Primary tabs
-
6.3 பரிபாடலிலும் புறநானூற்றிலும் கைக்கிளை
பரிபாடலிலும் புறநானூற்றிலும் பெண்பாற் கைக்கிளை அமைந்திருப்பதைக் காணலாம். முதலில் பரிபாடலில் இடம்பெறும் கைக்கிளைப் பாடலைக் காணலாம்.
நல்லந்துவனார் பாடிய பரிபாடலில், தலைவி தோழியுடன் வையை ஆற்றில் நீராடுகிறாள்.
இன்ன பண்பின்நின் தைந்நீ ராடல்
மின்னிழை நறுநுதல் மகள்மேம் பட்ட
கன்னிமை கனியாக் கைக்கிளைக் காமம்
(பரிபாடல், 11 : 34-136)என்று தோழி கூறும் வரிகள் தலைவியின் கைக்கிளைக் காமத்தைக் காட்டுகின்றன.
(தைந்நீராடல் = தை மாதம் வையை ஆற்றில் நீராடல்; மின்னிழை = ஒளிவிடும் நகை; நறுநுதல் = மணம் மிக்க நெற்றி)
தலைவி வையை ஆற்றில் தைநீராடக் காரணம் அவளது கைக்கிளைக் காமம் என்கிறாள் தோழி. விரைவில் தலைவன் ஒருவனை மணம்பெற வேண்டி நிற்கும் நிலை இங்குக் கைக்கிளைக் காமம் ஆகிறது.
புறநானூற்றில் மூன்று பாடல்கள் (83, 84, 85) கைக்கிளைத் திணையில், பழிச்சுதல் (பாராட்டுதல்) துறையில் அமைந்த பெண்பாற் கைக்கிளைப் பாடல்கள் ஆகின்றன.
இம்மூன்று பாடல்களும் சோழன் போரவைக் கோப்பெரு நற்கிள்ளி மீது ஒருதலைக் காதல் கொண்டு நக்கண்ணையார் என்ற பெண்பாற் புலவர் பாடியவை.
கோப்பெரு நற்கிள்ளி தன் தந்தையாகிய சோழன் தித்தனைப் பகைத்து நாடு துறந்து வறுமையுற்று அலைந்தவன். எனினும் சிறந்த வீரனாகத் திகழ்ந்தான். அவன் மீது நக்கண்ணையார் காதல் கொண்டார். அவர் பாடிய பாடல்களில் பாடப்பட்டவன் கற்பனைத் தலைவனாக அல்லாமல் உண்மைத் தலைவனாக அமைந்தமையால் இப்பாடல்கள் புறநானூற்றில் சேர்க்கப்பட்டன. ”கோப்பெரு நற்கிள்ளி மீது கொண்ட காதலால் என் கைவளைகள் கழன்று விழுகின்றன. காரணம் என்னவென்று என் தாய் கேட்பாளே! அவளுக்கு நான் அஞ்சுகிறேன். அவனது வீரத் தோளைத் தழுவ நினைக்கிறேன். ஆனால் பலரும் அவனைச் சூழ்ந்துள்ளனர் ; அந்த அவையில் உள்ளவரை எண்ணி நாணுகிறேன். இந்த ஊர் தாயைப் போலவும், அவையைப் போலவும் இரு தன்மை உடையதாக இருக்கிறது. எனவே மயக்கத்தை உடைய இந்த ஊர் என்னைப் போலவே நடுக்கத்தை அடையட்டும்” என்கிறார். (புறநானூறு - 83)
இப்பாடலில் தலைவியின் காதலைத் தலைவன் அறியவில்லை என்பதை உணர்கிறோம். ஆகவே இது கைக்கிளையாகிறது.