Primary tabs
-
1.6 உயிர் ஒலிகளின் மற்றொரு பாகுபாடு
உயிர் ஒலிகளை நாவின் முயற்சி அடிப்படையில் மொழியியலார் முன் அண்ண உயிர் ஒலிகள் முதலான ஐந்து வகையாகப் பாகுபடுத்திக் கூறியதை இதுகாறும் விரிவாகப் பார்த்தோம். உயிர் ஒலிகளின் பிறப்பிற்கு (உச்சரிப்பு முறைக்கு) நாவின் முயற்சியோடு, இதழ்களின் முயற்சியும் தேவைப்படுகிறது. எனவே இதழ்களின் முயற்சி அடிப்படையிலும் உயிரொலிகளை ஐந்துவகையாக மொழிநூலார் பாகுபடுத்திக் காட்டுகின்றனர். அப்பாகுபாடு வருமாறு:
இ, ஈ- முன் உயர் இதழ் குவியா உயிர் ஒலிகள் (High Front Unrounded Vowels)எ, ஏ- முன் இடை இதழ் குவியா உயிர் ஒலிகள் (Mid Front Unrounded Vowels)அ, ஆ- கீழ் அடி இதழ்குவியா உயிர் ஒலிகள் (Low Unrounded Vowels)ஒ, ஓ- பின் இடை இதழ் குவி உயிர் ஒலிகள் (Mid Back Rounded Vowels)உ, ஊ- பின் உயர் இதழ் குவி உயிர் ஒலிகள் (High Back Rounded Vowels)இப்பாகுபாட்டை நோக்கினால், ‘அ, ஆ, இ, ஈ, எ, ஏ’ என்னும் ஆறு உயிர் ஒலிகளும் இதழ் குவியா முயற்சியால் பிறப்பன என்றும், ‘உ, ஊ, ஒ, ஓ’ என்னும் நான்கு உயிர் ஒலிகளும் இதழ்குவி முயற்சியால் பிறப்பன என்றும் அறியலாம்.