தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU Courses-சங்க காலத்தில் கிளைமொழிகள்

  • 6.3 சங்க காலத்தில் கிளைமொழிகள்

             சங்க காலத்தில் கிளைமொழிகள் இருந்தன என்பதற்குச் சான்றுகளை, அக்காலத்தில் தோன்றிய இலக்கியங்களில் காணலாம். சங்க     காலப் புலவர்கள் வடவேங்கடம், தென்குமரிக்கும் மற்றிருபுறம் கடலுக்கும் இடையே உள்ள பெருநிலப் பரப்பாகிய தமிழ் நாட்டில் உள்ள பல்வேறு வட்டாரங்களைச் சார்ந்தவர்கள். ஆதலால் அவரவர்கள் வட்டார வழக்கினை அவர்களுடைய பாடல்களில் காணலாம்.

        புறநானூற்றில் ஓசை என்னும் சொல் ‘பொரியல்’ என்ற பொருளில் வருகிறது.

        நெய் உலை சொரிந்த மை ஊன் ஓசை
             (புறநானூறு, 261:8)

        (நெய் காய்கின்ற உலையின்கண் சொரியப்பட்ட ஆட்டு இறைச்சியினது பொரியல். மை - கரிய ஆடு; ஊன்- இறைச்சி; ஓசை- பொரியல்.)

        கலித்தொகையில் செறு என்னும் சொல் ‘வயல்’ என்ற பொருளில் வருகிறது.

        நீர்ஆர் செறுவில் நெய்தலொடு நீடிய
                (கலித்தொகை, 75:1)

        (நீர் நிறைந்த வயலில் பூத்த நெய்தல் பூவொடு. செறு- வயல்.)

        சங்க காலக் கிளைமொழியில் ‘நான்கு’ என்பதை நால்கு என்றும், ‘ஒன்பது’     என்பதைத் தொண்டு என்றும் வழங்கியுள்ளனர். இக்கிளைமொழி வழக்குகள்     சங்க இலக்கியத்தில் புலவர்களால், செய்யுட் ஈட்டச் சொற்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டன.

        பால்புரை புரவி நால்கு உடன் பூட்டி
                (பொருநராற்றுப்படை, 165)

        (பரிசிலரை வழியனுப்பும்போது அவர்களைப் பால் போன்ற வெண்ணிறக் குதிரைகள் நான்கு பூட்டிய தேரில் ஏற்றி. நால்கு- நான்கு)

        ஆறு என, ஏழு என, எட்டு என, தொண்டு என
                (பரிபாடல், 3:79)

    (தொண்டு - ஒன்பது)

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 06:36:00(இந்திய நேரம்)