Primary tabs
-
3.0 பாட முன்னுரை
கவின்கலைகளுள் வாழ்விற்குப் பயனுள்ள கட்டடக் கலை, தக்கவாறு படிப்படியே சிறப்பதற்குப் பல உந்து சக்திகள் உள்ளன.
உலகியல் கட்டடக் கலையைவிட அருளியற் கட்டடக் கலை உயர்ந்தது என்பதைத் தெரிவிக்கும் வகையில் ஆலயக் கட்டடங்கள், அவற்றின் வகைகள் கூறப்படுகின்றன. பல்லவர்கள் தோற்றுவித்த கற்கோயில்கள் முதலியவை, பிற்காலத்து மன்னர்கள் பின்பற்றத்தக்கவையாக அமைந்தன என்பது சான்றுகளுடன் எடுத்துக் காட்டப்படுகிறது.
திருவதிகை வீரட்டானத்துக் கோயிலைக் கொண்டு பல்லவர்களின் கட்டடக் கலைத்திறமை விளக்கப்படுகிறது. திருச்சி மலைக்கோட்டைக் கோயில் பல்வகைக் கட்டடக் கூறுகளைக் கொண்டுள்ள சிறப்பும், மகேந்திரவர்மன் அமைத்த குடைவரைக் கோயிலும் கங்காதரர் சன்னிதியும் கொண்டுள்ள பெருமையும் வெளிப்படுத்தப் படுகின்றன.
சோழர் கால அரண்மனைச் சிறப்புக் கூறுவதால் இக்காலத்தில் எஞ்சியுள்ள தஞ்சை மராட்டியர் அரண்மனையுடன் ஒப்புநோக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.