற சீர் என்றதன் ஈற்றசையும், வந்த சீர் என்றதன் முதலசையும் ஒன்றியும் ஒன்றாதும் தளைந்து (பிணைந்து) நிற்பது தளை’ என்று கூறலாம் போலத் தோன்றுகிறது. மேலும், தளையை `ஒன்று தளை’ `ஒன்றாத் தளை’ என்று இருவகையாகவும் பகுக்கலாம் போலவும் தோன்றுகிறது அல்லவா? தோன்றவேதான், இலக்கண விளக்க ஆசிரியர் அமிதசாகரரை விடத் தெளிவாக,
தன்சீர் தனதோடு ஒன்றலும் உறழ்தலும்
என்றுஇரண்டு ஆகும் இயம்பிய தளையேஎனக் குறிப்பிட்டுள்ளார்.
இனிய மாணாக்கர்களே! நாம் ஒன்றிய தளை, ஒன்றாத தளை என்னும் வகைப்பாட்டில் வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்னும் நால்வகைப் பாக்களுக்கும் உரிய தளைகளைப் பற்றி, இனிப் படிப்போம்.
நால்வகைப் பாக்களுக்கும் உரிய தளைகள் மொத்தம் ஏழு. அவையாவன:
1. நேரொன்று ஆசிரியத்தளை [மா முன் நேர்]
2. நிரையொன்று ஆசிரியத்தளை [விளம் முன் நிரை]
3. இயற்சீர் வெண்தளை [மா முன் நிரை; விளம் முன் நேர்]
4. வெண்சீர் வெண்தளை [காய் முன் நேர்]
5. கலித்தளை [காய் முன் நிரை]
6. ஒன்றிய வஞ்சித்தளை [கனி முன் நிரை]
7. ஒன்றாத வஞ்சித்தளை [கனி முன் நேர்]
இந்த ஏழுவகைத் தளைகளும் இந்த இந்தப் பெயர்களைப் பெறக் காரணம் என்ன? காரணங்களைத் தெரிந்து கொள்வது நல்லது. தெரிவதற்கு முன்னால், நாம், சீர்களின் பெயர்களை முன் பாடத்தில் படித்தோம் அல்லவா? அவற்றை நினைவுகூர்தல் மிக நல்லதாகும். உரிய சொல் என்பது `உரிச்சொல்’ என்று மருவி வரும் என்பதையும், ஆசிரியப்பாவுக்கு உரிய சீர் `ஆசிரிய உரிச்சீர்’ என்றும், இயற்சீர் என்றும் வழங்கப்படும் என்பதையும், வெண்பாவுக்குரிய சீர் வெண்சீர் என்றும் வெண்பாச்சீர், வெள்ளை உரிச்சீர் என்றும் வழங்கப்பெறும் என்பதையும், வஞ்சிப்பாவுக்குரிய சீர் வஞ்சியுரிச்சீர் என்று வழங்கப்படும் என்பதையும், கலிப்பாவிற்கு என்று தனிவகைச்சீர் இல்லை; வெண்சீரே அதற்குச் சீர் என்பதையும் நினைவில் நிறுத்துங்கள். ஏனெனில், யாப்பிலக்கண நூலார் இந்தச் சீர்களை வைத்துக்கொண்டே தளைகளுக்குப் பெயரிடுகிறார்கள் என்பதற்காகவே ஆகும்.
- இயற்சீராகிய ஆசிரிய உரிச்சீர் நின்று அகவலோசையை உண்டாக்க வரும் சீருடன் பந்தப்படுவதால் ஆசிரியத்தளை;
- இயற்சீராகிய ஆசிரிய உரிச்சீர் நின்று வெண்பாவுக்குரிய செப்பலோசையை உண்டாக்க வருஞ்சீருடன் கட்டுண்ணுதலால் இயற்சீர் வெண்தளை;
- வெள்ளையுரிச்சீராகிய வெண்சீர் நின்று வெண்பாவுக்குரிய செப்பலோசையை உண்டுபண்ண வருஞ்சீருடன் தொடக்குறுதலால் வெண்சீர் வெண்தளை;
- வஞ்சியுரிச்சீர் நின்று வஞ்சிப்பாவுக்குரிய தூங்கலோசையை உண்டாக்க வருஞ்சீருடன் தொடர்புறுதலால் வஞ்சித்தளை;
- வெண்பாவுரிச்சீராகிய வெண்சீர் நின்று கலிப்பாவுக்குரிய துள்ளலோசையை எழுப்புவிக்க ஏற்ற வருஞ்சீருடன் பிணைப்புறுதலால் கலித்தளை (கலி - துள்ளல்)
என்று நால்வகைப் பாவுக்குரிய தளைகள் பெயர் பெறுகின்றன.
4.1.3 தளைகள் : பகுப்பும், அடங்கும் தளையும்
தளைகள் ஏழும் ஒன்றிய தளை ஒன்றாத்தளை என்ற இரண்டு பகுப்புகளுக்குள் அடங்குகின்றன. `ஒன்றிய தளை’ என்னும் பகுப்புக்குள் அடங்கும் தளைகள் நான்கு. அவை:
1. நேரொன்றாசிரியத்தளை
2. நிரையொன்றாசிரியத்தளை
3. வெண்சீர் வெண்தளை
4. ஒன்றிய வஞ்சித்தளை
ஒன்றாத தளை என்னும் இரண்டாம் பகுப்பில் அடங்குவன மூன்று தளைகள். அவை:
1. இயற்சீர் வெண்தளை
2. கலித்தளை
3. ஒன்றாத வஞ்சித்தளை