Primary tabs
-
1.4 உயிர் ஒலிகளின் பாகுபாடு்
மொழியியலார் தமிழில் உள்ள ஒலிகளை அவை பிறக்கும் முறையை அடிப்படையாகக் கொண்டு அவற்றை முன் அண்ண உயிர் ஒலிகள், பின் அண்ண உயிர் ஒலிகள், முன் இடை உயிர் ஒலிகள், பின் இடை உயிர் ஒலிகள், தாழ் நடு உயிர் ஒலிகள் என ஐந்து வகையாகப் பாகுபடுத்தி விளக்குகின்றனர். அவர்கள் விளக்கிக் கூறும் கருத்துகளை ஈண்டுக் காண்போம்.
1.4.1 முன் அண்ண உயிர் ஒலிகள் (Front Vowels)
நாக்கானது (tongue) வாயினுள் மேற் சென்றும், தாழ்ந்தும், முன்னும், பின்னும் நகர்ந்தும் மிடற்றிலிருந்து வரும் காற்றினை ஒரு குறிப்பிட்ட ஒலியாக வெளிக்கொண்டு வருகிறது. இதனால் நாக்கினை ‘king of organ’ என்று மொழியியலார் கூறுவர். ஏனெனில் உயிர் ஒலிகள் மொழிக்கு உயிர் போன்றனவாகும். அப்படிப்பட்ட உயிர் ஒலிகளைச் சரிவர உச்சரிக்க நாக்கின் பங்கு பெரிதும் பயன்படுகிறது. அவ்வாறு நாக்கானது மேல் எழுந்து முன்பக்கமாக அமைந்து, ஒலியைத் தடையின்றி வெளிக்கொண்டு வருகிறது. இதுவே முன் அண்ண உயிர் ஒலியாகும். இதனை இ என்பர். ‘இ’ எனும் உயிர் ஒலியினை வெளிக்கொண்டு வரும்போது வாயின் இதழ்கள் குவியாமல் (unrounded lips) இருக்கின்றன. இதே ‘இ’ எனும் உயிர் ஒலியை சற்று நீட்டி ஒலித்தால் அதனை ஈ என்பர். இவ் ‘இ, ஈ,’ என்னும் இரு உயிர்களும் ஒரே இடத்தில் பிறக்கின்றன. ஆனால் ‘இ’ குறில் ஆகும். ‘ஈ’ நெடில் ஆகும். இ, ஈ எனும் இரு உயிர் ஒலிகளை ‘Velar Vowels’ என்று மொழியியலார் கூறுவர். ‘இ’ என்பதைக் குறுகிய உயிர்ஒலி (Short Vowel) என்றும் ‘ஈ’ என்பதை நெடிய உயிர்ஒலி (Long Vowel) என்றும் மொழியியலார் அழைப்பர்.
1.4.2 பின் அண்ண உயிர் ஒலிகள் (Back Vowels)
பின் அண்ண உயிர் ஒலி எனப்படுவது உ ஆகும். இவ் ‘உ’ எனும் உயிர் ஒலியை வெளிக் கொண்டுவர நாக்கானது வாயில் மேல் எழுந்து பின்னோக்கிப் போகின்றது. அந்த நிலையில் உச்சரிக்கும்போது இதழ்கள் குவிந்து (rounded lips) இருப்பதை உணரலாம். இவ்வொலியைச் சற்று நீட்டி ஒலித்தால் ஊ எனும் நெடிய உயிர் ஒலி பிறக்கிறது. உ, ஊ இரண்டு உயிர் ஒலிகளும் ஒரே இடத்தில் பிறப்பதை உச்சரிக்கும்போது நம்மால் உணர முடிகிறது. இங்கு ‘உ, ஊ’ எனும் உயிர் ஒலிகளை ‘labial vowels’ என்று மொழியியலார் கூறுவர். ‘உ’ என்பதைக் குறுகிய உயிர் ஒலி (short vowel) என்றும் ‘ஊ’ என்பதை நெடிய உயிர் ஒலி (long vowel) என்றும் மொழியியலார் அழைப்பர்.
1.4.3 முன் இடை உயிர் ஒலிகள் (Front-Mid Vowels)
நாக்கானது வாயினுள் கீழிலிருந்து சற்றுமேல் எழுந்து வாயின் முன்னுக்கு நகர்ந்து காற்றினைத் தடையில்லாமல் ஒலிக்கச் செய்யும்போது எ என்னும் உயிர் ஒலி பிறக்கிறது. அவ்வாறு உச்சரிக்கும்போது நாக்கானது மிக உயரத்தில் இல்லாமலும் தாழ்ந்த நிலையில் இல்லாமலும் இடையில் நின்று இருப்பதால் இதை இடை உயிர் ஒலி (mid vowel) என்பர் மொழியியலார். இது போன்ற சூழ்நிலையில் இதழ்கள் குவியாமல் இருக்கின்றன. ‘இ’ என்பதையே சற்று நீட்டி ஒலித்தால் ஏ எனும் நெடிய உயிர் ஒலி கிடைக்கிறது என்பர் மொழியியலார். ஆனால் தொல்காப்பியர், இகரத்துடன் (இ) எகரத்தை (எ) இணைத்து அவை இரண்டனுக்கும் ஒரே பிறப்பு முறை கூறுகிறார். ஏனெனில் இகர உயிர் ஒலி பிறக்கும் இடத்திற்குச் சற்றுக் கீழே ‘எ’ என்னும் உயிர் ஒலி பிறக்கிறது.
1.4.4 பின் இடை உயிர் ஒலிகள் (Back Mid Vowels)
‘ஒ’ எனும் உயிர் ஒலி, வாயினுள் நாக்கானது சற்றுக் கீழிலிருந்து மேல் எழும்போது பிறக்கிறது. அந்த நிலையில் நாக்கானது சற்றுப் பின்னுக்குத் தள்ளப்படுகிறது. இது போன்ற நிலையில் இதழ்கள் குவிந்து காணப்படுகின்றன. இவ்வொலியைச் சற்று நீட்டி ஒலித்தால் ஓ எனும் நெடிய உயிர் ஒலி கிடைக்கிறது. ஆனால் தொல்காப்பியர் உகரத்துடன் ஒகரத்தை இணைத்து இரண்டுக்கும் ஒரே பிறப்பு முறை கூறுகிறார். ஏனெனில் உகர உயிர் பிறக்கும் இடத்திற்குச் சற்றுக் கீழே ஒகரம் பிறக்கிறது.
1.4.5 தாழ் நடு உயிர் ஒலிகள் (Low Centre Vowels)
நாக்கானது வாயினுள் தாழ்ந்த நிலையிலேயே நின்று அதிலும் நடுவினுள் இருந்து ஒலியை எழுப்புகிறது. இவ்வுயிர் ஒலியை அ என்பர். இவ் அகர ஒலியை உச்சரிக்கும்போது இதழ்கள் குவிவது கிடையாது. இவ் உயிர் ஒலியைச் சற்று நீட்டித்து ஒலித்தால் ஆ என்னும் நெடில் உயிர்ஒலி கிடைக்கிறது.