Primary tabs
-
6.2 கிளைமொழிப் பாகுபாடு
தமிழில் ஏறத்தாழ ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தே கிளைமொழி பற்றிய பாகுபாடு இருந்து வந்துள்ளது. அப்பாகுபாடு பற்றிப் பழங்காலத்தில் தொல்காப்பியரும், இடைக்காலத்தில் நன்னூலாரும் குறிப்பிட்டுள்ளனர்.
தற்காலத்தில் மொழியியலார் கிளைமொழியைப் பல்வேறு கோணங்களில் பாகுபடுத்தி விரிவாக விளக்கியுள்ளனர்.
6.2.1 பழங்காலத்தில் கிளைமொழிப் பாகுபாடு
தமிழில் கிளைமொழி பற்றிய முதல் குறிப்பைத் தருபவர் தொல்காப்பியர். அவர் தமது தொல்காப்பியத்தில் இரண்டாவதாக அமைந்துள்ள சொல்லதிகாரத்தில் செய்யுள் இயற்றுவதற்கு உரிமை படைத்த சொற்களாக இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என்னும் நான்கினைக் குறிப்பிடுகிறார்.
இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என்று
அனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே
(தொல்.சொல், 397)இந்நால்வகைச் சொற்களுள் திசைச்சொல் என்று தொல்காப்பியர் குறிப்பிடுவது கிளைமொழியே என்று தற்கால மொழியியலார் கூறுகின்றனர். தொல்காப்பியர் திசைச்சொல் பற்றி,
செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும்
தம்குறிப் பினவே திசைச்சொல் கிளவி
(தொல்.சொல், 400)என்று கூறுகின்றார். “செந்தமிழ் நாட்டைச் சேர்ந்த பன்னிரண்டு கொடுந்தமிழ் நாடுகளிலும், தாம் குறித்த பொருளை விளக்கி நிற்கும் சொற்கள் திசைச்சொல் எனப்படும்” என்பது இந்நூற்பாவின் பொருள்.
நால்வகைச் சொற்களுள் இயற்சொல் என்பது செந்தமிழ் நாட்டில் வழங்குவது; எல்லா நாட்டார்க்கும் பொருள் இயல்பாகத் தெரியக் கூடியது. ஆனால் திசைச்சொல் என்பது எல்லோருக்கும் பொருள் விளங்கக்கூடியது இல்லை; எந்த நாட்டில் வழங்குகிறதோ அந்த நாட்டில் உள்ளவர்களுக்கு மட்டுமே பொருள் தெரியக் கூடியது. இக்கருத்தையே தொல்காப்பியர் இந்நூற்பாவில் உணர்த்துகிறார்.
தொல்காப்பியர் இந்நூற்பாவில் செந்தமிழ் நாடு எது என்றோ, பன்னிரு கொடுந்தமிழ் நாடுகள் எவை என்றோ கூறவில்லை. இவை அவர் காலத்தில் கற்றறிந்த பலரும் அறிந்த ஒன்றாக இருந்திருக்கலாம்.
இடைக்காலத்தில் வாழ்ந்த நன்னூலாரும் நன்னூலில் தொல்காப்பியரை அடியொற்றி, கொடுந்தமிழ் நாடுகள் பன்னிரண்டு என்று கூறினார். ஆனால் அவரும் அந்நாடுகள் எவை என்று கூறவில்லை.
இடைக்காலத்தில் தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய இளம்பூரணர், சேனாவரையர், நச்சினார்க்கினியர், தெய்வச்சிலையார் ஆகியோரும், நன்னூலுக்கு உரை எழுதிய மயிலைநாதர், சங்கரநமச்சிவாயர் ஆகியோரும் அந்நாடுகள் எவை எனக் குறிப்பிடுகின்றனர். இவர்களுள் சங்கரநமச்சிவாயர் செந்தமிழ்நாடு என்பதை, சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரையைச் சூழ்ந்துள்ள பாண்டிய நாடு என்று கொண்டார். பண்டைக் காலத் தமிழ்ப் புலவர்கள் மதுரையைத் ‘தமிழ்கெழு கூடல்’ என்றே குறிப்பிட்டுள்ளனர். மதுரையைச் சூழ்ந்த பகுதி, பண்டைக் காலத்தில் பாண்டிய நாட்டின் வடபகுதி ஆகும். இப்பகுதியில் வழங்கிய தமிழைச் செந்தமிழாக - எல்லோருக்கும் விளங்கும் பொதுமொழியாகக் (Standard spoken language) கொண்டு, அதிலிருந்து வேறுபட்டு ஏனைய பன்னிரு தமிழ்ப் பகுதிகளில் வழங்கும் தமிழைக் கொடுந்தமிழ் அல்லது கிளைமொழி (dialect) என்று கொண்டனர். அவர்கள் குறிப்பிடும் பன்னிரு நாடுகள் வருமாறு:
1. தென்பாண்டி நாடு
2. குட்ட நாடு
3. குட நாடு
4. கற்கா நாடு
5. வேணாடு
6. பூழி நாடு
7. பன்றி நாடு
8. அருவா நாடு
9. அருவா வடதலை நாடு
10. சீத நாடு
11. மலாடு
12. புனல் நாடுஇந்நாடுகளில் வழங்கும் திசைச்சொற்களையும், அவற்றுக்கான செந்தமிழ்ச் சொற்களையும் உரையாசிரியர்கள் பலரும் குறிப்பிட்டுள்ளனர். பின்வரும் பட்டியல் உரையாசிரியர்கள் குறிப்பிடும் பன்னிரு கிளைமொழிப் பகுதிகள், அவற்றிற்குரிய தற்காலப் பெயர் கொண்ட பகுதிகள், அப்பகுதிகளில் பழங்காலத்தில் வழங்கிய திசைச்சொற்கள் அல்லது கிளைமொழிகள், அச்சொற்களுக்கு இணையாக அக்காலத்தில் வழங்கிய செந்தமிழ் அல்லது பொதுமொழிச் சொற்கள் ஆகியவற்றைக் காட்டும்.
கிளைமொழி அல்லது திசைச்சொல் வழங்கிய இடம்
தற்காலப் பெயர்
கிளைமொழி அல்லது திசைச்சொல்
பொதுமொழி அல்லது செந்தமிழ்ச்சொல்
1.தென்பாண்டி நாடுதிருநெல்வேலிப் பகுதி
பெற்றம்ஆ(பசு)சொன்றிசோறு2. குட்ட நாடு
கேரளாவில் கோட்டயம், கொல்லம் மாவட்டங்கள்தள்ளைதாய்3. குட நாடுவடமலபார்அச்சன்தந்தை4. கற்கா நாடுகோயம்புத்தூர் சார்ந்த மலைப் பகுதிகள்கையர்வஞ்சர்5. வேணாடுதிருவாங்கூரின் தென்பகுதிகிழார்தோட்டம்6. பூழி நாடுகோழிக்கோடு
பாழிசிறுகுளம்ஞமலிநாய்7. பன்றி நாடுபழனி மலை சூழ்ந்த பகுதி
செய்வயல்8. அருவா நாடுவட ஆர்க்காடு தென் ஆர்க்காடு செல்கல்பட்டு
கேணிசிறுகுளம்9. அருவா வடதலை நாடுதமிழகத்தின் வடக்குப் பகுதி
எகின்புளி10. சீத நாடுநீலகிரி
எலுவன்தோழன்இகுளைதோழி11. மலாடு*திருக்கோவலூர் சூழ்ந்த பகுதிஇகுளைதோழி12. புனல் நாடுசோழ நாடு
ஆய்தாய்*மலாடு- மலையமான் நாடு என்பதன் மரூஉ ஆகும். பண்டைக் காலத்தே இருந்த கடையெழு வள்ளல்களுள் ஒருவனான மலையமான் திருமுடிக்காரி என்பவன் ஆண்ட நாடு மலையமான் நாடு ஆகும்.
6.2.2 தற்காலத்தில் கிளைமொழிப் பாகுபாடு
தற்காலத்தில் மொழியியலார் தமிழ்நாட்டில் பேசப்படும் கிளைமொழியை,
வட்டாரக் கிளைமொழி (Regional dialect)
சமூகக் கிளைமொழி (Social dialect)
பார்வைக் கிளைமொழி (Eye dialect)
பொதுக் கிளைமொழி (Standard dialect)என்றாற் போலப் பலவாறு பாகுபடுத்துகின்றனர்.
கிளைமொழி தமிழ்நாட்டில் வழங்கும் இடம் பற்றி அதை ‘வட்டாரக் கிளைமொழி’ என்றும், அதைப் பேசுகின்ற மக்களின் சமூக நிலை பற்றிச் ‘சமூகக் கிளைமொழி’ என்றும் கூறுவர். கிளைமொழியை வரிவடிவத்தில் அளிக்கும்போது அதனைப் ‘பார்வைக் கிளைமொழி’ என்று கூறுவர். ஒரே மொழி வட்டாரத்திற்கு வட்டாரம், சாதிக்குச் சாதி, தொழிலுக்குத் தொழில் வேறுபட்டாலும் கூட, அவற்றிடையே ஒரு பொதுத்தன்மையைக் காணலாம். எழுத்துமொழியுடன் பெரும்பாலும் ஒத்துப் போகின்ற ஒரு கிளைமொழியைப் ‘பொதுக் கிளைமொழி’ என்று கூறுவர்.
மொழியியலார் கிளைமொழியை மேலே குறிப்பிட்டவாறு பாகுபடுத்தினாலும், வட்டாரக் கிளைமொழி, சமூகக் கிளைமொழி ஆகிய இரண்டை மட்டும் பலவாறு வகைப்படுத்தி விளக்குகின்றனர். அவற்றைப் பற்றி இப்பாட இறுதியில் தற்காலக் கிளைமொழி என்ற தலைப்பில் விரிவாகக் காண்போம்.
இனிக் காலந்தோறும் கிளைமொழிகள் எவ்வாறு இருந்தன? எவ்வாறு மாற்றம் அடைந்தன? என்பனவற்றைப் பற்றிப் பார்ப்போம்.
தன் மதிப்பீடு : வினாக்கள் - I