Primary tabs
-
1.3 ஒலிகளின் பிறப்பு
தமிழில் உள்ள எல்லா ஒலிகளுக்கும் பொதுவான பிறப்பு முறை பற்றியும், ஒவ்வோர் ஒலிக்கான தனிப்பட்ட பிறப்புமுறை பற்றியும் தமிழ் இலக்கண நூலாரும், தற்கால மொழியியலாரும் கூறியுள்ளனர். மொழியியலார் தமிழில் உள்ள ஒலிகளின் பிறப்புமுறை பற்றிக் கூறும்போது, அறிவியல் முறையில் மேலைநாட்டு மொழியியலார் கூறும் ஒலிகளின் பிறப்பு முறையை அடிப்படையாகக் கொள்கின்றனர். எனினும் அவர்கள் தமிழ் இலக்கண நூலார் கூறும் கருத்துகளை அடியொற்றியே மேலைநாட்டார் கூறும் பிறப்பு முறையை விளக்கிக் காட்டுகின்றனர்.
1.3.1 ஒலிகளின் பிறப்பு - பொது இலக்கணம்
தொல்காப்பியர் தம்முடைய தொல்காப்பியம் என்னும் இலக்கணநூலில் உள்ள எழுத்ததிகாரத்தில் ‘பிறப்பியல்’ எனும் தலைப்பின்கீழ் ஒலிகளுக்கான பிறப்பு இலக்கணம் கூறுகிறார். இவர் கூறும் பிறப்பு இலக்கணத்தை இன்றைய மொழியியலார் பெரிதும் போற்றுகின்றனர். இன்றைய விஞ்ஞான வளர்ச்சியின் அடிப்படையில் ஒலிகளின் பிறப்பை ஆராய்ந்து பார்க்கும்போது தொல்காப்பியர் பல நூற்றாண்டுகளுக்கு முன் பிறப்பியலில் சொன்ன கருத்துகள் பெரும்பாலும் ஒத்துப் போகின்றன.
தொல்காப்பியர் தமது இலக்கண நூலில்,
உந்தி முதலா முந்து வளி தோன்றி,
தலையினும் மிடற்றினும் நெஞ்சினும் நிலைஇ,
பல்லும் இதழும் நாவும் மூக்கும்
அண்ணமும் உளப்பட எண்முறை நிலையான்
உறுப்புஉற்று அமைய நெறிப்பட நாடி,
எல்லா எழுத்தும் சொல்லுங் காலை
பிறப்பின் ஆக்கம் வேறுவேறு இயல
திறப்படத் தெரியும் காட்சி யான
(தொல்.எழுத்து.83)என்ற நூற்பாவில் ஒலிகளின் பொதுப்பிறப்பு இலக்கணம் கூறுகிறார்.
இந்நூற்பாவிற்கு உரை கூறவந்த நச்சினார்க்கினியர் எனும் உரையாசிரியர்.
“தமிழெழுத்து எல்லாவற்றிற்கும் பிறப்பினது தோற்றரவைக் கூறுமிடத்து, கொப்பூழ் அடியாகத் தோன்றி முந்துகின்ற உதானன் என்னுங் காற்றுத் தலையின்கண்ணும் மிடற்றின்கண்ணும் நெஞ்சின்கண்ணும் நிலைபெற்றுப் பல்லும் இதழும் நாவும் மூக்கும் அண்ணமும் என்ற ஐந்துடனே, அக்காற்று நின்ற தலையும் மிடறும் நெஞ்சுங் கூட எட்டாகிய முறைமையையுடைய தன்மையோடு கூடிய உறுப்புகளோடு ஒன்றுற்று இங்ஙனம் அமைதலானே, அவ்வெழுத்துகளது தோற்றரவு வேறுவேறு புலப்பட வழங்குதலை உடைய”
என்று கூறுகிறார்.
கொப்பூழ் அடியில் உதானன் என்ற காற்றுத் தோன்றி வருகின்றது என்பது இன்றைய அறிவியல் ஆராய்ச்சிக்கு மாறானது. நெஞ்சில் உள்ள சுவாசப்பையில் இருந்தே காற்றுப் புறப்படும். அக்காற்று மிடற்றின் ஊடாகச் சென்று வாய்க்கு அல்லது வாய்க்கும் மூக்குக்கும் வருகின்றது என இன்றைய மொழியியலார் கொள்வர். இக்காற்றுத் தலைக்கும் செல்கின்றது எனக் கூறும் தொல்காப்பியர், தலை என்று கூறியிருப்பது எதைப் பற்றி எனத் தெரியவில்லை. ஆனால் தலைக்கு இக்காற்றுச் செல்வதில்லை என்கின்றனர் இக்கால மொழியியலார்.
தொல்காப்பியர் கூறியதையே நன்னூலார், தமது நன்னூலில் பிறப்பின் பொதுவிதியாகக் கூறும்பொழுது தலையை உச்சி என்று கூறுகிறார்.
நிறைஉயிர் முயற்சியின் உள்வளி துரப்ப
எழும்அணுத் திரள்உரம் கண்டம் உச்சி
மூக்குஉற்று இதழ்நாப் பல்அணத் தொழிலின்
வெவ்வேறு எழுத்து ஒலியாய் வரல் பிறப்பே
(நன்னூல்.74)தலை மிடறு, நெஞ்சு என்னும் இடங்களில் நிலைபெற்று என்று தொல்காப்பியர் கூறுகிறார். ஆனால் நன்னூலார் இம்மூன்றுடன் மூக்கையும் சேர்த்து நான்கு ஆக்குகிறார்.
நன்னூலாரே தமது அடுத்த நூற்பாவில் உயிர் எழுத்துகளுக்கும் இடையினத்திற்கும் இடம் கழுத்தாகும், மெல்லினம் மூக்கை இடமாகப் பொருந்தும், வல்லினம் மார்பை இடமாகப் பெறும் என்று கூறுகிறார். ஆதலால் அவரும் உச்சியை ஏன் கூறினார் எனத் தெரியவில்லை. தொல்காப்பியர் கூறி இருப்பதனால் அவரும் கூறி இருக்கலாம் என்பர்.
அவ்வழி
ஆவி இடைமை இடம் மிடறு ஆகும்;
மேவும் மென்மை; மூக்கு உரம் பெறும் வன்மை
(நன்னூல்.75)உள்ளே இருந்து எழும் மூச்சுக்காற்றானது மிடற்றின் (கழுத்து) முயற்சியால் வாயின் வழியாக எந்த விதமான தடையுமின்றி வெளிப்படுவதால் பிறக்கின்ற ஒலிகள் உயிர் ஒலிகள் ஆகும் என்று இக்கால மொழியியலார் உயிர் ஒலிகளின் பிறப்புப் பற்றிக் குறிப்பிடுகின்றனர்.
தொல்காப்பியர் உயிரெழுத்துகளின் பிறப்பைப் பற்றிக் கூறும்போது, ‘பன்னிரண்டு உயிர் எழுத்துகளும் மிடற்றின்கண் பிறந்த காற்றால் ஒலிக்கும்’ என்று கூறுகிறார். இக்கருத்தை அவர்,
அவ்வழி
பன்னீர் உயிரும் தம் நிலை திரியா
மிடற்றுப் பிறந்த வளியின் இசைக்கும்
(தொல். எழுத்து. 84)என்ற நூற்பாவில் குறிப்பிடுகின்றார். எனவே உயிரொலிகளின் பிறப்புப் பற்றித் தொல்காப்பியரும் இக்கால மொழியியலாரும் குறிப்பிடும் கருத்துகள் பெரிதும் ஒத்தே காணப்படுகின்றன எனலாம்.
தன் மதிப்பீடு : வினாக்கள் - I