Primary tabs
-
3.1 கட்டடக் கலை
கட்டடக் கலை படிப்படியே மன்னர் வாழ்தற்கேற்ற அரண்மனைகள், பெருஞ்செல்வர்கள் வாழ்தற்கேற்ற மாட மாளிகைகள் எனப் பலவகைக் கட்டடக் கலை உறுப்புகளுடன் வளர்ந்து கொண்டேயிருந்தது. அதற்கேற்பச் சிற்ப நூல்களும் தோன்றிக் கட்டடக் கலையில் ஈடுபட்ட கலைஞர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் விதிமுறைகளை வகுத்துக் காட்டின. இதே நேரத்தில், அருளியல் சார்பில் ஆலயங்களும் திருமடங்களும் சமய நெறி பரப்புதற்குத் தோன்றிக் கொண்டே இருந்தன.
3.1.1 சமய வளர்ச்சியும் கட்டடக் கலையும்
பண்டைக் காலத்தே இயற்கை வழிபாட்டிலிருந்தும், ஐந்திணைத் தெய்வ வழிபாட்டிலிருந்தும் தொடங்கிய சமயவுணர்வு காலந்தோறும் வளர்ச்சி அடைந்தது. அச்சத்தினின்றும் விடுபட மக்கள் கட்டிய கோயில், தத்துவச் சார்பாலும் கவின்கலைச் சார்பாலும் அருள்விளக்கமாகவும், கலை விளக்கமாகவும், ஞான சக்தியின் ஊற்றுக் களமாகவும், தத்துவச் சிந்தனைக்கு உந்து சக்தியாகவும் உள்ளது சிறத்தல் (Evolution) கொள்கைக்குச் சான்றாயிற்று. பொதுவாக, எழுதப்பட்ட ஆவணங்களுக்கு ஆவண அலுவலகத்தில் (Registrar’s Office) பதிவு செய்தபின் மதிப்பேற்படும்; அதுபோல அருளனுபவங் கொண்ட அருளாளர்களால் பாடல் பெற்ற நிலையில் திருக்கோயில்கள் மகத்துவம் (மூர்த்திகரம்) பெற்றன. அந்நிலையில், சிறுகோயில்கள் பலவும், மன்னர்கள் பலரின் ஆட்சிக் காலங்களில், பல்வேறு கோணங்களில் சிற்ப நூலுக்கு ஏற்பக் கட்டடங்களைப் பெற்றுப் பெருங்கோயில்களாயின.
வைணவச் சமயத் திருத்தலங்கள் பல தோன்றுவதற்கு வைணவ ஆசாரியப் பெருமக்கள் பெரிதும் துணை நின்றனர். பலரும் எளிதாக இறைவனைக் கண்டு தொழ, இறைவன் திருவுருவச் சிலையில் அர்ச்சாவதாரத்தில் (பூசை செய்வதற்கு உரிய திருஉருவம்) எழுந்தருளுவதே மிகச் சிறந்ததாகப் போற்றப்பட்டது. அந்நிலையில் அர்ச்சையும் ஆலயக் கட்டடக் கலைக்கு உந்து சக்தியாக உதவியுள்ளது.
3.1.2 அரசர்களும் கட்டடக் கலையும்
போர்க்களத்திற்குச் சென்று, மாற்றாரை வென்று பறித்த பொருள்களைக் கொண்டு ஆலயங்களைக் கட்டினர். முதலாம் இராசராசன் பெற்ற வெற்றியின் பயனாகத் தஞ்சாவூரில் இராசராசசேச்சுரம் என்ற பெரிய கோயிலும், முதலாம் இராசேந்திர சோழன் பெற்ற வெற்றியால் கங்கை கொண்டான் என்ற சிறப்புடன் கங்கை கொண்ட சோழேச்சுரம் என்ற கோயிலும் கட்டப்பட்ட விவரங்களை வரலாற்றில் எடுத்துக் காட்டாகக் கூறலாம்.
தம்மை வளர்த்துப் பெருமையுடன் வாழ்வித்த முன்னோர்களை நினைத்து, நன்றியின் அறிகுறியாக மன்னர் சிலர் கோயில்கள் கட்டினர் ; அவை பள்ளிப்படைக் கோயில்களாயின. புராணங்களும் இதிகாசங்களும் பரவிய நிலையில் மக்களின் பக்தியார்வம் பல ஆலயங்கள் தோன்றுவதற்கு உந்து (தூண்டு) சக்தியாகப் பயன்பட்டுள்ளது.