Primary tabs
1.2 பாவுக்குரிய அடியும் ஓசையும்
ஒரு பாவைப் பார்க்கும் போதே அதன் அடி அமைப்பும், ஓசையுடன் படிக்கும்போது அல்லது கேட்கும்போது அதன் ஒலி அமைப்பும் முதலில் நம் கவனத்தில் பதியும் அல்லவா ! அதனால்தான் பாக்களின் இலக்கணத்தைச் சொல்வதற்கு முன்னர் அவற்றிற்குரிய அடி அமைப்பையும் ஓசை அமைப்பையும் தெரிவித்துத் தொடங்குகிறார் காரிகை ஆசிரியர். ஓசை தொடர்பாக இங்கு ஒரு குறிப்பைக் கவனத்தில் கொள்ள வேண்டும். பல்வகைப்பட்ட பாக்களின் ஓசை நுட்பங்கள் பற்றிய இலக்கணத் தெளிவை இப்போது கிடைக்கும் நூல்களைக் கொண்டு பெற இயலவில்லை. உரையாசிரியரும் தெளிவுபடுத்தவில்லை. ஒரு பாவுக்கு அதன் தளை அமைப்பை மட்டுமே கொண்டு ஓசை இலக்கணம் கூறுகிறார் உரையாசிரியர். ஆகவே நாமும் அதனையே ஏற்கவேண்டியுள்ளது. இப்பாடத்தில் நாம் பயில இருக்கின்ற வெண்பா, ஆசிரியப்பா என்னும் பாக்களுக்குரிய அடிகளும் ஓசைகளும் யாவை என்பதை முதலில் காணலாம்.
அடிகள் குறளடி, சிந்தடி, அளவடி, நெடிலடி, கழிநெடிலடி என ஐந்து வகைப்படும் என்பதை அறிவீர்கள். இவற்றுள் வெண்பாவுக்குரிய அடி எது? வெண்பாவுக்குரிய அடி நாற்சீரடியாகிய அளவடி ஆகும். ஆயினும் வெண்பாவின் ஈற்றடி (இறுதி அடி) மட்டும் முச்சீரடியாகிய சிந்தடியாக அமையும். ஒரு வெண்பாவில் எத்தனை அடிகள் இருப்பினும் ஈற்றடி ஒழிந்த ஏனைய எல்லா அடிகளும் அளவடியாக வரும் என்பதனாலேயே நூற்பாவில் வெண்பாவின் அடி அளவடி எனக் குறிப்பிடுகிறார் காரிகை ஆசிரியர்.
வெண்பா அகவல் கலிப்பா அளவடி
(யாப்பருங்கலக் காரிகை, 21)
(எ.டு)
மனத்துக்கண் மாசில னாதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற(திருக்குறள், 34)
(ஆதல் = ஆகுக ; அனைத்து = அவ்வளவே ; ஆகுல நீர = ஆரவாரத் தன்மை உடையவை)
மேற்காட்டிய வெண்பாவில் ஈற்றடி சிந்தடியாகவும், ஏனைய அடி அளவடியாகவும் அமைந்திருப்பதைக் காணுங்கள்.
அகவற்பா எனப்படும் ஆசிரியப்பாவுக்குரிய அடியும் அளவடியே ஆகும். இவ்வாறு சொல்லப்பட்டாலும் இரண்டு வகை ஆசிரியப்பாக்களில் வேறுவகை அடிகளும் இடம்பெறும். நேரிசை ஆசிரியப்பாவில் ஈற்றயலடி (இறுதியடிக்கு முந்திய அடி) சிந்தடியாக வரும். இணைக்குறள் ஆசிரியப்பாவில் இடையே அளவடிகளோடு, இரண்டும் அதற்கு மேற்பட்டும் குறளடிகளும் சிந்தடிகளும் வரும். (குறளடி = இரண்டு சீர் அடி; சிந்தடி= முச்சீர் அடி)
(எ.டு)
செங்களம் படக்கொன் றவுணர்த் தேய்த்த
செங்கோல் அம்பின் செங்கோட் டியானைக்
கழல்தொடிச் சேஎய் குன்றம்
குருதிப் பூவின் குலைக்காந் தட்டேகுறுந்தொகை, 1)
(அவுணர் = அரக்கர் ; தேய்த்த = அழித்த; கோல் = திரண்ட; செங்கோட்டியானை = சிவந்த கொம்பையுடைய யானை ; கழல் தொடி = கழல்கின்ற வளையல், இறுக்கமில்லாதது ; சேஎய் = முருகன் ; காந்தட்டே = காந்தளை உடையது)
மேற்காட்டிய பா நேரிசை ஆசிரியப்பா ஆகும். அதன் ஈற்றயலடி சிந்தடியாகவும் ஏனைய அடிகள் அளவடிகளாகவும் அமைந்திருப்பதைக் காணுங்கள்.
(எ.டு)
நீரின் தண்மையும் தீயின் வெம்மையும்
சாரச் சார்ந்து
தீரத் தீரும்
சாரல் நாடன் கேண்மை
சாரச் சாரச் சார்ந்து
தீரத் தீரத் தீர்பொல் லாதே
(யாப்பருங்கலக் காரிகை, உரைமேற்கோள்)
(தண்மை = குளிர்ச்சி ; வெம்மை = சூடு; சார = நெருங்க ; கேண்மை = நட்பு, காதல் ; தீர்பு ஒல்லாதே = நீங்கிப் போகாது)
மேற்காட்டிய பா இணைக்குறள் ஆசிரியப்பா ஆகும். அதன் இடையிடையே குறளடியும் சிந்தடியும் இரண்டிரண்டு வந்திருப்பது காணுங்கள்.
வெண்பாவுக்குரிய ஓசை செப்பல் ஓசை எனப்படும். செப்பல் = (விடை கூறுதல்). ஒருவர் கேட்கும் வினாவுக்கு மற்றொருவர் விடைசொல்லும் போது ஒருவகை ஓசை அமைப்புத் தோன்றும்; அதுவே செப்பல் ஓசை. அறமுரைக்கும் சான்றோர்களிடம் மக்கள் தமது வாழ்வியல் தொடர்பாக வினவிய போது, அச்சான்றோர்கள் விடையளிப்பதற்காக வெண்பா யாப்பைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். அற நூல்களான திருக்குறள், நாலடியார் போன்ற பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் இவ்வுண்மைக்குச் சான்று.
வாய்மை எனப்படுவ தியாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்(திருக்குறள், 291)
என்னும் குறட்பாவில் ‘யாது எனின்’ என்ற வினாவைச் சொல்லி, அதன் பின் விடையைச் சொல்கிறார் வள்ளுவர். பல குறட்பாக்களில் வினாக்கள் வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ அமைந்திருப்பதை நீங்களே கண்டு அறியலாம். ஆக, விடையளிக்கும் ஓசை அமைப்பு வெண்பாவுக்குப் பொருத்தமானதென உணரலாம்.
முன்பே குறிப்பிட்டது போலத் தளை அமைப்பைக் கொண்டுதான் செப்பல் ஓசை விளக்கப்படுகிறது. செப்பல் ஓசை மூன்று வகைப்படும். அவை ஏந்திசைச் செப்பல், தூங்கிசைச் செப்பல், ஒழுகிசைச் செப்பல் என்பன ஆகும்.
- ஏந்திசைச் செப்பல்
ஒரு வெண்பா முழுமையும் வெண்சீர் வெண்டளை மட்டுமே அமைந்து வந்தால் அந்தப் பாவின் ஓசை ஏந்திசைச் செப்பல் ஓசை ஆகும்.
(எ.டு)
யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையும் கல்லாத வாறு(திருக்குறள், 397)
(ஆல் = அசை ;என் = ஏன்? ; சாந்துணையும் = சாகும் வரையும்)
காய்முன் நேர் வர அமைவது வெண்சீர் வெண்டளை என்பதை உறுப்பியலில் கற்றீர்கள். மேற்காட்டிய குறள் வெண்பாவில் முழுமையாக வெண்சீர் வெண்டளையே அமைந்திருப்பதைக் காணுங்கள். ஈற்றுச்சீர் தவிர மற்ற எல்லாச் சீர்களும் காய்ச்சீர்கள். அடுத்தடுத்து வரும் சீர்கள் அனைத்தும் நேரசையில் தொடங்குகின்றன. ஆகவே நின்றசீரும் வருஞ்சீரும் காய்முன் நேர் எனப் பொருந்திப் பாடல் முழுவதிலும் வெண்சீர் வெண்டளை மட்டுமே அமைந்துள்ளது. இவ்வாறு வருவதால் இப்பாடலின் ஓசை ஏந்திசைச் செப்பல் ஆகிறது.
- தூங்கிசைச் செப்பல்
ஒரு வெண்பா முழுமையும் இயற்சீர் வெண்டளை மட்டுமே அமைந்து வருவது தூங்கிசைச் செப்பல் ஓசை ஆகும். மாமுன் நிரையும், விளம் முன் நேரும் வருவது இயற்சீர் வெண்டளை.
(எ.டு)
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக(திருக்குறள், 391)
மேற்காட்டிய குறள்வெண்பாவில் ஈற்றுச்சீர் ஒழிந்த அனைத்துச் சீர்களும் இயற்சீர்களே. இச்சீர்களிடையே மாமுன்நிரை, விளமுன்நேர் என இயற்சீர் வெண்டளை மட்டுமே அமைந்திருப்பதைக் காணுங்கள். ஆகவே இப்பாடலின் ஓசை தூங்கிசைச் செப்பல் ஆகும்.
- ஒழுகிசைச் செப்பல்
ஒரு வெண்பாவில் இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை ஆகிய இரு வெண்டளைகளும் கலந்து வருவது ஒழுகிசைச் செப்பல் ஆகும்.
(எ.டு)
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு(திருக்குறள், 396)
(தொட்டனைத்து = தோண்டிய அளவிற்கு ;கற்றனைத்து = கற்ற அளவுக்கு)
மேற்காட்டிய வெண்பாவில் இயற்சீர்களும் வெண்சீர்களும் கலந்து வந்துள்ளன. 1, 2, 5, 6 ஆகியவை இயற்சீர்கள். 3, 4 ஆகியவை வெண்சீர்கள். ஆகவே இயற்சீர் வெண்டளையும் (1-2 ; 2-3 ; 5-6; 6-7) வெண்சீர் வெண்டளையும் (3-4; 4-5) கலந்து வந்துள்ளன. இவ்வாறு வருவதால் இப்பாடலின் ஓசை ஒழுகிசைச் செப்பல் ஆகும்.
ஆசிரியப்பாவின் ஓசை அகவல் ஓசை ஆகும். அகவல் என்பது அழைத்தல் என்னும் பொருள் தருவது ; மயிலின் ஓசையையும் குறிப்பது. ஏதோ ஒரு வகையில் ஆசிரியப்பாவின் ஓசையை அழைப்பு ஓசையாக நம் முன்னோர் குறித்துள்ளனர். அகவல் ஓசையும் ஏந்திசை அகவல், தூங்கிசை அகவல், ஒழுகிசை அகவல் என மூன்று வகைப்படும். ஆசிரியப்பாவில் இடம் பெறும் தளைகளின் அமைப்பைக் கொண்டே இவ்வகைகள் விளக்கப்படுகின்றன.
- ஏந்திசை அகவல்
மாமுன் நேர் என அமையும் நேரொன்றாசிரியத்தளை மட்டுமே இடம் பெறும் ஆசிரியப்பாவின் ஓசை, ஏந்திசை அகவல் ஓசை ஆகும்.
(எ.டு)
போது சாந்தம் பொற்ப ஏந்தி
ஆதி நாதற் சேர்வோர்
சோதி வானம் துன்னு வாரே(யாப்பருங்கலக் காரிகை, உரை மேற்கோள்)
(போது = பூ ;சாந்தம் = சந்தனம் ;பொற்ப = அழகாக ; ஆதிநாதன் = அருகக் கடவுள் ; துன்னுவார் = அடைவார்)
மேற்காட்டிய ஆசிரியப்பா முழுவதும் மாமுன்நேர் என்னும் அமைப்புடைய நேரொன்றாசிரியத் தளையால் அமைந்து வந்துள்ளது காண்க. ஆகவே இப்பாடலின் ஓசை, ஏந்திசை அகவல் ஆகும்.
- தூங்கிசை அகவல்
விளம் முன் நிரை என அமையும் நிரையொன்றாசிரியத் தளை மட்டுமே இடம் பெறும் ஆசிரியப்பாவின் ஓசை, தூங்கிசை அகவல் ஓசை ஆகும்.
(எ.டு)
அணிநிழல் அசோகமர்ந் தருள்நெறி நடாத்திய
மணிதிகழ் அவிரொளி வரதனைப்
பணிபவர் பவம்நனி பரிசறுப் பவரே(யாப்பருங்கலக் காரிகை, உரை மேற்கோள்)
(அவிரொளி = விளங்கும் ஒளி ; வரதன் = அருகன் ; பவம் = பிறப்பு)
மேற்காட்டிய ஆசிரியப்பாவின் சீர்களிடையே விளம்முன் நிரை என அமையும் நிரையொன்றாசிரியத்தளை மட்டுமே இடம் பெற்றுள்ளது. ஆகவே இதன் ஓசை, தூங்கிசை அகவல் ஆகும்.
- ஒழுகிசை அகவல்
நேரொன்றாசிரியத் தளை, நிரையொன்றாசிரியத் தளை என்னும் இருவகை ஆசிரியத் தளையும் விரவி, அவற்றுடன் பிறதளைகளும் கலந்து வருவது ஒழுகிசை அகவல் ஓசை ஆகும்.
(எ.டு)
குன்றக் குறவன் காதல் மடமகள்
வரையர மகளிர் புரையும் சாயலள்
ஐயள் அரும்பிய முலையள்
செய்ய வாயினள் மார்பினள் சுணங்கே(ஐங்குறுநூறு, 255)
(வரை = மலை ; அரமகளிர் = தெய்வப் பெண்கள் ; ஐயள் = வியக்கத் தக்கவள் ; செய்ய = சிவந்த; சுணங்கு = தேமல்)
மேற்காட்டிய ஆசிரியப்பாவில் குறவன் - காதல் (மாமுன்நேர்) - நேரொன்றாசிரியத் தளை; மடமகள் - வரையர (விளம்முன்நிரை) - நிரையொன்றாசிரியத் தளை; குன்றக் - குறவன் (மாமுன்நிரை) - இயற்சீர் வெண்டளை; வாயினள் - மார்பினள் (விளம்முன்நேர்) - இயற்சீர் வெண்டளை என இவ்வாறு இருவகை ஆசிரியத் தளைகளுடன் இயற்சீர் வெண்டளையும் விரவி (கலந்து) வந்துள்ளன. ஆகவே இப்பாடலின் ஓசை ஒழுகிசை அகவல் ஆகும்.