தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

குறிஞ்சித் திணையின் சிறப்புகள்

  • 2.4 குறிஞ்சித் திணையின் சிறப்புகள்

    அறத்தொடு நிற்றல், வரைவு கடாவுதல், இற்செறிப்பு, இரவுக்குறி, குறிஞ்சியைப் போற்றல், குறிகேட்டல், தினைப்புனம் காத்தல் முதலியன குறிஞ்சித் திணைக்குச் சிறப்புச் சேர்க்கும் நிகழ்வுகள் ஆகும்.

    2.4.1 அறத்தொடு நிற்றல்

    அகத்திணை மாந்தர்களின் மன, மண ஒழுக்கங்களைக் களவு, கற்பு என்ற இரு பிரிவுகளில் அடக்குவர். இவ்விரண்டையும் இணைத்து நிற்பது அறத்தொடு நிற்றலாகும். தலைவியின் களவு ஒழுக்கத்தை, அதாவது பிறருக்குத் தெரியாமல் தலைவன்-தலைவி மனங்கள் ஒன்று சேர்ந்ததை உண்மையோடு வெளிப்படுத்தலே அறத்தொடு நிற்றல் ஆகும். தலைவி,தோழி, செவிலி, நற்றாய் என ஒவ்வொருவரும் அறத்தொடு நிற்பதுண்டு. அறத்தொடு நிற்றலின் விளைவு தலைவியை அவள் விரும்பிய தலைவனுடன் கற்பு வாழ்க்கையில் இணைப்பதாகும். தலைவியைத் தலைவனுக்குத் திருமணம் செய்வித்தலாகும்.

    தலைவிக்கு உடனிருந்து பிறர் அறியாமல் களவுக் காதலுக்கு உதவியவள் தோழி. களவுக் காதல் கற்பாக மாற வேண்டும். காதல் வெளிப்பட்டுத் திருமணம் நிகழ வேண்டும். ஆதலால் வாய்ப்பு ஏற்படும் பொழுது தோழி செவிலிக்குத் (செவிலி-வளர்ப்புத்தாய்) தலைவியின் காதலைக் குறிப்பாகப் புலப்படுத்துகிறாள். களவை வெளிப்படுத்தல் என்று கூறாமல் அறத்தொடு நிற்றல் என்று பெயர் வைத்துள்ளது சிறப்பாகும். தலைவியின் கற்பு அறத்தைக் காப்பதற்காகக் களவு உண்மையை வெளிப்படுத்துவதால் இது அறத்தொடு நிலை என்று சொல்லப்படுகிறது.

    அகவன் மகளே ! பாடுக பாட்டே !
    இன்னும் பாடுக பாட்டே அவர்
    நன்னெடும் குன்றம் பாடிய பாட்டே !

    (குறுந்தொகை- 23 : 3-5, ஒளவையார்)

    (அகவன் மகள் = குறிசொல்லும் பெண்; நன்னெடும் =நல்ல நெடிய; குன்றம் = மலை)

    ஒரு குறிப்பிட்ட மலையைச் சார்ந்த தலைவன் ஒருவனை விரும்பினாள் தலைவி. செவிலித்தாய் தலைவியின் போக்கில் மாற்றத்தை உணர்கிறாள். எனவே குறத்தியை அழைத்துத் தலைவியின் மாற்றத்துக்குக் காரணம் அறியக் குறி கேட்கிறாள். குறத்தி குறி கூறுமுன் வழக்கப்படி பல மலைகளையும் பற்றிப் பாடத் தொடங்குகிறாள். தலைவனுடைய மலையைப் பாடும் போது தோழி குறுக்கிட்டுக் கூறுகிறாள் : “குறத்தியே ! பாடு, பாடு, அவருடைய மலையை மட்டுமே பாடிக் கொண்டேயிரு” என்கிறாள்.

    இவ்வாறு குறி கூறுபவளைப் பார்த்து அவர் மலையை மட்டுமே பாடும் என்பது தாய்க்கு ஐயத்தை உறுதியாக ஏற்படுத்தும். அவர் மலை என்பதில் உள்ள குறிப்பு தலைவியின் மாற்றத்திற்கான காரணத்தைத் தாய்க்கு வெளிப்படுத்திவிடும். களவு வெளிப்பட்ட பின் திருமண ஏற்பாடுகள் தொடங்கிவிடும். இதுவே தோழியின் எதிர்பார்ப்பு. இவ்வாறு குறிப்பாக நிகழ்வதே அறத்தோடு நிற்றல் நிகழ்ச்சி.

    குறிஞ்சிப் பாடல்களை இயற்றுவதில் மிகச் சிறந்தவர் கபிலர். ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழின் பெருமையை எடுத்துச் சொல்லக் கபிலர் பாடியது குறிஞ்சிப்பாட்டு. 261 அடிகளை உடைய குறிஞ்சிப்பாட்டு அறத்தொடு நிற்றல் துறையில் அருமையாக அமைந்துள்ளது. தோழி செவிலித்தாய்க்குக் கூறும் கூற்றாக இப்பாட்டு அமைந்துள்ளது.

    அன்னாய் வாழி வேண்டு அன்னை
    (குறிஞ்சிப்பாட்டு - 1)

    (அன்னாய்= அன்னையே; வாழி = வாழ்க; வேண்டு=விரும்பிக் கேள் அன்னை = அன்னையே)

    குறிஞ்சிப்பாட்டின் இம்முதல் அடி அறத்தொடு நிற்க விரும்பும் தோழி செவிலித்தாயின் கவனத்தைத் தன்முகமாகத் திருப்பப் பேசும் பேச்சுத் தொடக்கம். தன்னை நோக்கித் திரும்புபவள் தன் சொல்லின் உண்மையை நோக்கித் திரும்புவாள் என்று தோழி நம்புகிறாள்.

    களவு ஒழுக்கத்தால் தலைவியின் மேனி (உடல்), ஒழுக்கம் (இயல்புகள்) இவை வேறுபடுகின்றன. செவிலி, வேலனையும் கட்டுவிச்சியையும் (கட்டுவிச்சி - நெல்மணியை முறத்தில் இட்டுக் குறிசொல்பவள்) வரவழைத்துக் காரணம் கேட்கிறாள். அதனால் எப்பயனும் விளையவில்லை. இந்நிலையில் தலைவி தோழியிடம், ‘தோழி! நம் வீட்டுக் கட்டுக் காவலை மீறிச் சென்று, தலைவனும் நானும் கொண்ட காதலைத் தாயிடம் சொல்வது தவறாகுமா?’ என்று கேட்கிறாள்.

    நெடுந்தேர் எந்தை அருங்கடி நீவி
    இருவேம் ஆய்ந்த மன்றல் இதுஎன
    நாம்அறி வுறாலின் பழியும் உண்டோ?

    (குறிஞ்சிப்பாட்டு: 20-22)

    (எந்தை = என்தந்தை, அருங்கடி = அரிய காவல்; நீவி = கடந்து; இருவேம் ஆய்ந்த = தேர்ந்து கொண்ட; மன்றல் = களவுமணம்)

    “தோழியே ! தாம் விரும்பியவர்க்கு என்னை மணம் முடிக்க நினைக்கின்றனர் தாயும் தந்தையும். அவர்களது விருப்பமும், எனது மனமும் ஒன்றிப் போகுமாறு செய்ய வேண்டும். ‘காவலைக் கடந்து நானும் தலைவனும் தேர்ந்து கொண்ட மணம் இது’ என்று நாமே தாயிடம் எடுத்துச் சொன்னால் புகழே ஆகும். பழி ஆகாது”, இவ்வாறு தலைவி தோழியை அறத்தொடு நிற்கத் தூண்டுகிறாள். அதன் படியே குறிஞ்சிப்பாட்டு முழுவதுமாகத் தோழி அறத்தொடு நிற்கிறாள். தினைப்புனம் காக்குமாறு செவிலி தலைவியையும் தோழியையும் அனுப்பிய ஒருநாள், தலைவியை நோக்கி வந்த சினம் கொண்ட யானையிடமிருந்து தலைவன் காப்பாற்றியதையும், அன்று முதல் அவர்களுக்கிடையே தோன்றிய காதலையும், தலைவன் தலைவியை மணந்து கொள்வதாக அருவிநீர் உண்டு வாக்குறுதி (சத்தியம்) அளித்ததையும், அவன் அழகையும், பண்புகளையும், குடும்ப வளத்தையும் எல்லாம் விரிவாகக் கூறிச் செவிலியின் மனம், காதலர் காதலுக்கு ஆதரவாக இசையும் வண்ணம் முயல்கிறாள் தோழி.

    குறிஞ்சித்திணைக்கு மிகுந்த நயம் சேர்ப்பது அறத்தொடு நிற்றல் துறையாகும்.

    2.4.2 வரைவு கடாவுதல்

    இரவில் வந்து தலைவியைச் சந்தித்துத் திரும்புகிறான் தலைவன். இந்நிலை நீடிக்கிறது. தலைவனிடம் தலைவியை விரைவில் மணந்து கொள்ளுமாறு வேண்டுகிறாள் தோழி. இதனையே வரைவு கடாவுதல் (மணந்துகொள்ள வேண்டுதல் அல்லது தூண்டுதல்) என்பர். சூழலை விளக்கி மணம் புரியுமாறு தலைவனைத் தோழி வேண்டுவது என வரைவு கடாவுதலுக்குப் பொருள் கொள்ளலாம். (வரைவு : திருமணம்; கடாவுதல்; வேண்டுதல்)

    வரைவு கடாவுதல் குறிப்பாலும், வெளிப்படையாலும் அமையப் பெறும். குறிப்பாய் உணர்த்தும் போது பயனற்றுப் போனால் மட்டுமே வெளிப்படையாய்க் கூறுதல் மரபு.

    ஓங்கல் வெற்ப
    ஒருநாள் விழுமம் உறினும், வழிநாள்
    வாழ்குவள் அல்லள்என் தோழி...
    கொடுந்தேன் இழைத்த கோடுஉயர் நெடுவரை
    பழம்தூங்கு நளிப்பின் காந்தள்அம் பொதும்பில்
    பகல்நீ வரினும் புணர்குவை
    ...
    (அகநானூறு-18 : 8-10; 14-16, கபிலர்)

    (ஓங்கல் = உயர்ந்த; வெற்ப = மலைநாடனே!; விழுமம்உறினும் = துன்பம் அடையினும்; வழிநாள் = மறுநாள் கொடுந்தேன் = வளைந்த தேன்கூடு;  கோடு = உச்சி; நளிப்பு = செறிவு; பொதும்பு = புதர்; புணர்குவை = சேர்வாய்)

    வரைவு நீட்டிக்கின்றான் தலைவன். அதாவது, திருமணம் செய்ய முயலாமல் காலம் கடத்துகிறான். இரவில் வந்து தலைவியைச் சந்திக்கின்றான். இரவு வருகின்றவனைப் பகலில் வா என்று இப்பாடலில் தோழி கூறுகிறாள்.

    “உயர்ந்த மலைநாடனே ! இரவில் வரும் உனக்கு ஒருநாள் துன்பம் நேர்ந்தாலும் என்தோழி மறுநாள் உயிர்வாழ மாட்டாள். வளைந்த தேன்கூடுகள் கட்டப்பட்டுள்ள உயர்ந்த மலைச்சாரல் எம் ஊர். அம்மலைச் சாரலில் பழங்கள் பழுத்துத் தொங்கும் மரச்செறிவில் உள்ளது காந்தள் புதர். அப்புதரில் நீ பகற்காலத்தில் வந்தால் தலைவியைக் கூடலாம்.”

    இப்பாடல் தோழியின் நாவன்மைக்கு மிகச்சிறந்த சான்றாகிறது. பகலில் வரலாம் என அவள் கூறினாலும் பகலில் தேன் எடுக்க வருபவராலும், பழம் பறிக்க வருபவராலும், காந்தள் மலர் கொய்ய வருபவராலும் இடையூறு ஏற்படும் என்பதை மறைமுகமாக உணர்த்துகிறாள். ஆதலால் நீ விரைந்து இவளை மணந்து கொள்வதே நன்மை பயக்கும் என்பதைக் குறிப்பால் உணர்த்துகிறாள்.

    வேரல் வேலி வேர்க்கோட் பலவின்
    சாரல் நாட ! செவ்வியை ஆகுமதி !
    யார்அஃது அறிந்திசி னோரே? சாரல்
    சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கி யாங்குஇவள்
    உயிர்தவச் சிறிது ; காமமோ பெரிதே

    (குறுந்தொகை- 18, கபிலர்)

    (வேரல் = மூங்கில்; வேர்க்கோட்பலா = வேரில்குலை உடைய பலாமரம்; தவ = மிக)

    இப்பாடலில் விரைந்து வந்து மணக்குமாறு தலைவனுக்குக் குறிப்பால் உணர்த்துகிறாள் தோழி.

    “வளர்ந்த மூங்கிலை வேலியாகக் கொண்ட மலைச்சாரல் நாட்டினனே! உனது நாட்டில் வேலியின் உள்ளே வேரில் குலைகளை உடைய பலா மரங்கள் நிறைந்திருக்கும். எங்கள் மலையிலோ பலாவின் உயர்ந்த சிறு கிளையில் தாங்க முடியாதபடி பெரிய பழம் தொங்கும். அந்தக் கிளைபோல் தலைவியின் உயிர் மிகச் சிறியது. பெரிய பழம்போல் அவ்வுயிர் சுமக்கும் காமமோ பெரியது. யார் இதனை அறிவார்? நீ விரைந்து வந்து அவளை மணந்துகொள்” என்பது பொருள்.

    2.4.3 இற்செறிப்பும் இரவுக் குறியும்

    களவொழுக்கத்தில் ஈடுபட்ட தலைவியின் உடல் மாறுபாடு கண்டதாய் அவளை வெளியில் செல்ல விடாது வீட்டின் உள்ளேயே நிறுத்திக் கொள்வாள். இந்த மரபினை இற்செறிப்பு என்பர். (இல் - வீடு; செறிப்பு - தடுத்து நிறுத்திக் கொள்ளல்)

    பாரி
    பலவுறு குன்றம் போலப்
    பெருங்கவின் எய்திய அருங்காப் பினளே

    (நற்றிணை-253 : 7-9, கபிலர்)

    (பலவுறு = பலாமரம் நிறைந்த; அருங்காப்பு = அரிய காவல்; கவின் = அழகு)

    வள்ளல் பாரியின் பலாமரம் நிறைந்த பறம்பு மலைபோலப் பேரழகு வாய்ந்தவள் தலைவி. அத்தலைவி அரிய காவலில் வைக்கப்பட்டுள்ளாள்.

    இவ்வாறு இற்செறிப்பு என்ற அருங்காவல் வைப்பு, பல பாடல்களில் இடம் பெறுகிறது.

    தலைவி இற்செறிக்கப்பட்ட பின் அவளைப் பகலில் சந்திக்க இயலாதவன் ஆகிறான் தலைவன். இரவு நேரத்தில் அவளைச் சந்திக்க வருகின்றான். இரவில் வந்து தலைவியைச் சந்திக்கத் தோழி ஏற்பாடு செய்து வைக்கும் இடம் இரவுக் குறி எனப்படும். தொடர்ந்து இரவில் வரும் அவனைத் தடுத்து இனிமேல் ‘இரவில் வராதே, மணம் புரிந்துகொள்’ என்று குறிப்பாகவும், வெளிப்படையாகவும் சொல்கிறாள் தோழி. இதனை இரவுக் குறி மறுத்தல் என்று கூறுவர்.

    பகல்நீ வரினும் புணர்குவை
    (அகநானூறு- 18: 16, கபிலர்)

    முன்னர் வரைவு கடாவுதலுக்குச் சான்றாகப் பார்த்த இப்பாடல் இரவுக்குறி மறுத்தற்கும் சான்றாகிறது.

    இரவில் வரும் தலைவன் தலைவியைச் சந்திக்க முடியாமல் திரும்பிச் செல்லுமாறு நேர்கின்ற தடைகள் பற்றிக் கூறுகின்றது குறிஞ்சிப் பாட்டு.

    இரவரல் மாலைய னேவரு தோறும்
    காவலர் கடுகினும் கதநாய் குரைப்பினும்
    நீதுயில் எழினும் நிலவுவெளிப் படினும்

    (குறிஞ்சிப்பாட்டு : 239-241) (இரவரல் மாலையன் = இரவில் வரும் தன்மை உடையவன்; வருதோறும் = வரும்போதெல்லாம்; காவலர் = ஊர்க்காவலர்; கடுகினும் = காவல் செய்ய வந்தாலும்; கதநாய் = சினம் உடைய நாய்; நீ துயில் எழினும் = செவிலியான நீ உறக்கம் நீங்கி எழுந்தாலும்)

    காவலர், சினம் கொண்ட நாய், நிலவு, செவிலியின் விழிப்பு ஆகிய பல தடைகளை வென்று ஒவ்வொரு நாளும் இரவில் தலைவியைச் சந்திப்பது தலைவனுக்குப் பெருஞ்சாதனை ஆகிறது.

    2.4.4 குறிஞ்சியைப் போற்றல்

    மலைப்பகுதியில் மட்டுமே காணப்படும் மலர் குறிஞ்சி மலர்; கரிய கொம்பினில் பூப்பது; இது பன்னிரண்டு ஆண்டுக்கு ஒரு முறை மலரும் தன்மையது. குறிஞ்சி நிலத்தோர் தம் வாழ்வின் சிறந்த கூறாக இம்மலரைப் போற்றுகின்றனர்.

    சாரல்
    கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு
    பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே

    (குறுந்தொகை - 3: 2-4, தேவகுலத்தார்)

    தலைவி, மலைநாடனின் நட்பு மிகவும் பெரியது. பரந்தது உயர்ந்தது என்று கூற விரும்புகிறாள். எத்தகைய மலை நாட்டிற்குத் தலைவன் என்று கூறும் போது கரிய கிளையில் பூக்கும் குறிஞ்சி மலரை நினைக்கிறாள். குறிஞ்சித்தேன் மிகவும் இனியது. குறிஞ்சி மலர்களில் உள்ள தேனை எடுத்து வண்டுகள் பெரிய தேன்கூட்டைக் கட்டியிருக்கும் மலைநாடன் என்று அவனைக் குறிப்பிடுகிறாள். சிறப்பான குறிஞ்சித் தேன் போன்றது தங்களது காதல் என உணர்த்துகிறாள்.

    குறிஞ்சிப்பாட்டில் கபிலர் 99 வகை மலர்களை அடுக்கிக் கூறுகிறார். அவற்றுள் குறிஞ்சியும் உண்டு.

    ஒண்செங் காந்தள் ஆம்பல் அனிச்சம்
    தண்கயக் குவளை குறிஞ்சி வெட்சி . . . . . .

    (குறிஞ்சிப்பாட்டு : 62-63)

    2.4.5 குறிகேட்டல்

    மலைவாழ் மக்களில் குறிசொல்லும் மரபினர் உண்டு. குறிசொல்லும் பெண் கட்டுவிச்சி என்று அழைக்கப்பட்டாள் என்பதை முன்னர்க் கண்டோம். தலைவியின் உடல், ஒழுக்க வேறுபாடுகளைக் காணும் செவிலி குறிசொல்லுபவளை அழைத்துக் காரணம் கேட்பது மரபு. சங்க காலத்தில் குறிஞ்சித் திணையின் சிறப்பியல்பாக விளங்கிய குறிகேட்டல் நிகழ்வு பிற்காலத்தில் குறவஞ்சி இலக்கியம் எழக் காரணமாகியது.

    என் தோழி மேனி
    விறல்இழை நெகிழ்த்த வீவுஅருங் கடுநோய்
    அகலுள் ஆங்கண் அறியுநர் வினாயும்

    (குறிஞ்சிப்பாட்டு: 2-4)

    (விறல் = வெற்றி; இழை = அணி; நெகிழ்த்த = கழலும் படி செய்த; வீவு அருங்கடுநோய் = மருந்துகளால் நீக்குவதற்கு அரிய கொடிய நோய்; அகல்உள்ஆங்கண் = அகன்ற உள் இடத்தை உடைய ஊரில்; அறியுநர் = குறியால் உணருபவர்)

    குறிஞ்சிப்பாட்டு எழக் காரணம் செவிலி குறிகேட்க ஆரம்பித்தலே ஆகும்.

    “தாயே ! என் தோழியின் உடலில் அணிந்துள்ள ஆடை அணிகள் நெகிழ்கின்றன. மருந்துகளால் நீக்க முடியாத நோயினளாக அவள் உள்ளாள். அவளுக்கு வந்துள்ள அரிய, கொடிய நோயின் காரணத்தை அறிய நீ விரும்புகின்றாய். அதனால் அகன்ற உள்ளிடத்தை உடைய ஊரில் உள்ள குறியால் உணருபவரை அழைக்கிறாய். ‘என்மகள் அடைந்த நோய்க்குக் காரணம் யாது ? ’ எனக் கேட்கிறாய்.” எனக் கூறியே தோழி தொடங்குகிறாள்.

    குறி சொல்லும் வேலன், கட்டுவிச்சி ஆகியோர் கட்டினாலும், கழங்கினாலும் குறி பார்த்துச் சொல்வர். முறத்தில் பரப்பிய நெல்கொண்டு பார்க்கும் ஒருவகைக் குறியே கட்டு எனக் கூறப்படுகிறது. கழற்சிக் காய்கொண்டு பார்க்கும் குறியைக் கழங்கு எனக் கூறுவர்.

    குறுந்தொகையில் ‘அகவன் மகளே அகவன் மகளே! (பாடல்எண்23, ஒளவையார்) என்ற பாடலும் குறிகேட்கும் இயல்பை எடுத்துக் காட்டுகிறது.

    2.4.6 தினைப்புனம் காத்தல்

    தினை விளையும் நிலம் தினைப்புனம் ஆகும். விளைந்த தினைக் கதிர்களைத் தலைவியும், தோழியும் கிளி முதலிய பறவைகளிடம் இருந்து காப்பர்.

    தினைப்புனம் காவல் காக்கத் தலைவி தோழி இருவரையும் செவிலி அனுப்பிவைக்கும் வழக்கம் உண்டு. இதனைக் குறிஞ்சிப்பாட்டு காட்டுகிறது.

    துய்த்தலை வாங்கிய புனிறுதீர் பெருங்குரல்
    நல்கோள் சிறுதினைப் படுபுள் ஓப்பி
    எல்பட வருதியர் எனநீ விடுத்தலின்

    (குறிஞ்சிப்பாட்டு : 37-39)

    (துய் = பஞ்சு; வாங்கிய = விளைந்த; புனிறு = இளமை; தீர் = நீங்கிய; பெருங்குரல் = பெரிய கதிர்; படுபுள்= வீழ்கின்ற பறவைகள் (கிளிகள்); ஓப்பி = ஓட்டி; எல்பட= சூரியன் மறைய; வருதியர்= வருவீராக)

    “பஞ்சு போன்ற நுனியைக் கொண்டு நன்றாக விளைந்து வளைந்தன தினைக்கதிர்கள். அக்கதிர்களைக் கவர வரும் கிளிகளை ஓட்டி மாலையில் வருமாறு என்னையும், தலைவியையும் நீ தினைப்புனத்திற்கு அனுப்பினாய்” என்று செவிலியிடம் தோழி கூறுகிறாள்.

    பரண் அமைத்து அதில் அமர்ந்து பல கருவிகளால் ஒலி எழுப்பிக் கிளிகளை விரட்டும் இயல்பினைக் குறிஞ்சிப்பாட்டு காட்டுகிறது. (குறிஞ்சிப் பாட்டு : 40-44)

புதுப்பிக்கபட்ட நாள் : 16-07-2018 17:29:17(இந்திய நேரம்)