தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

சந்திரவாணனின் சிறப்பு


  • சந்திரவாணனின் சிறப்புகளாக அவனது வீரம்; கொடை; ஆட்சிச் சிறப்பு; அவன் தமிழ் வளர்த்த தன்மை; நாட்டுவளம்; வையை ஆறு ஆகியவை விளக்கப்படுகின்றன.

    2.4.1 வீரம்

    பகைவர்களுக்கு அச்சத்தைத் தரக்கூடிய வீரமுடையவனாகச் சந்திரவாணன் வர்ணிக்கப்படுகிறான்.

    .......................எதிர்ஏற்ற தெவ்வர்
    தம் ஊரை முப்புரமாக்கிய வாணன்(197)

    ...................................எதிர்த்த ஒன்னார்
    மன்மலை வேழம் திறைகொண்ட சேய்தஞ்சை
    வாணன்(16)
    சீயங்கொலோ எனத் தெவ்வென்ற வாணன்(29)

    .................................... அடையார் தமக்கு
    மகத்தில் சனி அன்ன சந்திரவாணன்(48)

    (தெவ், தெவ்வர், ஒன்னார், அடையார் = பகைவர்; சேய் = முருகன்; வேழம் = யானை; திறை = கப்பம்; சீயம் = சிங்கம்; மக = மக நட்சத்திரம்)

    ‘தம்மை எதிர்த்த பகைவர்களின் ஊரை, சிவபெருமான் முப்புரத்தை எரித்தது போல எரித்தான்; பகைவர்களின் போர் யானைகளையே திறையாகக் கொண்ட முருகனைப் போன்றவன்; பகைவர்க்குச் சிங்கம் போலக் காட்சி தரக்கூடியவன்; மேலும் மகநட்சத்திரத்தில் வரும் சனி அழிவைத் தருவதுபோலப் பகைவருக்கு அழிவைத் தரக்கூடியவன்’ என்று அவனது வீரம் சிறப்பிக்கப்படுகிறது.

    2.4.2 கொடை

    நாவலர்க்கு யானைகளைப் பரிசாக வழங்குபவன்; மேகம் போன்ற கொடையாளி; மணியும் பொன்னும் வாரி வாரி வழங்கக் கூடியவன்; பாரிவள்ளலைப் போன்றவன்; சங்க நிதிபோல் கொடுக்கும் கொடையை உடையவன்; காவிரியில் நீர் வற்றிய காலத்தில் கூடக் கற்பகத் தருவைப் போலத் தண்ணளி செய்பவன் என்று பலவாறு சிறப்பிக்கப்படுகிறான் தஞ்சைவாணன்.

    ................................... நாவலர்க்கு
    தானக் களிறு தரும் புயல் வாணன் (17)

    மணிபொன் சொரியும் கை வாணன் (25)

    ................................ களியானை, செம்பொன்
    தரும் பாரி வாணன் (37)

    வலம்புரி போல் கொடை வாணன் (40)

    காவிரி வைகிய காலத்தினும்
    தரைத்தாரு அன்ன செந் தண்ணளி வாணன் (71)

    (தானக்களிறு = மதயானை; புயல் = மேகம்; வலம்புரி = சங்கு - இங்குச் சங்கநிதி; வைகிய = வற்றிய; தாரு = கற்பகமரம்; தண்ணளி = குளிர்ந்த அருள்)

    2.4.3 தமிழ்ப் பற்று

    இவன் தமிழ்மொழியை வளர்த்த சிறப்பையும் பொய்யாமொழிப் புலவர் பாடுகின்றார்.

    தமிழ் தங்கிய தஞ்சைக் காவலன் (13)

    .......... மாறைவாணன் தமிழ்த் தஞ்சை நாடு (19)

    .............. வாணன் தமிழ்த் தஞ்சை (71)

    வாணனது நகராகிய தஞ்சாக்கூரைத் தமிழ் தங்கிய தஞ்சை என வருணிப்பதன்மூலம், அங்குத் தமிழைத் தங்கச் செய்த வாணனின் சிறப்பைப் புலவர் புலப்படுத்துகிறார்.

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2017 19:47:14(இந்திய நேரம்)