Primary tabs
- 2.2 குறிஞ்சித் திணையின் முப்பொருள்கள்
நிலமும் பொழுதும் முதற்பொருள் என்பதை அறிவீர்கள். நிலத்திற்கு உரிய தெய்வம், மக்கள், பறவை, விலங்கு, ஊர், நீர். பூ, மரம், உணவு, பறை, பண், யாழ், தொழில் முதலியன.
கருப்பொருள்கள் என்பதையும் அறிவீர்கள். நிலத்திற்குரிய மக்களின் ஒழுக்கமே உரிப்பொருள் என்பதை அறிவீர்கள். குறிஞ்சித் திணைக்கு உரிய முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் ஆகியவற்றை இப்பகுதியில் அறியலாம்.
குறிஞ்சித் திணைக்கு உரிய நிலம் மலையும் மலைசார்ந்த நிலமும் ஆகும். பெரும்பொழுது கூதிர்காலம்(குளிர்காலம், முன்பனிக்காலம் ஆகியன). ஐப்பசி, கார்த்திகை மாதங்களைக் குளிர்காலம் என்பர். மார்கழி, தை மாதங்களை முன்பனிக்காலம் என்பர். சிறுபொழுது யாமம். யாமம் என்பது இரவு பத்து மணி முதல் அதிகாலை இரண்டு மணி வரை உள்ள பொழுதாகும்.
குறிஞ்சித் திணைக்குரிய கருப்பொருள்கள்: தெய்வம் - முருகன்; மக்கள் - சிலம்பன், வெற்பன், குறவன், குறத்தி; பறவை - மயில், கிளி; விலங்கு - புலி, கரடி, பன்றி, யானை; ஊர் - சிறுகுடி; நீர் - சுனை, அருவி; பூ - குறிஞ்சி, காந்தள், வேங்கை; மரம் - சந்தனம், அகில், தேக்கு, அசோகம்; உணவு - தினை, மலைநெல், கிழங்கு; பறை - வெறியாட்டுப் பறை, தொண்டகப் பறை; பண் - குறிஞ்சிப்பண்; யாழ் - குறிஞ்சியாழ்; தொழில் - தேனெடுத்தல், தினைப்புனம் காத்தல், கிழங்கெடுத்தல்,
குறிஞ்சித் திணைக்கு உரிய உரிப்பொருள் புணர்தலும், புணர்தல் தொடர்பான ஒழுக்கமும். புணர்தல் என்பது கூடுதல், சேருதல் என்று பொருள்படும். அதாவது, தலைவனும் தலைவியும் பிறர் அறியாமல் கூடி மகிழ்தல். புணர்தல் என்பது கூடல் என்ற சொல்லாலும் குறிக்கப்படும்.