Primary tabs
1.6 ஆசிரியப்பாவின் வகைகள்
நேரிசை ஆசிரியப்பா, இணைக்குறள் ஆசிரியப்பா, நிலைமண்டில ஆசிரியப்பா, அடிமறி மண்டில ஆசிரியப்பா என ஆசிரியப்பா நான்கு வகைப்படும். அடி அமைப்பு வேறுபாட்டின் அடிப்படையில் இவ்வகைகளுக்குப் பெயர்கள் அமைந்துள்ளன. இவற்றின் இலக்கணங்களைத் தனித்தனியே காணும்போது இவற்றின் பெயர்க் காரணத்தைப் புரிந்து கொள்வீர்கள்.
ஆசிரியப்பாவின் பொது இலக்கணங்களைப் பெற்று, ஈற்றயலடி சிந்தடியாக (முச்சீரடி)வருவதுநேரிசை ஆசிரியப்பா ஆகும் . ஆசிரியப்பாவுக்குரிய ஈறுகளுள் ஏகார ஈறு நேரிசை ஆசிரியப்பாவுக்குச் சிறப்பானதாகும். சங்க இலக்கியத்தில் பெரும்பாலான பாக்கள் நேரிசை ஆசிரியப்பாக்களே ஆகும். இயல்பான (நேரான) ஓசையுடையது என்னும் பொருளில் இப்பாவுக்கு இப்பெயர் அமைந்தது.
(எ.டு)
நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆரள வின்றே சாரல்
கருங்கோல் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே
(குறுந்தொகை, 3)(உயர்ந்தன்று = உயர்ந்தது ; ஆர்அளவின்று = பெரிய அளவையுடையது ; கோல் = கொம்பு ; தேன் = தேனடை)
இப்பாடல் ஈற்றயலடி முச்சீரடியாய் ஏகாரத்தில் முடிவதைக் காண்க. ஆசிரியப்பாவிற்குரிய தளையும் ஓசையும் அமைந்திருப்பதையும் காணலாம். ஆகவே இது நேரிசை ஆசிரியப்பா ஆகும்.
ஆசிரியப்பாவின் பொது இலக்கணங்களைப் பெற்று, முதலடியும் ஈற்றடியும் அளவடியாய் (நாற்சீரடி) இடையிடையே , இரண்டும் அதற்கு மேற்பட்டும் குறளடியும் (இருசீரடி)சிந்தடியும் (முச்சீரடி) வருவது இணைக்குறள் ஆசிரியப்பா ஆகும்.
இங்கே ‘குறள்’ என்னும் சொல் குறுகிய அடிகளாகிய குறளடி, சிந்தடி ஆகிய இரண்டையும் குறிக்கிறது. இணை = இரண்டு. ‘இரண்டு அல்லது அதற்கு மேல் குறுகிய அடிகளைக் கொண்டது’ என்பது பொருள்.
(எ.டு)
நீரின் தண்மையும் தீயின் வெம்மையும்
சாரச் சார்ந்து
தீரத் தீரும்
சாரல் நாடன் கேண்மை
சாரச் சாரச் சார்ந்து
தீரத் தீரத் தீர்பொல் லாவே
(யாப்பருங்கலக் காரிகை, உரைமேற்கோள்)மேற்காட்டிய பாடலில் முதலடியும் ஈற்றடியும் அளவடிகளாய் நிற்க, இடையடிகள் குறளடியும் சிந்தடியுமாக வந்திருப்பது காண்க.
எல்லா அடியும் அளவடிகளாக வருவது நிலைமண்டில ஆசிரியப்பா. ஆசிரியப்பாவின் பொது இலக்கணங்களைப் பெற்றிருப்பதில் ஏனைய ஆசிரியப்பாக்களைப் போன்றது இது. எனினும் என் என்னும் ஈற்றில் முடிவது நிலைமண்டில ஆசிரியப்பாவுக்குச் சிறப்பானது.
சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய காப்பியங்களில் உள்ள காதைகள் ஒவ்வொன்றும் ‘என்’ என முடியும் நிலைமண்டில ஆசிரியப்பாக்களாக அமைந்திருப்பதை இணைய நூலகத்தில் பார்த்துப் புரிந்து கொள்ளுங்கள்.
‘மண்டிலம்’ என்பது வட்டம் எனப் பொருள்படும். தொடங்கிய இடத்திலிருந்து தடையின்றி ஒரே சீராக வந்து தொடங்கிய இடத்திலேயே முடிவதுதானே வட்டம் ! நாற்சீரடியாகத் தொடங்கி, நாற்சீரடியாகவே மாற்றமில்லாமல் தொடர்ந்து நாற்சீரடியாகவே முடிவு பெறுவதன் காரணமாக இவ்வாசிரியப்பா நிலைமண்டில ஆசிரியப்பா எனப்பெயர் பெற்றது.
(எ.டு)
வேரல் வேலி வேர்க்கோட் பலவின்
சாரல் நாட செவ்வியை ஆகுமதி
யாரஃ தறிந்திசி னோரே சாரல்
சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கி யாங்கிவள்
உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே
(குறுந்தொகை, 18)(வேரல் = மூங்கில் ;செவ்வியை ஆகு = மணந்து கொள்ளும் விருப்பத்தைக் கொள் ; அறிந்திசினோர் = அறிவார்கள் ; கோடு = கொம்பு ; தவ = மிக ; காமம் = காதல்)
மேற்காட்டிய குறுந்தொகைப் பாடல் ஆசிரியப்பாவுக்குரிய தளை, ஓசை ஆகியவற்றைப் பெற்றிருப்பதையும், எல்லா அடிகளும் அளவடிகளாக அமைந்திருப்பதையும் காண்க. ‘என்’ என்று முடியாமல், ஈற்றில் ஏகாரம் வந்துள்ளது. ஏகாரம் நால்வகை ஆசிரியப்பாவுக்கும் பொது ஈறு ஆகும்.
1.6.4 அடிமறி மண்டில ஆசிரியப்பா
இதுவும் ஒரு ‘மண்டில’ ஆசிரியப்பாவே ஆகும். அதாவது எல்லா அடியும் அளவடியாக வரும். அவற்றுள் எந்த அடியையும் முதலடியாகவோ, இடையடியாகவோ, இறுதி அடியாகவோ மாற்றி வைத்துப் பார்த்தாலும் பாடலின் ஓசையோ பொருளோ கெடாது. அடிகளை மறித்து (இடம் மாற்றி) வைத்தாலும் ஓசையும் பொருளும் பிழைபடாது வருவதனால் இது அடிமறி மண்டில ஆசிரியப்பா என்னும் பெயரைப் பெறுகிறது.
(எ.டு)
சூரல் பம்பிய சிறுகான் யாறே
சூரர மகளிர் ஆரணங் கினரே
வாரலை எனினே யானஞ் சுவலே
சாரல் நாட நீவர லாறே
(யாப்பருங்கலக் காரிகை, உரைமேற்கோள்)(சூரல் = பிரம்புக் கொடி; சூர்அரமகளிர் = காட்டுத் தெய்வப் பெண்கள்; அணங்கினர் = அச்சம் தருவர் ; வாரலை = நீ வரவில்லை ; அஞ்சுவல் = அஞ்சுவேன் ; ஆறு = வழி)
மேற்காட்டிய பாடலில் எல்லா அடிகளும் அளவடிகளாக இருக்கின்றன ; எனவே அடிகளை முன் பின்னாக மாற்றிப் பார்த்தாலும் ஓசை கெடாது என்பது தெளிவு. பொருளும் கெடாது என்பது எவ்வாறு? பாட்டில் உள்ள அடிகளின் பொருள் அமைப்பே அதற்குக் காரணம். ஓர் அடியில் சொல்லவரும் பொருள் அந்த அடியிலேயே முடிவடைந்து விடுகிறது ; அடுத்த அடிக்குத் தொடர்வதில்லை.
- அடிகளின் பொருள் அமைப்பைப் பாருங்கள்
தலைவியைச் சந்திப்பதற்காக மலைப்பகுதியில் இரவில் பயணப்பட்டு வரும் தலைவனிடம், ‘இவ்வாறு வருவது தலைவிக்கு அச்சம் தருவதாக உள்ளது; எனவே விரைவில் அவனை மணம்செய்து கொள்’ என உணர்த்தும் முறையில் தோழியோ தலைவியோ பேசும் பேச்சு இது.
பிரம்புக் கொடிகள் பின்னிக் கிடக்கும் காட்டாறுகள் உள்ளன ; காட்டுப் பெண்தெய்வங்கள் மிகுந்த அச்சம் தருவன ; ஒருநாள் நீ வரவில்லை என்றால்கூட உனக்கு என்னநேர்ந்ததோ என அஞ்சுகிறேன் ; சாரல் நாடனே ! நீ வரும் வழி இன்னல்கள் நிறைந்துள்ளது.
அடிவரிசைப்படி மேலே தரப்பட்டுள்ள பொருளைப் பாருங்கள். அடிகளை எந்த வகையில் மாற்றிப் போட்டாலும் தலைவி அல்லது தோழி கூறும் பாடல் பொருள் மாறாது என்பதைப் புரிந்து கொள்வீர்கள். இவ்வாறு அமைந்திருப்பதால் இப்பாடல் அடிமறி மண்டில ஆசிரியப்பா ஆகும்.
இனி, ஆசிரியப்பா வகைகளின் இலக்கணம் கூறும் காரிகை நூற்பாவைக் காண்போம்.
கடைஅயற் பாதம்முச் சீர்வரின் நேரிசை ; காமருசீர்
இடைபல குன்றின் இணைக்குறள் ; எல்லா அடியும்ஒத்து
நடைபெறு மாயின் நிலைமண் டிலம் ;நடு வாதிஅந்தத் தடைதரு
பாதத் தகவல் அடிமறி மண்டிலமே (யாப்பருங்கலக் காரிகை, 28)பொருள் : ஈற்றயலடி முச்சீரடியாக வருவது நேரிசை ஆசிரியப்பா ; இடையே பல அடிகள் குறளடியாகவும் சிந்தடியாகவும் குறுகிவருவது இணைக்குறள் ஆசிரியப்பா; எல்லா அடிகளும் அளவடிகளாக ஒத்து வருவது நிலைமண்டில ஆசிரியப்பா; நடு, முதல், இறுதி என அடிகளை முன்பின்னாக மாற்றி வைத்துப் பார்த்தாலும் ஓசையோ பொருளோ கெடாதிருப்பது அடிமறிமண்டில ஆசிரியப்பா.