தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

இலக்கியத் திறன்

  • 2.5 இலக்கியத் திறன்

    அக இலக்கிய மரபு மறைந்த 13ஆம் நூற்றாண்டில் பொய்யாமொழிப் புலவர் மிகச் சிறந்த அக இலக்கியமாக இந்த நூலைப் படைத்துள்ளார் என்பதே ஆசிரியரின் இலக்கியத் திறனுக்கு முழுமுதற் சான்றாக உள்ளது.

    அழகிய உவமைகளும், உருவகங்களும் நூல் முழுதும் நிரம்பி உள்ளன. தற்குறிப்பேற்ற அணி, தன்மை அணி போன்ற அணிகளும் மிகச் சிறப்பாக இந்த நூலில் படைக்கப்பட்டுள்ளன. அவற்றில் சிலவற்றை இங்குக் காணலாம்.

    2.5.1 உவமை அணி

    ஒரு பொருளைச் சிறப்பித்துக் கூறுவதற்காக மற்றொரு பொருளோடு ஒப்புமைப் படுத்திக் கூறுவது உவமை அணி ஆகும்.

    இந்நூலில் தலைவியின் அழகு பலவாறு உவமிக்கப்பட்டுள்ளது. தலைவியின் கண்களை வேல் போன்றது, மான் போன்றது, விஷம் போன்றது என்று உவமிக்கிறார். அவள் நெற்றி வில் போன்று உள்ளது ; அவள் இடை பொய் போன்று இல்லாத ஒன்றாக உள்ளது என்கிறார்.

    உழையும் வெங்காளமும் போலும் கண் (99)

    (உழை = மான்; வெங்காளம் = விஷம்)

    பொய்போலும் இடையாய் (137)

    தலைவின் உறுப்புகளுக்கு உவமையாகக் கூடிய பூ, வண்டு போன்ற பொருட்களுக்குத் தலைவியின் உறுப்புகளையே உவமையாகக் கூறுகிறார்.

    வண்டை, நல்லார் விழிபோல் இருந்தும் (8)

    (நல்லார் = பெண்கள்)

    என உவமை செய்கிறார்.

    மற்றொரு சிறப்பான உவமை! தலைவனின் காதல்நோய் கண்ட பாங்கன் அவனை, ‘சிலந்தி வலையைக் கொண்டு கட்டப்பட்டதற்காக, ஒருபோர் யானை புலம்பி நைந்தால் போல, ஒரு பெண் தன் கொங்கையால் அணைக்க நீ வருந்தினாய்’ என்று பழிக்கிறான்.

    வலிமையான யானையைச் சிலந்திநூல் கொண்டு அடக்க முடியாது; மனவலிமை மிக்க தலைவனை ஒரு பெண்ணின் காதல் வருத்தப்படுத்த முடியாது என்பது உவமையின் கருத்து.

    சிலம்பிமென்னூல் கொண்டு சுற்றவெற்றிப்
    போரார் களிறு புலம்பிநைந்தாங்கு ஒரு பூவைகொங்கை
    வாரால் அணைப்ப வருந்தினை நீ ........................... (44)

    (சிலம்பு = மலை; சிலம்பி = சிலந்திப்பூச்சி; நைந்தாங்கு = நைந்தது போல; கொங்கை வார் = வாரால் கட்டிய மார்பு)

    2.5.2 உருவக அணி

    உவமைக்கும் உவமிக்கப்படும் பொருளுக்கும் இடையே வேறுபாடு தோன்றாமல் ஒன்றுபடுத்திச் சொல்லுவது உருவக அணி ஆகும். பொய்யாமொழிப் புலவர் உருவகத்தையே மிகுதியாகப் படைத்துள்ளார். இவரது உருவகச் சிறப்புக்கு மிகச் சிறந்த சான்று இந்நூலின் முதல் பாடலே என்று கூறலாம்.

    புயலே சுமந்து பிறையே அணிந்து பொருவிலுடன்
    கயலே மணந்த கமலம் மலர்ந்தொரு கற்பகத்தின்
    அயலே பசும்பொன் கொடி நின்றதால் வெள்ளை
    அன்னம் செந்நெல்
    வயலே தடம் பொய்கை சூழ் தஞ்சை வாணன்
    மலையத்திலே (1)

    இங்குத் தலைவியின் கூந்தல் மேகமாகவும், நெற்றி பிறையாகவும், புருவம் வில்லாகவும், கண் கயலாகவும், முகம் தாமரையாகவும், முழுத்தோற்றம் பொற்கொடியாகவும் உருவகம் செய்யப்பட்டிருப்பதைக் காணலாம். (பார்க்க : 2.3.2 காட்சி)


    2.5.3 தன்மை அணி

    தஞ்சைவாணன் கோவை உவமை, உருவகம், உள்ளுறை, இறைச்சி என்று உத்திகள் நிறைந்த ஒரு சிறந்த புனைவியல் நூலாக உள்ளது. எனினும் இயல்பு நவிற்சி ஆகிய தன்மை அணியும் இதில் மிகுதியாக உள்ளது.

    அலங்காரங்கள் இன்றிப் பொருளின் இயல்பை நேரில் பார்ப்பது போலத் தோன்றுமாறு, உள்ளதை உள்ளபடி விளக்குவது தன்மை அணி ஆகும். இந்த நூல் ஓர் அகப்பொருள் நூல் ஆகும்.

    அதனால் இதில் உண்மையான வாழ்க்கை நிகழ்ச்சிகளே மிகுதியும் விளக்கப்பட்டுள்ளன. தலைவியின் அழகையோ, பாட்டுடைத் தலைவனாகிய அரசனின் நாட்டையோ விளக்கும்போது தான் உவமை, உருவகம் போன்ற அணிகள் தேவைப்படுகின்றன. மற்றபடி ஒவ்வொரு பாடலும் அகவாழ்க்கை நிகழ்ச்சிகளைக் கூறுவதால் பல பாடல்களில் இத்தன்மையணி இடம் பெறுகிறது என்று கூறலாம்.

    தலைவி தலைவனைச் சந்தித்து விட்டுச் செல்லுகிறாள். அவள் எப்படிச் செல்லுகிறாள் தெரியுமா?

    ‘அகில் புகை ஊட்டிய நீண்ட கூந்தலை ஒருகையில் ஏந்திக் கொண்டும், மற்றொரு கையில் தான் அணிந்துள்ள துகிலை ஏந்திக் கொண்டும், இரண்டு கால்களிலும் அணிந்த சிலம்புகள் ஒலிக்க நடக்கிறாள் இவ்வாறு, தலைவி நடமாடுவதை இயல்பான காட்சியாக வருணிக்கிறார் புலவர்.

    அகிலேந்து கூந்தல் ஒருகையில் ஏந்தி அசைந்து ஒருகை
    துகில்ஏந்தி ஏந்தும் துணைச் சிலம்பு ஆர்ப்ப

    (அகில் =அகிற்புகை; துணை = இரண்டு; ஆர்ப்ப =ஒலிக்க)

    2.5.4 தற்குறிப்பேற்ற அணி

    புலவர் இயற்கையாக நடக்கும் நிகழ்ச்சியின் மேல் தான் கூறவந்த கருத்தை ஏற்றிக் கூறுவது தற்குறிப்பேற்ற அணி எனப்படும். இந்நூலில் இவ்வணிக்குச் சான்றாக ஒன்றை இங்குக் காண்போம்.

    வசிஷ்டர் என்ற முனிவரின் மனைவி அருந்ததி. புராணங்களில் அவள் சிறந்த கற்புடைய பெண்ணாகக் குறிப்பிடப்படுகிறாள். முனிவர்கள் வானில் விண்மீனாக உள்ளனர் என்று புராணங்கள் கூறுகின்றன. அந்த முனிவர்களோடு சேர்ந்து அருந்ததியும் வானில் விண்மீனாக உள்ளாள். தன் கற்பின் சிறப்பால் விண்மீனாக இருக்கக்கூடிய பெருமை உடைய ஒரே பெண் இவளே.

    அந்த அருந்ததி விண்மீன் வானில் வடதிசையில் உள்ளது. தஞ்சைவாணன் கோவைத் தலைவி அருந்ததியை விடச் சிறந்த கற்புடையவள் என்று கூறவந்த ஆசிரியர் தம் கருத்தை வடதிசையில் உள்ள அருந்ததி விண்மீனின் மேல் ஏற்றித் தற்குறிப்பேற்றமாகக் கூறுகிறார். ‘தலைவியின் கற்பு நிலையை அறியாமல் அருந்ததி தலைவியை எதிர்த்து நின்று தோற்றுப் போனாள். தோற்றவர்கள் வடக்கு நோக்கித் தவம் இருப்பர். அதனால் அருந்ததியும் விண்மீனாய் வடக்கு நோக்கித் தவமிருக்கிறாள்’ என்கிறார்.

    நின்தோகை கற்பின் நிலைமை எண்ணாது எதிர்நின்று வெந்நிட்டு
    அன்றோ வடக்கிருந்தாள் மடப்பாவை அருந்ததியே (374)

    (தோகை = மயில் போன்ற தலைவி; வெந்நிட்டு = தோற்று; வடக்கிருத்தல் = தோற்றவர்கள் வடக்கு நோக்கி உண்ணாது தவமிருந்து உயிர்துறத்தல்)

    அருந்ததி விண்மீன் இயல்பாகவே வடக்கில் இருப்பது. தலைவிக்குத் தோற்றதனால் அது வடக்கு நோக்கித் தவம் செய்கிறது எனப் புலவர் தம் கருத்தை ஏற்றிச் சொல்வதால் இது தற்குறிப்பேற்ற அணி ஆயிற்று. இவ்வாறு பொய்யாமொழிப்புலவர் தம் இலக்கியத்திறத்தால் பலவகை அணிகளைக் கையாண்டு தஞ்சைவாணன் கோவையை மிகச்சிறந்த ஓர் அகப்பொருள் கோவை இலக்கியமாகப் படைத்துள்ளார்.

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2017 12:10:11(இந்திய நேரம்)