தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Diploma Course - D05114-கோயில் அமைப்பின் வளர்ச்சி

  • 3.4 கோயில் அமைப்பின் வளர்ச்சி

        இலக்கியங்களின் வாயிலாகவும், வரலாற்றின் வாயிலாகவும் கோயில் கட்டடக் கலையின் வளர்ச்சியையும், பல்லவர்களின் பங்களிப்பையும் விரிவாக அறியலாம்.

    3.4.1 கோயில்களின் நிலை

        சங்கம் மருவிய காலத்திலும், களப்பிர மன்னர்களின் ஆட்சிக் காலத்திலும் (இருண்ட காலத்திலும்) தமிழகத்தில் ஆலயங்கள் வழிபாட்டிற்கேற்ப இருந்தன ; எனினும், செங்கல்லாலும் மண்ணாலும் மரத்தாலும் சுண்ணாம்பாலும் கட்டப்பட்ட நிலையில் கால வெள்ளத்தில் நிலைத்திருக்க இயலவில்லை. பல்லவர்களின் கலைத்திறனுக்குப் பிறகுதான், கட்டடக்கலைப் புரட்சி ஏற்பட்டதென்றே சொல்லலாம். மயிலை சீனிவேங்கடசாமி, “பல்லவ அரசர் காலம் வரையில், திருவுண்ணாழிகையும் இடைநாழிகையும் (கருவறையும் அர்த்த மண்டபமும்) ஆகிய கட்டடங்களே அமைக்கப்பட்டன. இவற்றைச் சூழ்ந்து வேறு மண்டபங்கள் பெரும்பாலும் அமைக்கப்படவில்லை” எனக் குறிப்பிடுகிறார்.

        கி.பி. 10 - ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு, சோழ அரசர்கள் கருவறையைச் சுற்றிலும் அர்த்த மண்டபத்துக்கு முன்பு இன்னொரு மகா மண்டபத்தையும் அமைத்தனர். ஏனென்றால், 10 - ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு நாயன்மார்கள் ஆழ்வார்கள் முதலிய மூர்த்தங்களை (திருவுருவச் சிலைகளை) அமைக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இவ்வாறு அகநாழிகையைச் சூழ்ந்து சுற்று மண்டபங்களை அமைத்தபடியினாலே, அக மண்டபங்கள் மத்தியக் கோயிலின் பார்வையையும் அழகையும் மறைத்து விட்டன. சில கோயில்களில் கருவறை விமானம் தெரியாதபடி பிற மண்டபங்கள் மறைத்து விட்டன எனக் குறிப்பிடுவது உண்மையாகும்.

    3.4.2 கோயில் வளர்ச்சியில் பல்லவர் கோயில்கள்

        பல்லவர் காலத்தில் எடுக்கப்பட்ட ஒற்றைக் கல்கோயில், குடைவரைக் கோயில், கட்டுமானக் கற்கோயில் ஆகியவை தமிழகக் கோயிற் கட்டடக் கலைக்குப் பெரிதும் துணை நின்றுள்ளன. இந்தத் தொடர்பில் அறிஞர் பலர் ஆராய்ந்து பல கருத்துகளைக் கூறியுள்ளனர்.

        அறிஞர் ‘லாங் ஹர்ஸ்ட்’ (Long Hurst), “மாமல்லபுரத்தில் உள்ள ஒற்றைக் கற்கோயில்கள் எல்லாம் அவன் காலத்திலிருந்த (செங்கல்லும் சுண்ணாம்பும் கொண்டு கட்டப்பட்டு, மூங்கிற் கூரை அமைந்து வேலைப்பாடு கொண்ட செப்புத் தகடுகள் அறைந்த) கோவில்களைப் போன்றவையே என்பதைப் பார்த்ததும் கூறிவிடலாம்”, எனக் கூறியுள்ளதை டாக்டர் மா. இராச மாணிக்கனார் (பல்லவர் வரலாறு, பக்- 310) எடுத்துக் காட்டுகிறார். இதனால், பண்டைக் காலத் தமிழர் கட்டடங்களின் தாக்கம் பல்லவர் கோயில்களில் இருந்துள்ளமை தெரிய வரும்.

        நீலகிரி மலையில் வாழ்ந்த தொதவர் கோயில்களும், திருநெல்வேலியில் முற்காலத்திலிருந்த பேய்க் கோயில்களும் பண்டைய திராவிடக் கட்டட அமைப்பிற்கு முன்னோடிகளாகத் திகழ்ந்தன. மேலும், தமிழகத்திலிருந்த பௌத்தர் கட்டடங்களிலுள்ள தூபி விமானம் முதலியவையும் பல்லவர் மனத்திலிருந்து அவர்கள் கட்டும் கட்டடங்களில் இடம் பெற நல்ல சூழலை நாடியிருந்தன. இக்கருத்திற்கு அரண் செய்யும் வகையில், அறிஞர்கள் திராவிடக் கலைக் கூறுகளாகவே தூபி, சைத்தியம், விமானம் ஆகியவை உள்ளன என்கின்றனர்.

        சுருங்கக் கூறின், திராவிடக் கட்டடக்கலைக் கூறுகளின் தாக்கம் (Impact or Influence) பல்லவர்கள் அமைத்த கோயில்களில் அமைந்தது என்பதும், பல்லவர் கோயில்களில் அமைந்துள்ள கோபுரம், விமானம், திருச்சுற்று முதலிய கூறுகள் தமிழகத்தில் கட்டப்பட்ட பல கோயில்களில் இடங்கொண்டு பெருவளர்ச்சி கொண்டன என்பதும் அறியத்தக்க செய்திகளாகும்.

    3.4.3 சிறப்புமிகு கோயில்கள்

        பல்லவர் காலத்தில் உருவாக்கப்பட்டவை இரண்டு வகையான கோயில்கள். அவற்றுள் ஒன்று கட்டப்பட்டது. இன்னொன்று மலையைக் குடைந்து அமைக்கப்பட்டது. கட்டப்பட்ட கோயில்களுள் சிறப்புடையன பல. அவற்றுள் ஒன்று திருவதிகை வீரட்டானம். குடைவரைக் கோயில்களுள் திருச்சி மலைக்கோட்டை கோயில் சிறப்புடையது.

    • திருவதிகை வீரட்டானம் கோயில்

        திருவதிகை வீரட்டானக் கோயில் பலவகைக் கட்டடக் கூறுகள் கொண்டு விளங்குகிறது. பல்லவன் பரமேசுவரன் காலத்தில் கட்டப்பட்டது ; நிருபதுங்கன் காலத்தில் மேலும் சில திருப்பணிகள் செய்யப்பட்டன. இக் கோயிலின் அடிப்பகுதி கல்லாலும், மேற்பகுதி முழுவதும் செங்கல்லாலும் கட்டப்பட்டுச் சுதை வேலைப்பாடு மிகுதியும் கொண்டு விளங்குகின்றது.

        அட்ட வீரட்டத் தலங்களில், திருவதிகையும் வழுவூரும் கிழக்கு நோக்கியிருக்கின்றன; ஏனையவை மேற்கு நோக்கி அமைந்துள்ளன.

        திருவதிகைக் கோயிலின் வாயிலில் எழு நிலைக் கோபுரம் அணி செய்கிறது ; கோயிலில் இரு திருச் சுற்றுகள் உள்ளன. கோபுர நுழைவாயிலில் நாட்டியப் பெண்கள், கொடிப்பெண்கள் (கங்கையும் யமுனையும்), திருமாலின் அவதாரத் திருவுருவங்கள் ஆகியவற்றை, சிறிய அளவில் சிற்பவுருவில் காணலாம்.

        முதல் திருச்சுற்றில் கொடி மரமும், நந்தியும் காணப்படும். தென்புறத்தில் வசந்த மண்டபம், தீர்த்தம், வடபுறத்தில் நூற்றுக்கால் மண்டபம், கல்மண்டபம், திருமணவிடுதி ஆகியவற்றையும், புத்தர் சிலையையும் விநாயகரையும் முருகனையும் காணலாம்.

        இரண்டாவது திருச்சுற்றில் வாயிலை ஐந்துநிலைக் கோபுரம் அழகு செய்கிறது, வடபுறத்தில் பல்லவர் காலச் சிம்மத் தூண்களைக் கொண்ட மடைப்பள்ளியைக் காணலாம். மேலும் அப்பரடிகளின் திருவுருவமும், வாயிலுக்குத் தென்புறம் யாகசாலை, நவக்கிரகங்கள், வைரவர் ஆகியோரும் காணப்படுவர். அதே இரண்டாவது திருச்சுற்றின் தென்புறத்தில் நாயன்மார், அறுபத்து மூவர், சேக்கிழார், தலமரமாகிய கொன்றை, திலகவதியார் இடங் கொண்டிருப்பதைக் காணலாம்.

        இறைவியின் சன்னிதி தனியாக வலப்புறமாக அமைக்கப்பட்டுள்ளது. திருமணஞ்சேரி, மதுரை, திருநெல்வேலி, ஈரோடு, காஞ்சி ஆகிய இடங்களில் இறைவியின் சன்னிதி, இறைவன் கருவறைக்கு வலப்புறமாக இருக்கும்.

        திரிபுரமெரிக்கும் வீரநிகழ்ச்சி நடைபெறுவதால், கருவறையுடன் கூடிய விமானம் தேர் போன்று அமைந்துள்ளது.

    • திருச்சி மலைக்கோட்டைக் கோயில்

        திருச்சி மலைமேல் எழுந்தருளியுள்ள ஈசன், ‘திருமலைக் கொழுந்து’ எனவும், கருவுற்றிருந்த வணிகப் பெண்ணிற்குத் தாயாக வந்து மருத்துவம் புரிந்தமையால் ‘தாயுமான சுவாமி’ எனவும், சாரமா முனிவர் செவ்வந்திப் பூக்களால் பூசித்ததால் ‘செவ்வந்தி நாதர்’ எனவும் அழைக்கப்பெறும் புராணச்சிறப்பும் வரலாற்றுச் சிறப்பும் கொண்டவர் ; அம்பிகையின் திருப்பெயர் மட்டுவார் குழலம்மை.

        பல தெய்வங்கள் பூசித்த சிறப்பிற்குரிய இக்கோயிலில், அனுமானும் பூசித்ததற்கு அடையாளமாக அனுமக் கொடியும் அனும முத்திரையும் உள்ளன, மலைக்கோயிலின் உச்சியில், செவ்வந்தி விநாயகராகிய உச்சிப் பிள்ளையாரும், மலையடிவாரத்தில் மாணிக்க விநாயகரும் காட்சியளிக்கின்றனர்.

    • மண்டபங்கள்

        இக் கோயிலில் வசந்த விழாவிற்காகத் தளவாய் முதலியாரால் கட்டப்பட்ட பதினாறுகால் மண்டபம் ஒன்று உள்ளது. அதனருகே மணி மண்டபத்தில் டன் எடையும் 4 அடி 8 அங்குல நீளமும், அடி அகலமும் உடைய கோயில் மணி உள்ளது.

        மலை உச்சிக்குச் செல்லும் வழியில் அழகிய நூற்றுக்கால் மண்டபமும், அதன் எதிர்ப்புறத்தே மௌன மண்டபம் எனும் திருமடமும் சமயப்பணிகள் புரியத் துணை நிற்கின்றன.

    • குடைவரைக் கோயில்கள்

        உச்சிப்பிள்ளையார் கோயிலுக்குச் செல்லும் வழியில் பல்லவன் மகேந்திரவர்மன் அமைத்துள்ள குகைக்கோயில் தெற்குப் பார்த்த வண்ணம் காணப்படுகின்றது. முன் மண்டபமும் அதற்குக் கருவறையும் உள்ளன. முன் மண்டபம் 30 அடி நீளம், 15 அடி அகலம், 9 அடி உயரம் உள்ளது. மண்டபத்தின் கிழக்குப் புறச் சுவரில் கருவறை மேற்குப் பார்த்த நிலையில் அமைந்துள்ளது. இதன் நீளமும் அகலமும் 7 அடி 10 அங்குலம் உள்ள சதுரமாகவும், உயரம் 7 அடியாகவும் அமைந்திருக்கக் காணலாம். இக் கருவறையின் தரையில் 2 அடிச் சதுரக்குழி உள்ளது. இதனால் முன்பு சிவலிங்கம் நிறுவப்பட்டிருந்ததாகத் தெரிகிறது. இதன் அருகே ஓரடிச் சதுரமுள்ள குழி உள்ளது. மகேந்திரவர்மனின் உருவச் சிலை சிவலிங்கத்தின் அருகே அமைந்திருந்ததாகக் கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன.

        கருவறையின் எதிரே மேற்குப்புறப் பாறையின் மண்டபச் சுவரில் சுமார் 7 அடிச் சதுரத்தில், வனப்புமிகு கங்காதர மூர்த்தியின் திருவுருவம் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது. மலையடிவாரத்திற்குச் சிறிது உயர்ந்த பகுதியில், மலையைக் குடைந்து மற்றொரு குகைக்கோயில் உள்ளது. இந்தக் கோயில் மகேந்திரவர்மன் குடைவித்ததன்று ; அவன் மகன் நரசிம்மவர்மனால் அமைக்கப்பட்டது என்பர்.

        திருச்சி மலைக்கோயிலைப் பொறுத்த வரையில், அதன் சார்பாக அதனருகிலிருக்கும் தெப்பக் குளமும் காணத்தக்க கலைச் சிறப்புமிக்கது.

புதுப்பிக்கபட்ட நாள் : 29-07-2017 18:01:02(இந்திய நேரம்)