தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

அகத்திணைகளும் புறத்திணைகளும்

  • 3.2 அகத்திணைகளும் புறத்திணைகளும்

    அகத்திணைகள் ஏழற்கும் ஏழு புறத்திணைகளை இணைத்து இன்னின்ன அகத்திணைகளுக்கு இன்னின்ன புறத்திணைகள் உரியனவாகும் எனப் பிரித்து விளக்கியுள்ளமையை முன்னர்க் கண்டோம்.

    தொல்காப்பியர் புறத்திணையியலின் முதல் நூற்பாவில்

    அகத்திணை மருங்கின் அரில்தப உணர்ந்தோர்
    புறத்திணை இலக்கணம் திறப்படக் கிளப்பின்
    வெட்சி தானே குறிஞ்சியது புறனே ;
    உட்குவரத் தோன்றும் ஈர்ஏழ் துறைத்தே

    என்பதன் மூலம் அகத்திணை இலக்கணத்தை முழுமையாக உணர்ந்தோர் மட்டுமே புறத்திணை இலக்கணத்தைச் சிறப்பாக அறிய இயலும் என்ற கருத்தினைக் கூறுகிறார்.

    தொல்காப்பியர் அகப் புறப் பொருள்களைப் பிரித்து விளக்கியுள்ள அடிப்படையில் புறத்திணைப் பாகுபாடுகளைக் காண்போம்.
     

    3.2.1 குறிஞ்சியும் வெட்சியும்

    அகத்திணைக்குரிய குறிஞ்சி, புறத்திணையாகிய வெட்சி என்னும் திணை ஒழுக்கத்தைத் தனக்குப் புறத்திணையாகக் கொண்டமைக்கு நுண்ணிய காரணங்கள் உண்டு. தொல்காப்பியர்,

    வெட்சி தானே குறிஞ்சியது புறனே
    உட்குவரத் தோன்றும் ஈரேழ் துறைத்தே
    -(புறத்திணையியல், 1)

    என்று கூறுவார்.

    இந்நூற்பாவால் வெட்சித்திணைக்குரிய இடத்தையும், துறையையும் வரையறுத்துக் கூறியுள்ளார். வெட்சி என்ற புறத்திணைகுறிஞ்சி என்ற அகத்திணைக்குப் புறமாக அமைந்தமைக்குரிய காரணங்களாகப் பின்வருவனவற்றைக் குறிக்கலாம்:

    (1)

      பகை நாட்டினர் ஆநிரைகளைக் கவர்ந்து கொள்ளுதல் என்பது பசுக்கள் மேயும் குறிஞ்சி நிலத்தில் கோட்டைக்கு வெளியே (காவல் காட்டில்) கட்டப்பட்டுள்ள ஆநிரைகளைக் கவர்வதால் அதுகுறிஞ்சிக்குப் புறமாயிற்று எனலாம்.

    (2)

      மகளின் உள்ளத்தை இளைஞன் ஒருவன் களவாடுவதே குறிஞ்சித் திணை. அதே போல ஒரு மன்னன் ஆநிரைகளை, வேற்று மன்னனின் வேளையில் கவர்ந்து வருதல் இரவு வெட்சித் திணையாகும்.

    3.2.2 முல்லையும் வஞ்சியும்

    வஞ்சியாகிய புறத்திணை முல்லையாகிய அகத்திணைக்குப் புறமாகும். மாற்றார் நாடெல்லாம் தனக்கே வேண்டுமென்று நினைத்துப் போருக்குச் சென்ற வேந்தனை, ஒரு மன்னன் அஞ்சாது எதிர் சென்று போர் செய்ய முற்படுவதை வஞ்சி கூறும். இதனைத் தொல்காப்பியர்,

    வஞ்சி தானே முல்லையது புறனே
    எஞ்சா மண்நசை வேந்தனை வேந்தன்
    அஞ்சுதகத் தலைச்சென்று அடல்குறித் தன்றே
    (புறத்திணையில்,6)

    என்று கூறுவார்.

    இத்திணையை முல்லைத் திணைக்குப் புறமாகக் கூறியதற்கு நுண்ணிய காரணம் உண்டு. படையெடுத்துச் செல்லும்போது படை இளைப்பாறவும் நீர் அருந்தி, உணவு சமைத்து உண்ணவும், நிழல் சூழ்ந்த இடம் தேவைப்படும். நிழல் சூழ்ந்த காடும், கார் காலத்தில் வேண்டுமளவு நீரும் தேவைப்படுவதால் முல்லைக்கு வஞ்சி புறத்திணையாயிற்று. மேலும் தலைவனுக்காகக் காத்திருக்கும் தலைவியின் நிலையும் இங்குப் போர்க்களத்தில் வெற்றிக்காகக் காத்திருக்கும் வீரனுக்குப் பொருந்தும்.


    3.2.3 மருதமும் உழிஞையும்

    உழிஞை தானே மருதத்துப் புறனே
    முழு முதல் அரணம் முற்றலும் கோடலும்
    அனைநெறி மரபிற்று ஆகும் என்ப
    (புறத்திணையில்,
    8)

    என்று தொல்காப்பியர் உழிஞைத் திணையை மருதத்துக்குப் புறத்திணையாகக் கூறுவார்.

    அரண் என்பது இயற்கையான, மற்றும் செயற்கையான அரண்களாகும். உழிஞைத் திணை மருதத்திற்குப் புறமாதற்குரிய காரணம் வருமாறு :வஞ்சியில் போரிட்டுத் தோற்ற வேந்தன், தன் நாடு சென்றுஅரண்மனைக்குள் புகுந்து தாளிட்டுக் கொண்டிருப்பான். போரிட்டு வென்ற வேந்தன் அவன் நாட்டில் புகுந்து இரவில் முற்றுகையிடுவான். போரிடும் காலம் விடியற்காலமாகும். மருதத் திணையில் ஊடல் கொண்ட மகளிர், கணவன் மார்களுக்குக் கதவடைத்துத் தனிமையில் இருப்பர். தலைவனும் விடியற்காலையில் வந்து கதவினைத் திறந்து உள்புக நினைப்பது மருத ஒழுக்கமாகும். இதனால் உழிஞையும் மருதமும் இணையாயின.

    3.2.4 நெய்தலும் தும்பையும்

    தும்பை என்னும் புறத்திணை நெய்தல் என்னும் அகத்திணைக்குப் புறமாகும்.

    இருபெரும் வேந்தரும் ஒரு களத்தில் போரிடுவர். அதற்கு, களரும் மணலும் பரந்த நிலமே போரிடும் களமாக அமையும். அவ்வாறு போரிடுவதற்குப் போதிய இடம் கடலைச் சார்ந்த மணல் பகுதியாக இருப்பது சிறப்புடையது கதிரவன் மறையும் காலம் போர் முடியும் நேரமாகும். எனவே நெய்தலுக்கு உரிய எற்பாடு நேரமே தும்பைக்கும் உரியதாயிற்று. மேலும் போர்க்களம் சென்ற காதலன் உயிருடன் திரும்பி வருதல் அவ்வளவு உறுதியில்லை. எனவே நெய்தலின் உரிப்பொருளாகிய இரங்கலும் இரங்கல் நிமித்தமும் தும்பைக்குப் பொருந்துவதாயின.

    இதனைத் தொல்காப்பியரும்

    தும்பை தானே நெய்தலது புறனே ;
    மைந்து பொருளாக வந்த வேந்தனைச்
    சென்று தலை அழிக்கும் சிறப்பிற்று என்ப
    (புறத்திணையில்,12)

    என்று உரைப்பர்.
     

    3.2.5 பாலையும் வாகையும்

    வாகை தானே பாலையது புறனே
    தாவில் கொள்கைத் தத்தம் கூற்றைப்
    பாகுபட மிகுதிப் படுத்தல் என்ப
    (புறத்திணையில்,15)

    என்று தொல்காப்பிய நூற்பா கூறும்.

    வாகை என்பது வெற்றியைக் குறிக்கும். வாகைத் திணை பாலை என்னும் அகத்திணையினது புறமாகும். பாலைக்கு வாகை எவ்வாறு புறமானது என்பதற்குக் கீழ்வரும் காரணங்களைக் கூறலாம்.

    1.

      பாலை தனக்கென ஒரு நிலமின்றி எல்லா நிலத்திலும் வறட்சிக் காலத்தில் உருவாகும். அதுபோல வாகையும் எல்லா நிலத்திலும் நிகழ்வது.

    2.

      காதலுற்ற தலைவனும் தலைவியும் புணர்ச்சியினின்று நீங்கி இல்லறம் நிகழ்த்தி, பொருள் தேடுவதற்காகப் பிரிவது பாலைத் திணை யாகும். வாகையில் புகழ் எய்துவதற்காக, வெற்றி பெற்ற வேந்தன் துறக்கம் (வீடுபேறு) பெறும் கருத்தினால் பிரிவான். எனவே இரண்டிலும் பிரிவு உண்டு.

    3.

      பாலை அறக் காதலை வளர்த்து, மீண்டும் இன்பத்தை மிகுவிப்பது போல, வாகை மறக் காதலை வளர்த்து வெற்றி இன்பம் விளைவிப்பதாலும், பாலை போல வாகையும் குறிப்பிட்ட நிலம் என்ற வரையரையின்றி எங்கும் நிகழுவதாதலாலும் இரண்டும் ஒப்புமையாயின.

    4.

      பாலைக்குரிய பெரும்பொழுதும், சிறுபொழுதுமே போர் நிகழ்ச்சி முடிவு பெறுதற்குச் சிறந்தனவாதலின் நிலம், பொழுது என்னும் இரண்டு முதற்பொருள்களால் வாகை பாலைக்குப் புறமாயிற்று. எத்துறையிலும் வெற்றி காண வேண்டுமாயின் தலைவியைப் பிரிந்தே ஆதல் வேண்டும். எனவே உரிப்பொருளாலும் புறமாயிற்று.

    3.2.6 கைக்கிளையும், பாடாண் திணையும்

    பாடாண் திணையானது கைக்கிளைக்குப் புறத்திணையாகும்.

    கைக்கிளையாவது ஒரு நிலத்திற்கோ, ஒரு பொழுதுக்கோ உரியதாகாமல் எல்லா நிலத்திற்கும், எல்லாப் பொழுதுக்கும் உரிய ஒருதலைக் காமமாகும். அதுபோல இதுவும் ஒரு பாலுக்கு உரியது அன்று. ஒருவனை ஒருவன் ஏதேனும் காரணம் பற்றிப் பாராட்டி நிற்பது பாடாண் திணையாகும்.

    வெட்சி முதல் வாகை ஈறாக உள்ள திணைகள் போர் தொடுப்போரும் எதிர்ப்போருமாகிய இருவருக்கும் உரியது; காஞ்சியாவருக்கும் உரியது ;அவ்வாறு இல்லாமல் பாடாண் திணைபாடப்படுபவர், பாடுபவர் என்னும் இருவருள் பாடுவோர் விருப்பம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டிருத்தலின் கைக்கிளை போல இதுவும் ஒருவர் விருப்பமாயிற்று.

    இதனைத் தொல்காப்பியர்,

    பாடாண் பகுதி கைக்கிளைப் புறனே
    நாடுங் காலை நாலிரண்டுடைத்தே
    (புறத்திணையில்,20)

    எனக் கூறுவார்.
     

    3.2.7 பெருந்திணையும் காஞ்சியும்

    காஞ்சி என்பது நிலையாமையைக் குறிக்கும். காஞ்சித் திணை அகத்திணையாகிய பெருந்திணைக்குப் புறத்திணையாகும். அது நன்று அல்லாத சிறப்பினை உடையது; மேலும் நிலைபேறில்லாத இவ்வுலகத்தைப் பற்றிய வழியினைக் கூறுவது ஆகும்.

    நன்றல்லாத சிறப்பாவது செயலால் நன்றல்லாதது போல் தோன்றி, கொள்கையால் சிறந்திருத்தல். அன்பின் ஐந்திணைகளில் பெருந்திணையாகிய மடல் ஏறுதல் போல்வன வரின் அவற்றிற்குப் புறமாக ஒதுக்கப்படுதல் போல, வெட்சி முதலிய புறத்திணைகளில் நிலையாமை உணர்வு வெறுக்கப்பட்டு ஒதுக்கப்படுதலின், காஞ்சி பெருந்திணைப் புறமாயிற்று.

    இதனைத் தொல்காப்பியர்,

    காஞ்சி தானே பெருந்திணைப் புறனே
    பாங்கரும் சிறப்பின் பல்லாற் றானும்
    நில்லா உலகம் புல்லிய நெறித்தே.
    (புறத்திணையில்,
    18)

    எனக் கூறுகிறார்.

    தன் மதிப்பீடு : வினாக்கள் - I

    1.
    புறப்பொருள் என்றால் என்ன?
    2.
    தொல்காப்பியர் அகத்திணையியலைக் கூறி, அதன் பிறகு புறத்திணையியல் கூறக் காரணம் யாது?
    3.
    புறத்திணைகள் ஏழனைக் கூறுக.
    4.
    குறிஞ்சியும் வெட்சியும் பொருந்துமாற்றை விளக்குக.
    5.
    மருதமும் உழிஞையும் எவ்வாறு பொருந்தும்?
    6.
    கைக்கிளையும் பாடாண் திணையும் குறித்து எழுதுக
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2017 12:38:16(இந்திய நேரம்)