தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஆலயக் கட்டடங்கள்

  • 3.2 ஆலயக் கட்டடங்கள்

        மக்கள் தம் வாழ்க்கையில் ஒருவியத்தகு சக்தி தம்மை இயக்குகிறது, ஆட்டிப்படைக்கிறது என்று உணர்ந்ததும், அந்தச் சக்தியை இயற்கையினூடே கண்டும் வழிபடத் தலைப்பட்டனர். வாழும் பொழுது, தம்மை அறியாமல் தவறு செய்வதும் பிறகு திருத்துவதுமாகிய முறையில் ஒருவகைக் கல்வியையும் அனுபவத்தையும் மக்கள் கற்றுக் கொண்டே வந்தனர். எல்லாம் வல்ல அறிவுடையோனை வணங்குவதே தாம் கற்றதனால் ஆகும் பயன் என்பதைப் புரிந்து கொண்டனர். திருவள்ளுவரும்,

    கற்றதனால் ஆய பயன்என்கொல் வால்அறிவன்
    நற்றாள் தொழஅ ரெனின்
        (குறள் - 2)

    (வால் அறிவன் = தூய அறிவினையுடையவன் ; நற்றாள் = நல்லபாதங்கள்; தொழார் = தொழவில்லை)

    எனக் கூறிக் காட்டியதும் பொருத்தமாக அமைந்தது.

  • ஆலய வழிபாடு

  • ஆலயம் தொழுவது சாலவும் நன்று, கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற பழமொழிகளெல்லாம் மக்கள் ஆலயம் கட்டுதற்குக் கைகொடுத்து உதவின.

  • கோயில் - விளக்கம்

  •     கோயில் எனும் சொல்லில், ‘கோ+இல்’ எனப் பிரித்து, மன்னன் உறைவிடம் என்றும் ; பின்னர், நாட்டுக்கு மன்னனைப் போல், அனைத்திற்கும் தலைவனாகிய இறைவன் உறைவிடம் என்றும் பொருள் விரியும்.

  • ஆலயம் - விளக்கம்

  •     ஆலயம் என்பது ‘ஆ’ எனும் பசு (உயிர்), ‘லயம்’ (செம்மை) கொள்வதற்குரிய இடம் எனப் பொருள் தரும். ஏதோ ஆலயம் என்றதும் ‘மக்களின் வழிபாட்டுத்தலம்’ என்ற அளவில் பொருள் கொள்வது சரியன்று. ஆலயக் கட்டடங்கள் பரிணாம வளர்ச்சியில் பெரிதும் விரிவு பெற்றன. இவற்றுக்கெல்லாம் சிற்ப நூல்களும் ஆகமங்களும் வாஸ்து நூல்களும் வழிவகுத்தன. சிற்பநூல் விதிப்படி நிலத்திணைத் தேர்ந்து, தட்ப வெப்ப நிலைகளுக்கேற்பக் கட்டப்படும் ஆலயங்கள் நிலை குலைவதில்லை. முறைப்படி உறுதியான மூலப்பொருள்களைக் கொண்டு, தேர்ந்த தொழில் வல்லுநர்களால் தெய்வ வழிபாட்டுடன் கட்டப்படும் கட்டடங்கள் சமுதாயத்திற்கு மிகவும் பயன்படுகின்றன.

        ஆலயக் கட்டடக்கலை சமயவுணர்வின் உந்துதலால் தோன்றித் தத்துவக் களத்தில் வளர்ச்சி பெற்றுச் சமுதாய நலத்துக்காக - உயிரின் மேம்பாட்டுக்காக நின்று நிலைபெற வேண்டிய கவின்கலை எனலாம்.

    3.2.1 ஆலய மதிப்பு

        ஓர் ஆலயத்திற்குச் சிறப்பும் மதிப்பும் ஏற்படுவது, ஆலயத்திலுள்ள மூர்த்தியின் (இறைவன்) சிறப்பாலும், மூர்த்தி இருக்கும் இடத்தின் சிறப்பாலும், அங்குள்ள நீரின் சிறப்பாலும் அமையும். இதனை மனத்துட் கொண்டே தாயுமானவர் பராபரக்கண்ணியில்,

    மூர்த்தி தலம்தீர்த்தம் முறையாய்த் தொடங்கினர்க்கு
    வார்த்தைசொலச் சற்குருவும் வாய்க்கும் பராபரமே (156)

    எனக் கூறியுள்ளார். கோயிலுக்கு மதிப்பு, கட்டடங்களை விரிவுபடுத்திக் கொண்டு செல்வதால் மட்டும் கிடைத்து விடாது.

    3.2.2 ஆலய வகைகள்

        கோயிலின் உறுப்புகளாகக் கருவறை, கோபுரம், திருச்சுற்று, பலிபீடம், கொடிக்கம்பம், மதில் முதலிய பல உறுப்புகள் இருப்பினும், மிகச் சிறப்பினைக் கொண்டது கருவறை ஆகும். கருவறையின் மேலுள்ள விமான அமைப்பை, மனிதனுக்கு முகம் போன்றது எனக் கூறுவர்.

        விமானம் சதுரமாக அமைந்திருப்பின் ‘நாகரம்’ என்றும், வட்டமாக இருப்பின் ‘வேசரம்’ என்றும், ஆறு அல்லது எட்டுப்பட்டை அமைப்பிலிருப்பின் ‘திராவிடம்’ என்றும் ‘சில்பரத்னம்’, ‘மானசாரம்’ போன்ற சிற்ப நூல்கள் வகைப்படுத்தும். நாகரம் தேசத்தின் வட பகுதியிலும், திராவிடம் தென்பகுதியிலும், வேசரம் இடைப்பகுதியிலும் காணப்படுபவையாகக் கூறப்படும். திருநெல்வேலிப் பகுதியில் ஒரு கோயிலில் நாகர அமைப்பும், கங்கை கொண்ட சோழபுரம் கோயிலில் வேசர அமைப்பும், தஞ்சைப் பெரிய கோயிலில் திராவிட அமைப்பும் காணப்படுகின்றன என அறிஞர்கள் கூறுவர்.

புதுப்பிக்கபட்ட நாள் : 29-07-2017 17:36:39(இந்திய நேரம்)