தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

இசை வளர்த்த நங்கையர்கள்

  • 6.7 இசை வளர்த்த நங்கையர்கள்

        இல்லற வாழ்வே இனிது என்ற மனநிலை கொண்டிருந்த பெண்மணிகள் இன்று அரசியல், சமுதாயம், அறிவியல்,தொழில் நுட்பம், காவல் துறை போன்ற பல்வேறு துறைகளில் சிறப்பான பங்கு பெறுவது போல் இசைப் பயிர் வளர்த்தவர்களாகவும் விளங்குகின்றனர்.

        சங்க காலம் முதல் இசைத் துறையில் சிறப்புடன் விளங்கிய இவர்கள் காப்பியக் காலத்தில் அரசவையில் வீற்றிருக்கும் கலைஞராகத் திகழ்ந்தனர். தென்னக இசையின் தாயாகவும் பாவை பாடிய பாவையாகவும் விளங்கியதோடு தேவாரப் பண்களைக் காத்து அளித்தவர்களாகவும் விளங்கினர்.

        பிற்காலத்தில் ஆண்களுக்கு நிகராக இசை உலகில் திகழ்ந்தனர். இசைக் கருவிகளின் இராணியான வீணை இசையில் தனக்கென ஒரு தனி பாணியை இசை உலகில் நிலவச் செய்தவராக வீணை தனம்மாள் (கி.பி.1868-1938) திகழ்ந்தார். இவர் சங்கீத கலாநிதி டி.பாலசரசுவதியின் பாட்டியாவார். மிகச் சிறந்த இசைப் பரம்பரையை இவர்கள் தோற்றுவித்தனர்.

        திருவையாற்றில் தியாகராசர் ஆலயத்தைக் கட்டி ஆராதனை விழா மிகச் சிறப்புடன் நடைபெற ஏற்பாடு செய்த பெங்களூர் நாகரத்தினம்மாள் (1878-1952) தியாகராசர் சமாதியை 7.1.1925இல் கோயிலாக்கிக் குடமுழுக்குச் செய்வித்தார். 1905க்கும் 1935க்கும் இடையில் 1235 இசை நிகழ்ச்சிகளைத் தந்தார். இந்தியக் குடியரசுத் தலைவரால் தியாக சேவா சக்தி என்ற விருது வழங்கப்பட்டார். இவர் பழம்பெரும் இசை நூல்களைப் பதிப்பித்தவரும் ஆவார்.

        இசையரசியர் மூவர் என்று போற்றப்படும் டாக்டர் எம்.எசு.சுப்புலட்சுமி, சங்கீத கலாநிதி டி.கே.பட்டம்மாள், டாக்டர் எம்.எல்.வசந்தகுமாரி மூவரும் தலைசிறந்த மேதைகளாக விளங்கினர்.

        இசை உலகில் பேரரசியாக டாக்டர் எம்.எசு.சுப்புலட்சுமி திகழ்ந்தார். இசைத் துறையில் பெண்கள் ஆர்வத்தோடு ஈடுபட இவர் வழிகாட்டினார். இந்தியத் திருநாட்டின் பல்வேறு சிறப்பு விருதுகளைப் பெற்றார். இந்தியத் திருநாட்டில் முதன் முதல் வழங்கப்பட்ட பத்மபூன் விருதினை (1954) இவர் பெற்றார். பின்னர் ‘பாரத ரத்ன’ விருதும் வழங்கப்பட்டது.

        சங்கீத கலாநிதி டி.கே.பட்டம்மாள் ஆண்களுக்கு நிகராக, குரலிசை பாடுவதில் வல்லராகத் திகழ்ந்தார். வீணையும் வயலினும் இசைப்பார். பல்வேறு சிறப்பு விருதுகளைப் பெற்றார். இசையுலகில் இவரின் வாரிசாக நித்யமி காதேவன் விளங்குகிறார்.

        ஆண்டாள் பாடிய திருப்பாவையை இசைப் பாடல் மூலம் பெருமைப்படுத்தியவராக எம்.எல். வசந்தகுமாரி விளங்கினார். 500க்கும் மேற்பட்ட ஒலிப்பதிவுகளையும் பல்வேறு இசை நிகழ்ச்சிகளையும் இவர் தந்துள்ளார். கற்பனை வளம் நிறைந்த இசைக்குச் சொந்தக்காரராக விளங்கினார்.

        சுதந்திரப் போராட்டக் காலங்களில் சுதந்திர இசைப் பயிர் வளர்த்த ஹேமாவதி தியாகராசன். அகில இந்திய வானொலியின் முதன்மைக் கலைஞராக விளங்கிய மைதிலி சீனிவாசன் ; முத்துச்சாமி தீட்சதரின் நவக்கிரகக் கீர்த்தனைகளைப் பாடிப் பெருமை சேர்த்த மணி கிருட்டிணசாமி, தமிழிசை வளர்ப்பதனை நோக்கமாகக் கொண்ட இசை நிகழ்வும் ஆய்வும் தந்துவரும் டாக்டர் சேலம் எசு.செயலட்சுமி முதலியவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். இன்றைய இசைவானில் இளம் நடத்திரங்கள் மிகப் பல மின்னிக் கொண்டிருக்கின்றன.

        உடன்பிறந்த சகோதரிகளுடன் இணைந்து இசையால் கலை வளர்த்த நங்கையர்கள் பலர் உள்ளனர். ஏனாதி சகோதரிகள், தனுசுகோடி காமாட்சி அம்மாள் சகோதரிகள், பம்பாய் சகோதரிகள், சூலமங்கலம் சகோதரிகள் போன்றோர் இருந்துள்ளனர்.

        குழலிசையில் சிக்கில் நீலா-குஞ்சுமணி, திருமதி டி.ஆர் நவநீதம் போன்றோர் விளங்குகின்றனர்.

        ஆண்களே ஆதிக்கம் செலுத்தி வந்த நாகசுர இசையில் மதுரை எம்.எசு.பொன்னுத்தாய், தஞ்சை சாமவல்லி, சின்னமனூர்ச் சகோதரிகள் சிறப்புடன் சேவை செய்து வருகின்றனர்.

        தவிலிசைக் கலைஞராக தஞ்சாவூர் கல்யாணி அம்மாள் திகழ்ந்தார்.

        நாட்டுப்புற இசைத்துறையில் கொல்லங்குடி கருப்பாயி, முனைவர் விஜயலட்சுமி நவநீத கிருட்டிணன், அனிதா குப்புசாமி, குன்னக்குடி பாலா, பரவை முனியம்மாள் போன்றோர் சிறப்புடன் விளங்குகின்றனர்.

        இவ்வாறு இசைத் துறையை மேம்படுத்திய நங்கையர்கள் பலர் வாழ்ந்துள்ளனர். வாழ்ந்து வருகின்றனர். இவர்களால் தமிழிசையும் தமிழர் பண்பாடும் மேம்பாடு அடைந்து வருகின்றன.

    • கே.பி.சுந்தரம்பாள்

        தமிழகத்தில் நிலவிய பெண்பால் இசைக் கலைஞருள் முக்கியமானதொரு நிலையை அடைந்த பெருமையை, கே.பி.சுந்தராம்பாள் பெற்றுத் திகழ்ந்தார். நாடக உலகில் நுழைந்து, திரைப்பட உலகில் கால் பதித்து, கருநாடக இசையிலும் குறிப்பாகத் தெய்வத் தமிழிசையில் தனக்கென ஒரு சிறப்பிடத்தைப் பெற்றவராக இவர் விளங்கினார். கொடுமுடி என்ற ஊரில் 1908ஆம் ஆண்டில் பிறந்தார். தாயார் பெயர் பாலாம்பிகை. இதனால் தன்னுடைய பெயருக்குமுன் ஆங்கில எழுத்தில் கே.பி.என்று அழைத்துக் கொண்டார்.

        தனது கணவரின் அண்ணனிடம் முறையாக இசை பயின்றார். கணவரின் இறப்பிற்குப் பின் துறவு வாழ்க்கையை மேற்கொண்டார். தேசிய விடுதலை வீரர் தீரர் சத்தியமூர்த்தி அவர்களிடம் கொண்ட பற்றுதலால் தேசிய விடுதலை இயக்கக் கூட்டங்களில் பாடினார்.

        இவரது கம்பீரமான குரல் ஆண் குரல்களோடு போட்டியிடும் நிலையில் அமைந்திருந்தது. ஐந்து கட்டைச் சுருதியில் பாடுவார். இவரின் ‘ஞானப் பழத்தைப் பிழிந்து’, ‘ஒன்றானவன்’ போன்ற பாடல்களும், பூம்புகார் படத்தில் கவுந்தியடிகள் வேடமேற்றுப் பாடிய பாடலும் மிகவும் சுவையானவை. இவர் 1980இல் தம் எழுபத்திரண்டாவது வயதில் இறந்தார். இவரது கம்பீர இசை பாணி தனிச் சிறப்புடையதாகும்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 07:07:21(இந்திய நேரம்)