Primary tabs
-
1.3 வெண்பாவின் பொது இலக்கணம்
ஏனைய பாக்களை விட வரையறுத்த இலக்கணக் கட்டுக் கோப்புடையது வெண்பா. வெண்பாவுக்கு உரிய அல்லாத சீர்களோ தளைகளோ வெண்பாவில் இடம் பெற முடியாது. அவை இடம் பெற்றால் அந்தப் பாடல் வெண்பாவாகக் கொள்ளப்படாது. இத்தகைய கட்டுப்பாடு காரணமாகவே வெண்பாவை ‘வன்பா’ எனக் குறிப்பிடுவர் ; ‘வெண்பா புலவர்க்குப் புலி’ எனவும் கூறுவர். இனி, வெண்பாவின் பொது இலக்கணம் காண்போம். பாவில் அமைய வேண்டிய சீர்கள், தளைகள், அடிகள், தொடை அமைப்பு, ஓசை, பாவின் இறுதி ஆகியவற்றைத் தொகுத்துக் கூறுவதே பொது இலக்கணம்.
- சீர்
வெண்பாவில் வெண்பாவுரிச்சீரும் (காய்ச்சீர்) இயற்சீரும் (ஈரசைச் சீர்) வரும். ஈற்றுச் சீராக மட்டும் அசைச்சீர் (ஓரசைச்சீர்) வரலாம். இவை தவிர மற்ற சீர் எதுவும் வெண்பாவில் வராது.
- தளை
வெண்டளைகள் (இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை) மட்டுமே அமையும். வேற்றுத் தளைகள் வெண்பாவில் வாராது.
- அடி
வெண்பா அளவடிகளால் அமையும். ஈற்றடி மட்டும் சிந்தடியாய் வரும். ஏனைய அடி எதுவும் வராது.
வெண்பாவின் அடிச்சிறுமை (குறைந்த அடி எண்ணிக்கை) இரண்டடி. அடிப்பெருமை (அதிக அடி எண்ணிக்கை) பாடுவோன் உள்ளக் கருத்தின் அளவாகும். எத்தனை அடியும் வரலாம்.
- தொடை அமைப்பு - விகற்பம்
வெண்பா ஒரு விகற்பத்தாலோ பல விகற்பத்தாலோ வரும். விகற்பம் என்பது இங்கு எதுகை அமைப்பைக் குறிக்கும். ஒரு பாவில் எல்லா அடிகளிலும் எதுகை அமைப்பு ஒன்றாக இருந்தால் அது ஒரு விகற்பம்; பாவில் பல எதுகை அமைப்புகள் வந்தால் அது பல விகற்பம். வெண்பாவுக்குரிய எடுத்துக் காட்டுப் பாடல்களைப் பார்க்கும் போது விகற்ப இலக்கணம் உங்களுக்குத் தெளிவாகும்.‘எதுகை என்பது இரு சீர்களில் இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது’ என்பதை அறிவீர்கள் அல்லவா?
- ஓசை
வெண்பாவின் ஓசை செப்பலோசை ஆகும்.
- ஈறு
வெண்பாவின் ஈற்றுச் சீர் நாள், மலர் என்னும் வாய்பாடுகளையுடைய அசைச்சீராகவோ, காசு, பிறப்பு என்னும் வாய்பாடுகளையுடைய, குற்றியலுகரத்தில் முடியும் நேரீற்று இயற்சீராகவோ (மாச்சீர்) வரும். முற்றியலுகரத்தில் முடியும் நேரீற்றியற்சீரும் வரலாம். வேறு எவ்வகைச் சீரும் வெண்பா ஈற்றில் வராது.