தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

ஆசிரியப்பாவின் பொது இலக்கணம்

  • 1.5 ஆசிரியப்பாவின் பொது இலக்கணம்

    நால்வகைப் பாக்களுள் இலக்கணக் கட்டுக்கோப்புகள் குறைவாக அமைந்து, கவிஞனின் மனப்போக்குக்கும் மொழிவழி வெளியீட்டுக்கும் இடைவெளி ஏற்படாதபடி அவனுக்கு அதிக உரிமையை வழங்குவது ஆசிரியப்பாவே ஆகும். இது அகவற்பா எனவும் வழங்கும். சங்க இலக்கியம், சிலப்பதிகாரம், மணிமேகலை,பெருங்கதை போன்ற காப்பியங்கள் ஆகியவற்றில் பெருமளவு இடம் பெற்றிருப்பது ஆசிரியப்பாவே ஆகும். இனி ஆசிரியப்பாவின் சீர், தளை, அடி, ஓசை போன்ற பொது இலக்கணங்களைக் காண்போம்.

    • சீர்

    ஆசிரியப்பாவில் ஆசிரிய உரிச்சீர்கள் (ஈரசைச் சீர்கள்) மிகுந்து வரும் ; பிற சீர்களும் கலந்துவரும். ஆனால் நிரைநடுவாகிய வஞ்சியுரிச்சீர்கள் (நிரையசையை நடுவில் கொண்ட வஞ்சியுரிச்சீர்கள் அதாவது கருவிளங்கனி, கூவிளங்கனி ஆகிய சீர்கள்) இரண்டும் ஆசிரியப்பாவில் வாரா.

    • தளை

    ஆசிரியப்பாவுக்குச் சிறப்பானவைகளாகிய நேரொன்றா சிரியத்தளை, நிரையொன்றாசிரியத்தளை     ஆகிய இரண்டும் மிகுந்துவரும்; பிற தளைகளும் கலந்து வரும்.

    • அடி

    ஆசிரியப்பா அளவடிகளால் அமையும். ஆயினும் நேரிசை ஆசிரியப்பாவின் ஈற்றயலடி சிந்தடியாக வரும்; இணைக்குறள் ஆசிரியப்பாவின் இடையே இரண்டும் பலவும் ஆகக் குறளடிகளும் சிந்தடிகளும் வரும்.

    ஆசிரியப்பாவின் அடிச்சிறுமை மூன்றடியாகும். அடிப்பெருமை புலவன் உள்ளக் கருத்தைப் பொறுத்தது. எத்தனை அடியும் வரலாம்.

    • தொடை

    ஆசிரியப்பாவில் பொழிப்பு மோனையும் (முதற்சீரிலும் மூன்றாம் சீரிலும் அமையும் மோனை), அடி எதுகையும் (அடிதோறும் முதற்சீரில் அமையும் எதுகை) வருவது சிறப்புடையதாகும். வேறுவகையான தொடைகளும் வரலாம். ‘மோனை என்பது முதல் எழுத்து ஒன்றி வருவது’ என்பதை அறிவீர்கள்.

    • ஓசை

    ஆசிரியப்பாவுக்குரிய ஓசை அகவல் ஓசையாகும். மேற்குறித்தவாறு சீர், தளை இலக்கணங்கள் பொருந்தி வரும் போது அகவல் ஓசை இயல்பாக அமையும்.

    • ஈறு

    ஆசிரியப்பா வகைகள் நான்கிலும் ஈற்றுச்சீர் ‘ஏ’ என முடியும். நிலைமண்டில ஆசிரியப்பா ‘என்’ என முடிவது சிறப்பானது. இவையல்லாமல் ஓ, ஈ, ஆய், ஐ என்னும் ஈறுகளையும் ஆசிரியப்பா பெறுவதுண்டு.

    இனி ஆசிரியப்பாவின் வகைகளை அறியலாம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 13-09-2017 17:00:00(இந்திய நேரம்)