Primary tabs
தமிழில் அக இலக்கியங்களுக்கு என்று சில மரபுகள் உள்ளன. அவை யாவை?
(1) அக வாழ்க்கையில் இடம்பெறும் தலைவன், தலைவி, தோழி, தாய் போன்ற மாந்தர்கள்.
(2) அவர்களின் அகவாழ்க்கை நிகழ்ச்சிகள்; அந்நிகழ்ச்சிகளில் அவர்கள் பேசும் பேச்சுகள் (அவை கூற்றுகள் என்று அழைக்கப்படும்; அவையே பாடல்களாக எழுதப்படுகின்றன).
(3) அக இலக்கியத்திற்கே உரிய உள்ளுறை உவமம், இறைச்சி ஆகிய உத்திகள் ஆகியவை.
இந்த அகஇலக்கிய மரபுகள் தஞ்சைவாணன் கோவையில் எப்படி அமைந்துள்ளன என்பது பற்றியே இந்தப் பகுதியில் நாம் படிக்கப் போகிறோம்.- அக இலக்கிய மாந்தர்
அக இலக்கியங்களில் யார் யார் பேசுவார்கள் என்பதை இலக்கண நூல்கள் கூறுகின்றன. அந்த வகையில் தலைவன், தலைவி, பாங்கன், பாங்கி, செவிலி, நற்றாய், கண்டோர், பரத்தை, பாணன் ஆகிய 9 மாந்தர்கள் இந்த நூலில் கூற்று நிகழ்த்துகின்றனர். அதாவது இந்த 9 பேர் மட்டுமே இந்நூலில் பேசுகின்றனர்; அவர்களின் பேச்சுகளே பாடல்களாகப் பாடப்பட்டுள்ளன. அனைவர் கூற்றுகளும் தலைவன்-தலைவி அகவாழ்க்கையோடு தொடர்பு உடையவையாகவே இருக்கும்.
இந்த நூல் தலைவன் தலைவியின் அகவாழ்க்கை நிகழ்ச்சிகளை நம்பி அகப்பொருள் இலக்கண நூலில் உள்ளவாறு களவியல், வரைவியல், கற்பியல் என்று 3 பிரிவாகப் பிரித்துக் கூறுகிறது.
- களவியல்
திருமணத்துக்கு முன் நிகழும் காதல் வாழ்க்கை களவியலில் கூறப்படுகிறது. இதில் நடக்கும் வாழ்க்கை நிகழ்ச்சிகளை நம்பி அகப்பொருள் இலக்கண நூலின் அடிப்படையில், கைக்கிளை, இயற்கைப் புணர்ச்சி முதலிய 18 வகைகளாகப் பிரித்து உள்ளார் இந்நூலாசிரியர்.
மேற்காட்டியவை, தலைவன் தலைவியைக் கண்டு காதல் கொள்ளுதல், பிறர் அறியாத களவுப் புணர்ச்சியில் தலைவனும் தலைவியும் கூடுதல், தலைவனின் தோழனாகிய பாங்கன் துணையோடும், தலைவியின் தோழியாகிய பாங்கியின் துணையோடும் காதலர்கள் சந்தித்தல், தலைவியை விரைவில் மணந்து கொள்ளுமாறு தலைவனைத் தோழி வேண்டுதல், திருமணத்திற்காகப் பொருள்தேடத் தலைவன் தலைவியைப் பிரிந்து செல்லுதல் ஆகிய நிகழ்ச்சிகளையும், இந்நிகழ்ச்சிகளில் அவர்கள் பேசிக்கொள்ளும் பேச்சுகளையும் உள்ளடக்கியவை.
அவற்றுள் ஒரு சில நிகழ்ச்சிகளைச் சான்றாக இங்குக் காணலாம்.
- கைக்கிளை
ஒரு தலைவியைப் பார்த்த தலைவன் அவள் அழகில் மயங்கி அவளைக் காதலிக்கத் தொடங்குகிறான். ஆனால் தலைவி அவனைப் பார்க்கவில்லை. காதலின் (களவின்) இந்தத் தொடக்க நிகழ்ச்சியைக் கைக்கிளை என்று நம்பி அகப்பொருள் இலக்கண நூல் கூறுகிறது. (கைக்கிளை : ஒருதலைக் காதல்) இக்காதல் பின்னர் இருபுறக் காதலாக மாறிவிடும்.
காதலின் தொடக்க நிகழ்ச்சியாகிய கைக்கிளையைக் காட்சி, ஐயம், துணிவு, குறிப்பறிதல் என்று நான்கு வகைப்படுத்துகின்றனர்.
- காட்சி
காட்சி என்பது தலைவன் தலைவியை முதன்முதலில் காணுவது. அப்போது அவன் அவள் அழகில் மயங்கித் தன் மனத்துக்குள் பேசுகிறான். இதுவே தஞ்சைவாணன் கோவையில் இடம்பெறும் முதல் பாடல் ஆகும்.
“புயலே சுமந்து பிறையே அணிந்து பொருவிலுடன்
கயலே மணந்த கமலம் மலர்ந்துஒரு கற்பகத்தின்
அயலே பசும்பொற் கொடிநின்ற தால்வெள்ளை
அன்னம் செந்நெல் வயலே தடம் பொய்கை
சூழ்தஞ்சை வாணன் மலையத்திலே (1)(புயல் = கரியமேகம்; பொருவில் = போரிடும் வில்; கயல் = மீன்; மணந்த = சேர்ந்திருந்த; கமலம் = தாமரை; அயலே = அருகே; தடம் = பெரிய; பொய்கை= குளம்; சூழ் = சுற்றி இருக்கக்கூடிய; மலையம் = பொதியமலை)
இந்தப் பாட்டின் பொருள்: “வெள்ளை நிற அன்னப் பறவைகள் நிறைந்து உள்ள செந்நெல் வயல்களும், பெரிய குளங்களும் சூழ்ந்திருக்கக் கூடியது தஞ்சைவாணனின் பொதியமலை. அம் மலையின் பக்கத்தில் மிக அழகான பொற்கொடி ஒன்று நிற்கிறது! அந்தப் பொற்கொடி (கூந்தலாகிய) கரிய மேகத்தைச் சுமந்து கொண்டும், பிறைநிலவை (நெற்றியாக)க் கொண்டும், போரிடும் வளைந்த இரு வில்களை (புருவமாக)க் கொண்டும், தாமரை மலரில் மீன் (முகம், கண்)களைக் கொண்டும், கற்பக மரத்தின் பக்கத்திலே நிற்கிறதே!” என்று தலைவியின் அழகில் மயங்கித் தலைவன் தனக்குள் கூறிக் கொள்கிறான்.
செந்நெல் வயல்கள்இப்பாடலில் கருமேகம் தலைவியின் கூந்தலையும், பிறை அவளது நெற்றியையும், வில் புருவத்தையும், கயல் கண்களையும், தாமரை முகத்தையும், பொற்கொடி அவளது முழு உருவத்தையும் குறிக்கும் உருவகங்கள் ஆகும்.
- ஐயம்
காட்சிக்கு அடுத்தது ஐயம். அதாவது தலைவியைப் பார்த்த தலைவன் ‘இவ்வளவு அழகாக இருக்கிறாளே! இவள் தெய்வப்பெண்ணா? மானிடப் பெண்தானா? என்று ஐயம் கொள்கிறான். பின் அவளது தோற்றத்தையும் இயக்கத்தையும் கொண்டு அவள் மானிடப் பெண்தான் என ஐயம் தீர்கிறான். இது தெளிவு எனப்படும். அதன்பின் அவளது பார்வையில் அவனை விரும்பும் குறிப்பு இருப்பதைக் கண்டு மகிழ்கிறான். இது குறிப்பறிதல் எனப்படும். இந்நிலையில் காதல் ஒருபுறக் காதலாக இல்லாமல் இருபுறக் காதலாக மலர்கிறது.
இவ்வாறு தொடங்கித் தலைவனும் தலைவியும் பிறர் அறியாமல் களவுக் காதல் வாழ்க்கையில் மகிழ்வர்.
- பாங்கற்கூட்டம்
களவுக் காதலில் தலைவனால் தலைவியைச் சந்திக்க முடியாத நிலை ஏற்படும். அப்போது தலைவன் தன் நண்பனாகிய பாங்கன் உதவிகொண்டு, தலைவியைச் சந்திப்பான். இதற்குப் பாங்கற் கூட்டம் (பாங்கன் கூட்டம்) என்று பெயர்.
தலைவியைச் சந்திக்க இயலாது காதல் நோயால் தலைவன் துன்பப்படுவதைக் கண்ட பாங்கன் ‘ஒரு சிறிய குவளை நீர் வெப்பம் அடைந்திருந்தால் அதில் குளிர்ந்த நீரை ஊற்றி விளாவி அதன் வெப்பத்தைத் தணித்துவிடலாம். ஆனால் நீ அடைந்துள்ள காதல் வெப்பமோ கடல் போன்றது. கடலே வெப்பம் அடைந்தால் அதைத் தணிப்பதற்கு இந்த உலகத்தில் எந்த ஆற்றில் நீர் இருக்கிறது?’ எனக் கேட்கிறான்.
............. கடல் வெதும்பின்
தன்மேல் விளாவ உண்டோ தரைமேல் ஒரு
தண்புனலே (47)(வெதும்பின் = வெப்பம் அடைந்து கொதித்தால்; விளாவ = விளாவுதல்; சுடுநீரின் வெப்பத்தைத் தணிப்பதற்குக் குளிர்ந்த நீரைக் கலப்பர். அதற்கு விளாவுதல் என்று பெயர்; தரை = உலகம்; தண்புனல் = குளிர்ந்த ஆறு)
பின்னர்ப் பாங்கன் தலைவனைத் தேற்றித் தலைவியைச் சந்திக்க உதவுகிறான்.
- பாங்கியிற் கூட்டம்
பாங்கனின் உதவியை நாடியதுபோலத் தலைவன் தலைவியின் தோழியாகிய பாங்கியின் உதவியை நாடிப்பெற்றுக் களவு வாழ்க்கையைத் தொடர்வான். அதற்குப் பாங்கியிற் கூட்டம் என்று பெயர்.
தலைவன் - தலைவியைச் சந்திக்க வைப்பதற்காகப் பாங்கி இரவு, பகல் ஆகிய இரு நேரங்களிலும் உதவுவாள். ஏதாவது ஓர் இடத்தைக் குறிப்பிட்டு அங்குத் தலைவியை அழைத்துச் சென்று தலைவனைச் சந்திக்கச் செய்வாள். இவை இரவுக்குறி எனவும் பகற்குறி எனவும் கூறப்படும்.
இரவில் தலைவன் மலைப் பகுதிகளைத் தாண்டி வந்து தலைவியைச் சந்தித்துப் பிரியும் போது தலைவி, வழியில் உள்ள விலங்குகளை நினைத்தும் பெய்யும் மழையை நினைத்தும் அச்சப்படுவது உண்டு.
அரியும் கரியும் பொரும்நெறிக்குஓர் துணையாய்
அவர்மேல் சொரியும் திவலை துடைக்க...............
.........................மனம் பின் செல்வதே (220)(அரி = சிங்கம்; கரி = யானை; பொரு = பொருதல், சண்டையிடுதல்; நெறி = வழி)
‘சிங்கமும் யானையும் சண்டையிட்டுக் கொள்ளும் வழியில் தலைவன் செல்லுகிறான். மேலும் மழையும் பெய்து அவனைத் துன்புறுத்துகிறது. அச்சம் தரக்கூடிய அந்த வழியில் சிங்கம், யானையிடமிருந்து அவர் தம் வீரத்தால் தம்மைக் காப்பாற்றிக் கொள்வார். ஆனால் அவர் மழையில் நனைந்து கொண்டு செல்லுவார். அவர் மீது படும் மழைத்துளிகளைத் துடைக்க என்மனம் அவருக்குத் துணையாகச் செல்கிறது’ என்று தலைவி தலைவன் மேல் உள்ள தன் அன்பை வெளிப்படுத்துகிறாள்.
இவ்வாறு காதலிக்கத் தொடங்கித் திருமணம் செய்து கொள்ளுமாறு தோழி வற்புறுத்த, அதனை ஏற்றுத் தலைவன் பொருளுக்காகப் பிரிவது வரை உள்ளவற்றிற்குக் களவியல் என்று பெயர்.
- வரைவியல்
இரண்டாவதாக உள்ள வரைவியலில்(1) வரைவுமலிவு
(2) அறத்தொடு நிற்றல்
(3) உடன்போக்கு
(4) கற்பொடு புணர்ந்த கவ்வை
(5) மீட்சி
(6) தன் மனை வரைதல்
(7) உடன்போக்கு இடையீடு
(8) வரைதல்ஆகிய 8 நிகழ்ச்சிகள் உள்ளன. வரைவு என்பது திருமணம். களவு வாழ்க்கையின் இறுதியில் நிகழும் திருமணம் பற்றிய இயல் வரைவியல் ஆகும். திருமணத்திற்கான முயற்சிகள், களவுக் காதலைப் பெற்றோர்க்குத் தெரிவித்தல், பெற்றோர் மறுத்தால் தலைவியைத் தலைவன் அழைத்துச் சென்றுவிடல், திருமணம் செய்து கொள்ளல் என்பனவற்றைக் குறிப்பவை மேற்காணும் நிகழ்வுகள்.
தலைமகளிடம் காதலால் ஏற்பட்ட வேறுபாட்டைக் கண்ட செவிலித்தாய் பாங்கியிடம்,
பொன்னுற்ற கொங்கையும் முத்துற்ற கண்ணும் இப்போது
கண்டேன்
பன்னுற்றசொல்லும்இன்பாலும் கொள்ளாள்
..............................................மான் அனையாளுக்கு
என்னுற்றது என்றறியேன் புனங்காவல் இருந்த பின்னே
(297)(பன்னுற்றசொல் = திரும்பத் திரும்பப் பலமுறை சொல்லுதல்; புனங்காவல் = தினைப்புனம் காத்தது)
எனக் கேட்கிறாள். அதாவது ‘தினைப் புனம் காவலுக்குச் சென்று வந்த பின்னர் என் மகளுடைய மார்பில் பொன் போன்ற பசலை பாய்ந்துள்ளது. கண்களும் நீர்நிறைந்து வருத்தத்துடன் காணப்படுகின்றன. நான் திரும்பத்திரும்பப் பலமுறை சொல்லுவதைக் காதில் கேட்டுக் கொள்ளாமல் ஏதோ நினைப்பில் உள்ளாள், பாலும் உண்ணாது பசியறியாமல் உள்ளாள். மான்போன்ற அழகிய என் மகளுக்கு என்ன நடந்தது?’ என்று செவிலித்தாய் பாங்கியைக் கேட்கிறாள். பாங்கியும் இதுதான் சரியானநேரம் என்று அவள் கேட்கும்போதே தலைவியின் காதலைச் செவிலித்தாய்க்கு உணர்த்திவிடுகிறாள்.போருறை தீக்கணை போலும்நின் கண்கண்டு போதவஞ்சி
நீருறை நீலமும் நீயும்நண் பாகென்று நின் மகட்கோர்
தாருறை தோளவர் தந்தனர் ........,...........................
காருறை சோலையில் யாம் விளையாடிய காலையிலே
(300)(போருறை = போர்உறை; போர் செய்வது போன்ற கொடுமை உறைந்துள்ள; தீக்கணை = கொடிய அம்பு; நீலம் = நீலமலர்; நண்பாகு = நண்பராக இருக்க வேண்டும்; தார் = மாலை; கார் = மேகம்; உறை = உறைதல்; தங்கி இருத்தல்)
என்கிறாள். ‘மேகங்கள் தங்கி இருக்கக்கூடிய சோலையில் நாங்கள் விளையாடிக் கொண்டிருந்தோம். மாலை அணிந்த ஒரு தலைவன் நம் தலைவியிடம் வந்து, ‘போர் செய்யும் கொடிய தீக்கணை போன்ற உன் கண்ணைக் கண்டு அஞ்சி நீலமலர் நீரின் உள்ளே ஒளிந்து கொண்டது; அதனால் நீலமலரும் நீயும் நண்பர்களாக இருங்கள்’ என்று சொல்லி நீல மலரை அவளுக்குப் பறித்துக் கொடுத்தான். அவ்வாறு பூவைத் தந்ததிலிருந்து தலைவிக்கு இவ்வாறு வேறுபாடு தோன்றி உள்ளது என்று தலைவியின் காதலைச் செவிலித்தாய்க்கு உணர்த்துகிறாள்.இவ்வாறு பாங்கி செவிலிக்குத் தலைவியின் காதலைத் தெரிவிப்பதற்கு அறத்தொடு நிற்றல் என்று பெயர்.
- கற்பியல்
திருமணத்திற்குப் பிறகு உள்ள அக வாழ்க்கை பற்றிய இயல் கற்பியல். இதில்,
(1)இல்வாழ்க்கை
(2)பரத்தையிற் பிரிவு
(3)ஓதற்பிரிவு
(4)காவற்பிரிவு
(5)தூதிற்பிரிவு
(6)துணைவயிற் பிரிவு
(7)பொருள்வயிற் பிரிவுஎன்று 7 பகுதிகள் உள்ளன. தலைவியின் இல்லத்திற்குச் சென்று வந்த செவிலித்தாய் அவள் மகிழ்ச்சியாக வாழ்வதை நற்றாயிடம் சொல்கிறாள்.
விண்மேல் அமரர் விரும்பும் அமராவதி ................
மண்மேல் அடைந்தன்ன வாழ்க்கையது ஆனது......
....................................................................................
.......................................... மடமாதர் கடி மனையே
(375)(விண் = வானம்; அமரர் = தேவர்; அமராவதி = தேவலோகத் தலைநகர்; கடிமனை = சிறந்தவீடு)
அதாவது வானத்தின் மேல் உள்ள தேவர்களின் தலைநகரமாகிய அமராவதி நகரம் மண்ணில் வந்தது போன்று மகிழ்ச்சியும், செல்வமும் உடையதாகத் தலைவியின் வீடு உள்ளது என்று மகிழ்ச்சியோடு கூறுகிறாள்.தலைவன் பரத்தையிடம் சென்று வந்தபோது தலைவி அவனை ஏற்றுக் கொள்ள மறுக்கிறாள். அதற்குப் பாங்கி தலைவனை ஏற்றுக் கொள்வதே நல்ல குணம் என்று எடுத்துக் கூறுகிறாள்.
............................. உள்ளாது உனைப் பண்டு அகன்றனர்
ஆயினும் உள்ளி இப்போது
எள்ளாது வந்து உன் கடையின் நின்றார் நம்
இறைவர் குற்றம்
கொள்ளாது எதிர்கொள்வதே குணமாவது
................................ (385)(உள்ளாது = நினையாது; உனை = உன்னை; பண்டு = முன்பு; உள்ளி = நினைத்து; கடை = வாயிற்கடை; வீட்டின் முன்பகுதி; இறைவர் = தலைவர்; எதிர்கொள்வது = ஏற்றுக் கொள்வது)
‘தலைவியே! தலைவர் முன்பு உன்னைப் பற்றி நினைக்காமல் பரத்தையிடத்துப் பிரிந்து சென்றவர், இப்போது உன்னை நினைத்து உன் வீட்டின் வாயிலில் வந்து நிற்கிறார். அவரது குற்றத்தைப் பார்க்காமல் அவரை ஏற்றுக்கொள். அதுவே நல்ல குணம் ஆகும்’ என்று பாங்கி தலைவிக்கு நல்லதை எடுத்துக் கூறுகிறாள். அவளது வாழ்க்கை இனிமை உடையதாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறாள்.
இவ்வாறு கற்பியலில் இல்வாழ்க்கை நிகழ்வுகள் பற்றிய பாடல்கள் அமைந்துள்ளன.
உத்திகள் என்பவை வெளிப்பாட்டு முறைகள் (technique) ஆகும். அக இலக்கியங்களுக்கு என்றே தனியாக இரு உத்திகள் உள்ளன. அவை. 1. உள்ளுறை உவமம், 2. இறைச்சி ஆகியன. இவ்விரு உத்திகளையும் பொய்யாமொழிப் புலவர் மிகச் சிறப்பாகப் பயன்படுத்திப் பாடல் பாடியுள்ளார்.
- உள்ளுறை உவமம்
உள்ளுறுத்து இதனோடு ஒத்துப் பொருள் முடிக என
உள்ளுறுத்து இறுவதை உள்ளுறை உவமம்
(தொல்காப்பியம் - பொருளதிகாரம், 51)என்று தொல்காப்பியம் கூறுகிறது.
வெளிப்படையான உவமைபோல அல்லாமல் மறைமுகமான உவமையாக, நாமே குறிப்பாக உணர்ந்துகொள்ளும் விதமாக அமைவது உள்ளுறை உவமம். அதாவது உவமானம் சொல்லப்பட்டிருக்கும். உவமேயம் (கவிஞன் சொல்ல விரும்பும் பொருள்) நாம் ஊகித்து அறியுமாறு உள்ளே மறைத்து வைக்கப்பட்டிருக்கும்.
திருமணம் செய்து கொள்வதற்காகப் பொருள் தேடிச் செல்லும் தலைவன் (வரைவிடை வைத்துப் பொருள்வயின் பிரிதல் என்று இதைக் கூறுவார்கள்) பாங்கியிடம்,
‘நெற்கதிர் கரும்பு போல மிக உயரமாகச் செழித்து வளர்வதற்காக நீரைக் கவர்ந்து கொண்டு வரும் மழைமேகம் போல நான் வருவேன் என்று தலைவியிடம் கூறு’ என்கிறான்.
கழைபோல் வளர்நெல் கவின்பெற வாரி கவர்ந்து வரும்
மழைபோல் வருகுவன்....................................................
(260)(கழை = கரும்பு; கவின் = அழகு; வாரி = கடல்நீர்; மழை = மழைமேகம்)
‘நெற்கதிர்கள் கரும்புபோல உயரமாக - செழிப்பாக வளர்வதற்காக மழைமேகம் நீரைக் கொண்டு வருகிறது; அம் மேகம்போல் வருவேன்’ என்பது உவமை. ‘தலைவியாகிய நெற்பயிர், கரும்புபோல மகிழ்ச்சியால் செழிப்பான அழகைப் பெறுவதற்காக முகில் போன்ற நான், பொருளாகிய நீரைக் கொண்டு வருகிறேன்’ என்பது உவமைக்குள் மறைந்திருக்கிற பொருள். இவ்வாறு உள்ளுறை உவமம் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளதைக் காண்கிறோம்.
- இறைச்சி
இறைச்சி தானே பொருள் புறத்ததுவே
(தொல்காப்பியம் - பொருளதிகாரம், 225)என இறைச்சி பற்றித் தொல்காப்பியம் கூறுகிறது.
அக இலக்கியங்களில் ஒவ்வொரு திணைக்கும் உரிய மரம், பூ, விலங்கு முதலியவற்றைக் கருப்பொருள் என்று கூறுவார்கள். அக்கருப்பொருட்களை வைத்துப் பாடல் காட்சி அமைந்திருக்கும். சில இடங்களில் அக்கருப்பொருட் காட்சியினுள்ளே பேசுபவர் கூற நினைக்கும் கருத்து மறைந்திருக்கும். அதுவே இறைச்சி எனப்படும். இந்த உத்தியையும் பொய்யாமொழிப் புலவர் மிகச் சிறப்பாகக் கையாளுகிறார். சான்றாக,
களவு வாழ்க்கையில் தலைவன் தலைவியைத் திருமணம் செய்து கொள்ள முயலாது உள்ளான். அப்போது வேறு சிலர் தலைவியைப் பெண் கேட்டு வருகின்றனர். அதைத் தலைவனுக்குத் தெரிவிக்கும் பாங்கி,
வெடிக்கின்ற இப்பியுள் நித்திலம் பைத்தலை
வெம்பகுவாய்த்
துடிக்கின்ற திங்களில் தோன்றும் துறைவ.............. (232)(இப்பி = சிப்பி; நித்திலம் = முத்து; வெம்பகுவாய் = பாம்பு; திங்கள் = நிலா)
என்று தலைவனின் ஊரைப் பற்றிக் கூறுகிறாள். நெய்தல் நிலத்தைச் சேர்ந்தவன் தலைவன். அந்த நெய்தல் திணைக் கருப்பொருள் சிப்பியும், முத்தும். தலைவனின் கடற்கரையில் முத்தை உமிழ்வதற்காகச் சிப்பி வெடித்து முத்தை வெளியே தள்ளுகிறது. அந்தக் காட்சி, கிரகணத்தின்போது பாம்பு விழுங்கும் நிலாத் துடிப்பதுபோல் இருக்கிறது என்று கூறுகிறாள்.
சிப்பி வெடித்து முத்தை வெளியே தள்ளுகிறதுஇந்த இயல்பான கருப்பொருள் காட்சியின் உள்ளே வேறொரு பொருள் மறைந்துள்ளது. சிப்பி முத்தை விளைவித்தது போலத் தலைவியை அவள் பெற்றோர் வளர்த்தனர். இன்று பெண்கேட்டுச் சிலர் வந்துள்ளனர். சிப்பி முத்தை வெளியே தள்ளுவது போல வந்தவர்களுக்குப் பெண் தருவதாகப் பெற்றோர் உடன்படுகின்றனர். ஆனால் தலைவியோ தலைவனைக் காதலிக்கிறாள். அதனால் வேதனையோடு பாம்பின் வாயில் அகப்பட்ட கிரகண காலச் சந்திரன் போலத் துடிக்கிறாள்’ என்ற உட்பொருள் தோழிகூற்றில் மறைந்துள்ளது. இவ்வாறு இறைச்சிப் பொருள் அமைத்துப் பாடியுள்ளார் புலவர்.