தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

புகழ் பெற்ற கலைஞர்கள்

  • 6.6 புகழ் பெற்ற கலைஞர்கள்

        இப்பாடத்தின் முற்பகுதியில் இசைக்கலையின் பல்வேறு துறைகளில் பெருமை பெற்று விளங்கிய, இன்று விளங்கும் கலைஞர்களைப் பற்றி அறிந்து கொண்டோம்.அவர்களில் குறிப்பாகச் சிலரைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

    6.6.1 இயலும் இசையும்

        இசைக் கலையில் புகழ் வாய்ந்த கலைஞர்களைப் பற்றி நமக்குத் தெரியும். முத்தமிழில் இயலோடு இசையை இணைத்துப் பணிபுரிவது மிகச் சிலருக்கே வாய்க்கும். இசைச் சொற்பொழிவு, காலட்சேபம் (ரிகதா காலட்சேபம் என்று இதனைக் குறிப்பிடுவார்கள்) ஆகிய துறைகளில் மட்டுமே இது இயலும். இதற்கு இலக்கிய அறிவு, இசைப் பயிற்சி, சொற்பொழிவுத் திறன்,நகைச்சுவை உணர்வு முதலிய பலதுறைத் தேர்ச்சி தேவை.மாங்குடி சிதம்பர பாகவதர், திருவையாறு அண்ணாசாமி பாகவதர், திருப்பழனம் பஞ்சாபகேச சாஸ்திரிகள், எம்பார்வியராகவாச்சாரியார் முதலியவர்கள் இத்துறையில் புகழ்மிக்கவர்கள். திருமுருக கிருபானந்தவாரியார், தமிழிலக்கியங்களின் அடிப்படையில் தமது நிகழ்ச்சியை அமைத்துக் கொண்டார். கம்பராமாயணம், வில்லிபாரதம், பெரியபுராணம், திருவிளையாடற் புராணம் முதலியவற்றில் வரும் கதைகளைச் சொன்னார்.

    • திருமுருக கிருபானந்த வாரியார்

        திருமுருக கிருபானந்த வாரியார் வடஆர்க்காடு மாவட்டம் காங்கேய நல்லூரில் 25.8.1906இல் பிறந்தார். தனது தந்தையார் மல்லையதாசரிடம் நன்னூல், தேவாரம், திருப்புகழ்ப் பாடல்களைக் கற்றார். நாள்தோறும் விடியற்காலைப் பொழுதில் இசை பயின்றார். பன்னிரண்டு வயதிற்குள் 19,000 பாடல்களை மனப்பாடம் செய்தார்.இயலிலும் இசையிலும் வல்லவராகத் திகழ்ந்தார். தமிழகத்திலும் மேலைநாடுகளிலும் இசைச் சொற்பொழிவு செய்தார். திருப்புகழ்ப் பாடல்களைப் பாடுவதனைத் தனது முக்கிய நோக்கமாகக் கொண்டு திருப்புகழ் இசையைப் பரப்பினார். தலைசிறந்த முருக பக்தராக முருகன் திருவருள் பாடும் பேசும் கலைஞராக விளங்கினார். இதனால் இவரைத் திருமுருக கிருபானந்த வாரியார்என்று உலகம் போற்றியது.

        வாரியார் அருணகிரியாரின் திருப்புகழ்ப் பாடல்களைப் பின்பற்றி 103 பாடல்களை உடைய குகப் புகழ்பாடல்களைப் பாடியுள்ளார்.

        24.4.1950இல் வடலூர் சத்திய ஞான சபைக்குத் திருக்குடமுழுக்குச் செய்தார். சென்னை தமிழிசை மன்றம் இவருக்கு இசைப் பேரறிஞர் என்ற சிறப்பு விருதை அளித்தது. தமிழ்நாடு இயலிசை மன்றம் கலைமாமணி விருதளித்தது. அண்ணாமலைப் பல்கலைக் கழகம் டாக்டர் பட்டம் அளித்தது. திருப்புகழ் அமிர்தம் என்ற மாத இதழை 37 வருடங்கள் தொடர்ந்து நடத்தினார். வீணை இசைப்பதிலும் வல்லவர். தென்மடம் வரதாசாரியாரிடம் வீணை கற்றார். 68 ஆண்டுகள் இசை மூலம் சமயச் சொற்பொழிவுகளைச் செய்தார். கந்தபுராணம், இராமாயணம், மகாபாரதம், திருப்புகழ், திருவருட்பா, தேவார திருவாசகங்களை இசை மூலம் மக்கள் மனத்தில் பதிய வைத்தார்.

        இராகம் பாடுவதிலும், சுரம் பாடுவதிலும் வல்லவர். திருப்புகழ்ப் பாடல்களைப் பாடி நிரவல் செய்வதில் வல்லவர். மேற்கோள்களுடன் நகைச்சுவை உணர்வு ததும்ப மக்களை ஈர்த்து இசைச் சொற்பொழிவு செய்தார். கோடிக்கணக்கான தமிழர் உள்ளங்களில் நற்பண்புகளையும் நெறிமுறைகளையும் வளர்த்த வாரியார் தமது 88வது வயதில் நவம்பர் 1993-இல் இலண்டன் மாநகரில் சிகிச்சை பெற்று, சென்னைக்குத் திரும்பும் வழியில் விமானத்திலேயே மாரடைப்பால் இறந்தார்.

    6.6.2 மிடற்றிசைக் கலைஞர்கள்

        மிடற்றிசைக் கலைஞர் (வாய்ப்பாட்டுக் கலைஞர்) சிலரைப் பற்றிப் பார்க்கலாம்.

    • சித்தூர் சுப்பிரமணிய பிள்ளை

        இசையுலகில் திருப்புகழ் இசை பரப்பிய இலயமேதை காஞ்சிபுரம் நாயனாப் பிள்ளையின் மாணவர் பரம்பரையில் வந்தவர் சித்தூர் சுப்பிரமணிய பிள்ளை ஆவார். கருநாடக இசைப் பாடகருள் குறிப்பிடத் தக்கவர். ஆந்திர மாநிலம் சித்தூரில் பேரையா-முகிலம்மாளுக்கு 1907இல் மகனாகப் பிறந்தார். இவரது இயற்பெயர் கனகையா ஆகும். காஞ்சிபுரம் நாயணார் பிள்ளை குருகுல முறையில் இசை பயின்று நாயணார் பிள்ளையிடம¢ இயற்பெயரான சுப்பிரமணியன் என்ற பெயரைத் தனது பெயராக அமைத்துக் கொண்டார்.

         இவரது தாய்மொழி தெலுங்கு. ஆயினும் தமிழில் தேர்ச்சி பெற்று, தமிழிசை உலகில் சிறப்பிடம் பெற்றார். சென்னை நகரிலும், அண்ணாமலை நகரிலும் தங்கி இருந்தார். இசைத் தொண்டே வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டிருந்தார். தமிழில் நூற்றுக்கும் மேற்பட்ட இசைப்பாடல்களை இயற்றியுள்ளார்.

         நான்கு மணி நேரமாயினும் இசையரங்கில் பாடுவார். இவரது இசையரங்குகளில் தாள இசைக் கருவிகள் அதிகம் இடம் பெறும். கின்னரி, மத்தளம், கஞ்சிரா, கொன்னக்கோல், கடம், மோர்சிங் கருவிகள் இடம் பெறும். தாள நுட்பமும், இலயச் சிறப்பும் மிகுந்து காணப்படும்.

         அண்ணாமலைப் பல்கலைக் கழக இசைத் துறைத் தலைவராகவும், திருப்பதி வெங்கடேசுவரப் பல்கலைக் கழக இசைத்துறைத் தலைவராகவும் திருவையாறு இசைக் கல்லூரியிலும், யாழ்ப்பாணம் பொன்னம்பல இராமநாதன் கல்லூரியிலும் பணியாற்றினார். இசைத் துறையில் பல விருதுகளைப் பெற்றுள்ளார். திருப்புகழ்ப் பாடல்கள் சிலவற்றிற்கு இசையமைத்து அண்ணாமலைப் பல்கலைக் கழக வெளியீடாகப் பதிப்பித்துள்ளார். இசையுலகில் சிறந்த கலைஞரான இவர் 1982இல் மறைந்தார்.

    • மதுரை எஸ்.சோமசுந்தரம் (1919-1989)

        இசையுலகில் மணிக்கணக்கில் இராகம் பாடுவதில் வல்லவராக விளங்கியவர். மருதமலை மாமணியே என்ற திரை இசைப் பாடலை உலகறியச் செய்த மதுரை எசு.சோமசுந்தரம், சித்தூர் சுப்பிரமணியின் மாணவர் ஆவார். அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பேராசிரியராகவும் நுண்கலைப் பல்துறைத் தலைவராகவும் விளங்கினார். அண்ணாமலைப் பல்கலைக் கழகம் இசைத் திறமைக்காக இவருக்கு டாக்டர் பட்டம் அளித்தது. தமிழக அரசின் அரசவைக் கலைஞராகவும் இருந்தார்.

        இராகம் பாடுவதில் இணையற்றவர். சித்தூர் சுப்பிரமணிய பிள்ளையிடம் 14 ஆண்டுகள் குருகுலவாசம் மூலம் பெற்ற அனுபவங்களையும் தனது சிறப்பான கற்பனை ஆற்றலையும் கலந்து, வந்தது வராமல் மணிக்கணக்கில் இராகம் பாடுவார். இசை தெரியாத பாமர மக்களும் இவரது இசையால் ஈர்க்கப் பெற்றனர். இசை நுட்பம் அறிந்தோர் இவரது இசை நுட்பம் அறியக் கூடுவர். தமிழகத்திலும் அயல்நாடுகளிலும் இவரது இசையரங்குகள் இடம்பெறாத திருவிழாக்கள் இல்லையென்று கூறும் அளவிற்கு இடம் பெற்றன.

        இசைப் பேரறிஞர், சங்கீத சக்கரவர்த்தி, அருள் ஞான தெய்வீக இசைக் கடல், பத்ம ஸ்ரீ பட்டங்களைப் பெற்றுள்ளார். பக்க இசைக் கலைஞர்கள் இவரது இசையரங்கு என்றால் அச்சம் கொள்ளும் அளவிற்குப் பயன்படுத்துவார். இவரது இசை பாணி தனித்தன்மை வாய்ந்தது.

    • சீர்காழி கோவிந்தராசன்

        தமிழிசை எழுச்சியை உருவாக்கிய தலங்களுள் சீர்காழி முக்கியமானதொரு இடம் பெறும். நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பிய ஞானசம்பந்தர் தோன்றிய தலம். நட்டபாடைப் பண்ணமைந்த ‘தோடுடைய செவியன்’ என்று தொடங்கும் தேவாரம் உதயமான தலம். தமிழில் கீர்த்தனை வரலாற்றைத் தொடங்கிய முத்துத்தாண்டவர் தோன்றிய தலம். தலைசிறந்த தமிழ் நாடகக் கீர்த்தனையான இராம நாடகக் கீர்த்தனையை அருணாசலக் கவிராயர் உருவாக்கிய தலம். இத்தலத்தில் தலைசிறந்த தமிழிசைக் கலைஞராக, திரையிசைக் கலைஞராக விளங்கியவர் சீர்காழி கோவிந்தராசன் ஆவார்.

        சீர்காழி கோவிந்தராசன் சீர்காழியின் சிவசிதம்பரம் - அபயாம்பாள் பெற்றோருக்கு மகனாகப் பிறந்தார். சங்கீத கலாநிதி திருப்பாம்புரம் என்.சுவாமிநாத பிள்ளையிடம் இசை பயின்றார். 1949 இசைமாமணி பட்டம் பெற்றார். சென்னை தமிழிசைக் கல்லூரியில் (1949-50) இசைமணி பட்டமும், சென்னை கர்நாடக இசைக் கல்லூரியில் (1951-52) சங்கீத வித்துவான் பட்டமும் பெற்றார். 1971 இல் தமிழக அரசின் தலைசிறந்த பின்னணிப் பாடகர் விருது பெற்றார். 1980இல் சங்கீத நாடக அகாடமியின் விருது பெற்றார். தமிழ்நாட்டின் அரசவைக் கலைஞராக விளங்கினார். 1982இல் சென்னைத் தமிழிசைச் சங்கத்தின் இசைப் பேரரறிஞர் பட்டத்தையும் பெற்றார். 1983இல் சென்னைப் பல்கலைக் கழகம் தனது வெள்ளி விழாவில் மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கியது. அண்ணாமலைப் பல்கலைக் கழக இசைத்துறைத் தலைவராகவும், நுண்கலைத் துறைகளின் தலைவராகவும் விளங்கினார்.

        சிறந்த குரல் வளமும், மிகத் தெளிவான உச்சரிப்பும், கற்பனை நயம் மிக்க இசைநுட்பமும், இராகம், தானம், பல்லவி பாடுவதில் வல்லவராகவும், பொருளுணர்ந்து அதற்கேற்பப் பாடுவதில் சிறந்தவராகவும் விளங்கிய குரலிசைக் கலைஞர் ஆவார். கர்நாடக இசை அரங்குகளிலும், தமிழிசை அரங்குகளிலும், இறையருள் பாடும் அரங்குகளிலும், திரை இசையரங்குகளிலும் இவரது கம்பீரமான குரல் ஒலித்தது. இன்றும் ஒலி நாடாக்களின் வழியே கேட்டு இன்புறலாம்.

    6.6.3 கருவியிசைக் கலைஞர்கள்

         குரலிசைக் கலைஞர்களைப் போலவே தனித்தன்மை பெற்ற விரல் இசை (கருவியிசை)க் கலைஞர்கள் உண்டு. பக்கவாத்தியமாகவும் தனித்தும் இவர்கள் தமது திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.குழலிசைக் கலைஞர் ஒருவரைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.

    • வேணுகான சரப சாஸ்திரிகள் (1872-1904)

        தமிழகத்தில் வாழ்ந்த குழலிசை மேதைகளில் வேணுகான சரப சாத்திரிகளுக்குத் தனிச் சிறப்பிடம் உள்ளது. குழலிசைத் திறனால் இவரது பெயருக்கு முன் வேணு கானம் என்ற சிறப்புப் பெயர் இடம் பெற்றுள்ளது. தஞ்சாவூர் மகர்நோன்பு சாவடி வேங்கட சுப்பையரிடம் தியாகராசரின் கீர்த்தனைகளைக் கற்றார். பின்பு புல்லாங்குழல் இசை கற்றார். இவர் பெரிய புராண நாயன்மார்கள் அறுபத்து மூவர் சரித்திரங்களைத் தமிழிலும் மராட்டியிலும் கதைப் பாடலாக அமைத்து இசையமைத்துள்ளார்.

        சரப சாத்திரியார் புல்லாங்குழலில் தனி இசையரங்கு அமைத்தார். கண் நோயால் பார்வை இழந்த நிலையிலும் முயற்சியால் குழலிசை மேதையாக விளங்கினார். ‘நகுமோமு கனலேனி’ என்ற ஆபேரி கீர்த்தனையில் அற்புதங்கள் பலவற்றை அமைத்துத் தந்துள்ளார்.

    6.6.4 தாள இசைக் கலைஞர்கள்

        பக்க வாத்தியங்களில் புகழ் வாய்ந்த பலர் இருந்தனர் ; இன்றும் இருக்கின்றனர். அவர்களுள் தாள இசைக் கலைஞர் ஒருவரைப் பற்றிப் பார்ப்போம்.

    • கொன்னக்கோல் பக்கிரியார்(1857-1937)

        மத்தளச் சொற்கட்டுக்களை வாயால் சொல்லி முழங்கும் கொன்னக்கோல் இசைக் கலைஞர் மன்னார்குடி பக்கிரியார் ஆவார். இவர் நட்டுவனார் மரபில் வந்த இலயக் கலைஞர். இவரின் தந்தையார் சொக்கலிங்க நட்டுவனார். இளமையில் பரதக் கலை பயின்றார். பின்பு மன்னார்குடி சொர்ண தவில்காரரிடம் தவில் பயின்றார். இருபது வயது முதல் தவிலிசைக் கலைஞராக விளங்கினார். மிகச்சிறந்த நாகசுரக் கலைஞரான மன்னார்குடி சின்ன பக்கிரிக் குழுவில் தவிலிசைக் கலைஞராக விளங்கினார்.

        இசைக் கலையில் சிறந்து விளங்கிய இராமச்சந்திர பாகவதரின் இசைக் குழுவில் கொன்னக்கோல் இசைத்தார். காஞ்சிபுரம் நாயனார் பிள்ளை குழுவிலும் கொன்னக்கோல் இசைத்தார்.

        நாட்டியம், கொன்னக்கோல், தவில், திருப்புகழ்த் தாள நுணுக்கம் போன்றவற்றில் சிறந்த கலைஞராக விளங்கிய இவர் 2.11.1937இல் மறைந்தார்.மன்னார்குடியின் இசைப் பரம்பரையில் இவர் முன்னோடியாக விளங்கினார்.

    6.6.5 திருமுறை இசைவாணர்

        இசைக்கலையில் திருமுறைகளுக்குத் தனியொரு இடம் உண்டு. திருமுறைப் பண்களே பின்னர் இராகங்களாக உருமாறின.தேவாரம்ஓதுவோர்க்குப் பெரும் பொறுப்பு உண்டு. தேவாரப் பண்களின் பழைய நீர்மை குன்றாமலும், இன்றைய இராகத்தின் கவர்ச்சியோடும் பாடவேண்டிய கட்டாயம்.அதனைச் சிறப்பாகச் செய்து வருபவர் பலர். அவர்களில் ஒருவர் சோமசுந்தர ஓதுவார்.

    • சோமசுந்தர ஓதுவார்

        இறையருள் பாடகருள் சோமசுந்தர ஓதுவாருக்குத் தனியிடம் உள்ளது. தேவார இசையை இசைப்போரை ஓதுவார் என்பர். கல்வெட்டுக்கள் இவர்களைப் பிடாரர் என்று கூறும். தமிழிசை மரபுகளைத் தொன்று தொட்டுக் காத்து வரும் மரபினராக இவர்கள் விளங்குகின்றனர்.

        சோமசுந்தர ஓதுவார் வேதாரண்யம் என்று கூறப்படும் திருமறைக்காட்டில் வேதய்யா தேசிகருக்கும் வேலம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார். தந்தை தாய் வழி தேவார மரபுகளையும் பாடல்களையும் கற்றார்.அண்ணாமலைப் பல்கலைக் கழக இசைத் துறைத் தலைவர் எம்.எம்.தண்டபாணி தேசிகரிடம் தேவார இசை முறைகளைக் கற்றதோடு அவரோடு முப்பது வருடங்கள் உடனிருந்தார்.அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இசை ஆசிரியராகப் பணிபுரிந்தார். கோலாலம்பூரில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் திருப்புகழ்,தேவார இசையரங்குகளை நடத்தினார்.

         ‘திருமுறை இசை அமுதம்’ நூலை, சுர தாளக் குறிப்புடன் வெளியிட்டார். இலங்கை, மலேசியா நாடுகளிலும் தமிழகத் திருக்கோயில்களிலும் திருமடங்களிலும் இவரது தேவார இசை நிகழ்ச்சிகள் நடந்தன. மாணவர்கள் பலரை உருவாக்கினார்.

        பழனி சண்முகசுந்தரம், திருவிடைமருதூர் சம்பந்த ஓதுவார், தருமபுரம் சுவாமிநாதன், சோமசுந்தர தேசிகர், முத்துக்கந்தசாமி தேசிகர் போன்றோர் பலர் திருமுறை விண்ணப்பிக்கும் இசைக் கலைஞர்களாக உள்ளனர்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 07:07:18(இந்திய நேரம்)