Primary tabs
-
6.2 பாடிய புலவர்கள் பற்றிய செய்திகள்
முதற் பத்தைப் பாடிய புலவர் பற்றித் தெரியவில்லை. இருப்பினும் பாடப்பட்ட அரசன் உதியன் சேரலாதன் என்று அறிஞர் கருதுவர்.
இரண்டாம் பத்தைக் குமட்டூர்க் கண்ணனார் என்பவர் பாடியுள்ளார். இவர் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைப் பாடி உம்பற்காட்டில் ஐந்நூறு ஊர்களை இறையிலியாகப் பெற்றார் (இறையிலி - வரியற்ற இலவச நிலம்) குமட்டூர் இவரின் ஊராகும்.
மூன்றாம் பத்தைப் பாடியவர் கௌதமனார். கௌதமனார் என்பது இவரது இயற்பெயராகும். பாலைத் திணையைப் பாடுவதில் வல்லவராக இருந்ததால் இவர் பாலைக் கௌதமனார் எனப்பட்டார். மூன்றாம் பத்தில் இவர் பல்யானைச் செல்கெழு குட்டுவனைப் புகழ்ந்து பாடியுள்ளார். இவர் அந்தணர். ஒழுக்கத்தை உயிராகப் போற்றிய மனிதர். இவர் பத்து வேள்விகள் செய்து மனைவியொடும் விண்ணுலகு சென்றார் எனக் கூறப்படுகிறது.
நான்காம் பத்தைப் பாடியவர் காப்பியாற்றுக் காப்பியனார் என்பவர். இப்புலவரின் ஊர் காப்பியாறு. இயற்பெயர் காப்பியன். இதனால் இவரைக் காப்பியாற்றுக் காப்பியனார் என அழைக்கின்றனர். இவர் பாடிய மன்னன் களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல் என்பவனாவான். இதைப் பாடியதற்குப் பரிசிலாக இந்த அரசனிடம் நாற்பது நூறாயிரம் பொன்னும், ஆட்சியில் ஒரு பகுதியும் பெற்றுள்ளார்.
ஐந்தாம் பத்தைப் பாடியவர் பரணர். இவரோடு ஒத்த புலவர் கபிலர். எனவே இருவரையும் கபில பரணர் என்றே கூறிவந்தனர். இவரது பாடல்களில் வரலாற்றுச் செய்திகள் இடம்பெறும். இவர் ஐந்தாம் பத்தில் கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவனைப் பாடியுள்ளார். சங்க இலக்கியங்கள் பெரும்பாலானவற்றில் இவரது பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இவர் செங்குட்டுவனைப் பாடியதால் உம்பற்காட்டு வருவாயையும், அவன் மகன் குட்டுவன் சேரலையும் பரிசாகப் பெற்றார்.
ஆறாம் பத்தைப் பாடியவர் காக்கைபாடினியார் நச்செள்ளையார் ஆவார். செள்ளை என்ற சொல், தாய் எனப் பொருள்படும். ‘ந’ என்பது சிறப்பை உணர்த்துவது. இவர் பெண்பால் புலவர் என்பதைச் செள்ளை என்ற சொல்லால் அறியலாம். காக்கையைப் பற்றிப் பாடியதால் காக்கைபாடினியார் என அழைக்கப்பட்டார். இவர் ஆடுகோட்பாட்டுச் சேரலாதனை ஆறாம் பத்தில் பாடினார். அவரது பாட்டைக் கேட்டு மகிழ்ந்த மன்னன் அவருக்கு ஒன்பது துலாம் பொன்னும், நூறாயிரம் பொற்காசும் பரிசாகத் தந்தான். தனது அவைக்களப் புலவராகவும் சேர்த்துக் கொண்டான்.
ஏழாம் பத்தைப் பாடியவர் கபிலர். சங்கப் புலவரில் தலை சிறந்தவர். இவரது ஊர் வாதவூர். இவர் குறிஞ்சித் திணையைப் பாடுவதில் வல்லவர். பாரியின் நெருங்கிய நண்பர். இவர் செல்வக்கடுங்கோ வாழியாதனை ஏழாம் பத்தில் புகழ்ந்து பாடி, அதற்குப் பரிசாக அம்மன்னன் நூறாயிரம் காணம் பொன் தந்ததுடன், நன்றா என்ற குன்றின் மீது ஏறி நின்று கண்ணில் கண்ட ஊரைஎல்லாம் இவருக்கு அன்பளிப்பாகத் தந்தான்.
எட்டாம் பத்தைப் பாடியவர் அரிசில்கிழார். கிழார் என்பதற்கு உரிமையாளர் எனப் பெயர். அரிசில் என்பது இவரது ஊர். எனவே அரிசில் கிழார் என அழைக்கப்பட்டார். இயற்பெயர் தெரியவில்லை. இவர் பெருஞ்சேரல் இரும்பொறையைப் பாடியுள்ளார். இப்பத்தைப் பாடியதற்காக அரசு கட்டிலையும், ஒன்பது நூறாயிரம் பொற்காசுகளையும் பரிசிலாகப் பெற்றார்.
ஒன்பதாம் பத்தைப் பாடியவர் பெருங்குன்றூர்கிழார் ஆவார். இவர் ஊர் பெருங்குன்றூர் ஆகும். இயற்பெயரை அறிய முடியவில்லை. ஒன்பதாம் பத்தில் குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறையை இவர் பாடியுள்ளார். அதற்குப் பரிசாக முப்பத்திரண்டாயிரம் பொற்காசுகளையும், ஊரும் மனையும் வாழ்வதற்கு மலையும், அணிகலனும் பெற்றார்.
பத்தாம் பத்து யானைக்கண்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறையைப் பாடியதாக இருக்கலாம் என அறிஞர் கருதுவர். பாடிய புலவர் பெயரோ, பெற்ற பரிசிலோ தெரியவில்லை.
தன் மதிப்பீடு : வினாக்கள் - I