தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Diploma Course - D05114-சோழர் காலக் கட்டடக் கலை

  • 3.5 சோழர் காலக் கட்டடக் கலை

        சோழ மன்னர்கள் போர்த்திறம் மிக்கவர்களே ; தாம் பெற்ற வெற்றிக்கு அறிகுறியாகவும் பக்தியார்வ வெளிப்பாடாகவும் தமிழகத்தில் பல கோயில்களைக் கட்டியுள்ளனர் ; அதே காலத்தில் அவர்கள் தாம் வாழ்வதற்கு எனத் தஞ்சாவூரிலும் கங்கைகொண்ட சோழபுரத்திலும் உறையூரிலும் அழகான அரண்மனைகள் கட்டி வாழ்ந்துள்ளனர். கோயில்கள் பலவும் காலவெள்ளத்தை எதிர்த்து நின்று காணப்படுகின்றன. ஆனால், அரண்மனைகள் அழிந்து விட்டன. எனினும், தஞ்சையைப் பொறுத்த வரையில், மராட்டிய மன்னர்கள் கட்டிய மாடமாளிகைகள் சரசுவதி மகால் (நூலகம்) போன்றவை காணுதற்குரியவை.

    3.5.1 அரண்மனைகள்

        சோழர்கள் தம் அரண்மனைகளைத் தெய்வ ஆலயங்களைப் போல் கருங்கல்லால் கட்டாமல் செங்கல்லாலும் மரத்தாலும் கட்டியதன் விளைவாகவே அவை நீடித்து நிற்கவில்லை; வேற்றுமன்னர் படையெடுப்பாலும் அவை அழிய நேர்ந்தன.

        சோழர் ஆட்சிக் காலத்தில் நாளோலக்க மண்டபம், கருவூலம், அந்தப் புரமாகிய உட்கோட்டை, படைக்கலக்கொட்டில், கோட்டைச் சுவர்கள் முதலியவற்றைத் திட்டமிட்டுக் கட்டியுள்ளனர். சில முக்கிய நகரங்களில் தற்காலிகமாகத் தங்குவதற்கும் சித்திர மாடங்களையும் கட்டியிருந்தனர். பல்லவ, பாண்டிய மன்னர்களும், அவர்தம் காலத்தில் வாழ்ந்த முத்தரையர், இருக்குவேளிர் முதலிய சிற்றரசர்களும் தத்தம் ஆட்சிக் காலத்தில் அரண்மனை முதலிய பலகட்டடங்களையும் கட்டிக் கொண்டே வாழ்ந்தனர் என்பது வரலாறு ; ஆனால், அவையெல்லாம் சுவடு அழிந்த கலைச் சின்னங்களாகி விட்டன.

    • விசயாலய பரம்பரையினர்

        விசயாலய சோழ பரம்பரையினர் சுமார் 350 ஆண்டுகள் ஆண்டு வந்தனர். காஞ்சிபுரத்திலும் சோழர் ஆதிக்கத்தை நிறுவிய பெருமை முதலாம் ஆதித்தனுக்கு உண்டு. அவனும் அவனுக்குப் பின் வந்த சோழர் சிலரும் காஞ்சிபுரத்தில் தங்கிக் கொண்டே ஆணைகளைப் பிறப்பித்தது பற்றிக் கல்வெட்டுகள் கூறுகின்றன. கண்டராதித்தனும் சுந்தர சோழனும் தங்கியிருந்த மாளிகை பொன்முலாம் பூசப்பட்டும், பல அடுக்குகள் கொண்டும் விளங்கியது என்பது கல்வெட்டுச் செய்தி ; இதனை உறுதிப்படுத்தும் வகையில், சுந்தர சோழனைப் ‘பொன் மாளிகைத் துஞ்சிய தேவர் ’ எனக் கல்வெட்டு வாசகம் உள்ளது.

    • இராசேந்திரன்

        முதலாம் இராசேந்திரன் காலத்தில் பழையாறையிலும் அரண்மனை இருந்தது ; கங்கை கொண்ட சோழபுரத்திலும் பல அடுக்குகளுடன் கூடிய பெரிய அரண்மனை இருந்துள்ளது.

        சோழ நாட்டில் மட்டுமல்லாமல், முதலாம் இராசேந்திரன் பாண்டி நாட்டை வென்று அங்கு ஒரு பெரிய மாளிகையைக் கட்டித் தன் மகனைப் பாண்டிய நாட்டின் மன்னனாக்கினான் ; அவனுக்குச் சோழ பாண்டியன் என்ற பட்டமும் அளித்துள்ளான்.

        கங்கை வரையில் சென்று வெற்றி பெற்றுத் திரும்பிய முதலாம் இராசேந்திரன், தன் தானைத் தலைவர்களைக் கொண்டு கங்கைப் புனித நீரைக் கொணர்வித்துத், தான் கட்டிய கங்கை கொண்ட சோழீச்சுவரத்தில் வைத்திருந்து, மேற்கில் சயங்கொண்டான் செல்லும் சாலையருகே மாபெரும் ஏரியைத் தோண்டி அதனில் ஊற்றி ஜலமயமான வெற்றிச் சின்னமாகப் போற்றிக் கொண்டாடினான். சோழ கங்கையான அந்த ஏரி இக்காலத்தில் பொன்னேரி என்று அழைக்கப்படுகிறது.

        கங்கை கொண்ட சோழபுரத்திலிருந்த அரண்மனையும் பிறகட்டடங்களும் சிதைவுற்றன. அப்படி இங்குச் சிதைவுற்ற நிலப்பகுதியை மாளிகை மேடு என்று அழைக்கின்றனர். தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறைக் குறிப்பின்படி, இங்கு நடக்கும் அகழ்வாராய்ச்சியில் மிகப் பரந்த சுவர்ப்பகுதிகள் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன. சுமார் 7 அடிக்கும் மலோக அஸ்திவாரம் போடப்பட்ட சுவர்கள் காணப்படுகின்றன. மிகப் பெரிய 5 அடி அகலமுள்ள இரண்டிரண்டு சுவர்கள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டு, அதன் மேல் தூண்களையும் சுவர்களையும் எழுப்பி அரண்மனையைக் கட்டி இருக்கின்றார்கள்; அவற்றின் பகுதிகள் இப்போது கிடைக்கின்றன. அத்துடன் வண்ணம் பூசப்பட்ட சுண்ணக்காரைகளும் கிடைக்கின்றன. அவற்றிலிருந்து மாளிகையின் பல பகுதிகள் அழகிய சித்திரங்கள் தீட்டப்பட்டுத் திகழ்ந்தன என்பது தெளிவு எனும் செய்திகள் (கங்கை கொண்ட சோழபுரம், பக்-13) கிடைக்கின்றன, இவையெல்லாம் மறைந்து போன / மறந்து போன மதிப்பரிய செல்வங்கள் (Forgotten Worthies) என நம் பண்டைய கட்டடக் கலைப் பெருமையை நினைவிற் கொள்ளலாம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 29-07-2017 18:07:33(இந்திய நேரம்)