Primary tabs
-
6.1 கைக்கிளைகைக்கிளை என்பதைச் சுருக்கமாக ஒருதலைக் காமம் என்ற அளவில் அறிவீர்கள். கைக்கிளையின் விளக்கம், கைக்கிளை அமைந்த பாடல்கள், சங்க இலக்கியங்களில் கைக்கிளைப் பாடல்கள் ஆகியவற்றைப் பற்றி அறியலாம்.
- விளக்கம்
தலைவன் தலைவி ஆகிய இருவருள் ஒருவரிடத்தில் மட்டும் தோன்றும் காமத்தையே கைக்கிளை என்பர். சுருக்கமாகச் சொன்னால் கைக்கிளை என்பது ஒருதலைக் காதல் ஆகும். கை என்பது சிறுமை எனப் பொருள்படும். கிளை என்பது உறவு எனப் பொருள்படும். சிறுமையான உறவு அல்லது பெருமையில்லா உறவு என்பது கைக்கிளையின் பொருள். ஆயினும் இதுபற்றிய இலக்கணத் தெளிவைப் பின்னர்க் காணும்போது இது அவ்வளவு இழிவானதன்று என்பதை உணர்ந்து கொள்வீர்கள்.
கைக்கிளையைத் தொல்காப்பியர், கீழ்க்காணுமாறு விளக்குகிறார்.
காமம் சாலா இளமை யோள்வயின்
ஏமம் சாலா இடும்பை எய்தி
நன்மையும் தீமையும் என்றுஇரு திறத்தான்
தன்னொடும் அவெளாடும் தருக்கிய புணர்த்துச்
சொல்எதிர் பெறாஅன் சொல்லி இன்புறல்
புல்லித் தோன்றும் கைக்கிளைக் குறிப்பே(தொல்காப்பியம்-பொருளதிகாரம்,அகத்திணையியல்: 53,)
(சாலா = அமையாத - மிகாத; வயின் = இடத்து; ஏமம் = பாதுகாவல்; இடும்பை = துன்பம்; எய்தி = அடைந்து; தருக்கிய = ஒத்தவை; புணர்த்து = சேர்த்து; புல்லி = பொருந்தி)
காமத்திற்குப் பொருத்தம் இல்லாத இளையவளிடத்தில் பாதுகாவல் அற்ற (காதல்நோய் தீர்வதற்கு வழியில்லாத) காதல் துன்பம் கொள்கிறான் தலைவன். புகழ்தல், பழித்தல் என்ற இரு வகையாலும் அவளைப் பற்றிப் பேசுவான்; தனக்கும் அவளுக்கும் ஒத்த (சமமான) குணங்களைச் சேர்த்துச் சொல்வான். அவளோ பிறரோ கேட்காதபடி அவன் பேசுவதால் அவன் சொல்லிற்கு மறுமொழி இராது; தானே சொல்லி இன்புறுவான். இவ்வாறு அமையும் ஒருதலைக் காதல்தான் கைக்கிளை எனப்படும்.
கைக்கிளைக் காமம் என்பது இறுதி வரை ஒருதலைக் காதலாகவே இருந்து விடுவதன்று. தலைவனுடைய வேட்கையைத் தலைவி பின்னர்ப் புரிந்து கொண்டு உடன்படும் போது அது நல்ல காதலாக மலரும். ஆகவே கைக்கிளையைக் காதலின் தொடக்கம் எனவும் கொள்வார்கள். அன்பின் ஐந்திணைக் களவுக் காதலுக்கு முன்பு கைக்கிளை நிகழ்வது இயல்பு என நம்பியகப்பொருள் (நூ.28) கூறுகிறது.
இவ்வாறு அன்றிக் காதலாக மலராமல் இறுதிவரை கைக்கிளையாகவே நின்று விடுவதுதான் இழிவான கைக்கிளை எனலாம்.தலைவன் ஒருவன் கைக்கிளைக் காதல் கொள்வது ஆண்பாற் கைக்கிளை எனப்படும். அது போலவே தலைவி ஒருத்தி கைக்கிளைக் காதல் கொள்வது பெண்பாற் கைக்கிளை எனப்படும். ஆனால் அது இலக்கணமாகச் சொல்லப்படவில்லை. பின்னர் நீங்கள் காணவிருக்கும் புறநானூற்றுப் பாடல்கள் சிலவற்றில் பெண்பாற் கைக்கிளை அமைந்துள்ளது. அதனால் அவற்றை அகத்திணையில் சேர்க்காமல் புறத்திணையில் சேர்த்துள்ளனர்.
ஒருதலைக் காதலான கைக்கிளைப் பாடல்கள் சங்க அக இலக்கியங்களில் மிக மிகக் குறைவு. குறுந்தொகையில் ஒன்று (பாடல்:78) நற்றிணையில் இரண்டு (பாடல் : 39, 94), கலித்தொகையில் நான்கு (பாடல் 56, 57, 58, 109) ஆகியன கைக்கிளைக்கு உரியனவாக உள்ளன. பரிபாடலின் பதினோராவது பாடலில் கைக்கிளையைக் காண முடிகிறது. புற இலக்கியமான புறநானூற்றில் மூன்று(பாடல் 83, 84, 85) பாடல்கள் கைக்கிளைத் திணையைச் சார்கின்றன.
திருக்குறளில் தகையணங்குறுத்தல், குறிப்பறிதல் ஆகிய அதிகாரங்களில் கைக்கிளையைக் காண முடிகின்றது.
முத்தொள்ளாயிரப் பாடல்கள் பலவற்றில் சேர, சோழ, பாண்டிய நாட்டு மகளிர் பலர் அவர்தம் மன்னர் மீது கொள்ளும் ஒருதலைக் காதலைக் காணலாம்.
நாயக-நாயகி பாவத்தில் அமைந்த நாயன்மார், ஆழ்வார் பாடல்களில் அடியார்கள் இறைவனைத் தலைவனாகவும் தம்மைத் தலைவியராகவும் கொண்டு அவன் அன்பைப் பெறத் துடிக்கும் ஒருதலைக் காதலைக் காட்டு கின்றனர்.
கோவை, உலா, கலம்பகம், தூது, குறவஞ்சி போன்ற சிற்றிலக்கியங்களிலும் கைக்கிளைக் காதல் காட்டப்படுகின்றது.
கைக்கிளையை விளக்கும் காமம் சாலா இளமையோள் வயின் என்று தொடங்கும் தொல்காப்பிய நூற்பாவிற்குக் கபிலரது குறிஞ்சிக் கலிப்பாடல் ஒன்றை (பாடல் எண்: 56) உரையாசிரியர் இளம்பூரணர் சான்று காட்டுகின்றார்.
ஊர்க்கால் நிவந்த பொதும்பருள்
எனத் தொடங்கும் பாடல் அது.
காமத்திற்கு அமையாத அழகிய இளம்பெண் ஒருத்தியைக் காண்கிறான் தலைவன். ‘நிலாப் போன்ற முகத்துடன் இங்கே வரும் இவள் யார்? கொல்லிமலையில் வல்லவனால் செய்யப்பட்ட பாவையோ? எல்லா அழகிய பெண்களின் உறுப்புகளையும் ஒருங்கிணைத்துப் பிரமன் செய்த பேரழகியோ? ஆயரைக் கொல்ல அழகிய வடிவாக வந்த கூற்றுவனோ?’ எனப் பலவாறு ஐயம் கொள்கிறான். கைக்கிளைக் காதலின் தொடக்க நிலையாகிய ‘காட்சி’, ‘ஐயம்’ ஆகியவை இப்பகுதியில் அமைந்திருப்பதைக் காண்கிறோம். பின்னர்த் தலைவன், தலைவியின் அணி, ஆடை ஆகியவைகளைக் கொண்டு அவள் ஒரு மானிடப் பெண்ணே என ஐயம் தீர்கிறான். இது கைக்கிளையின் மூன்றாம் நிலையாகிய ‘தெளிவு’ என்பதைக் குறிக்கும். இத்‘தெளிவு’ தோன்றியபின் தலைவனது கைக்கிளைக் காதல் மேலும் பெருகுகிறது. மருந்தில்லாத நோய்க்கு ஆளாகிறான்.
அவளோடு ‘பேசிப் பார்ப்போம்’ எனத் தனக்குள்ளேயே பேசுகிறான். இப்பேச்சில் அவள் அழகைப் புகழ்தலும், அவ்வழகு அவனைத் துன்புறுத்துவதால் இகழ்தலும் அமைகின்றன.
பெருத்தநின் இளமுலை
மயிர்வார்ந்த வரிமுன்கை மடநல்லாய் நின்கண்டார்
உயிர்வாங்கும் என்பதை உணர்தியோ உணராயோ?
(அடி: 23-25)(வார்ந்த = நேராக அமைந்த ; வரிமுன்கை = மயிர் வரிசையை உடைய முன்கை; மடநல்லாய் = இளம்பெண்ணே!; உணர்தியோ = உணர்கிறாயா?)
“இளமையான அழகியே! உன் மார்பு கண்டவர்களின் உயிரை வாங்கி விடுகிறது. இதனை நீ உணர்வாயா? உணர மாட்டாயா?” என்று அவன் கூறும்போது அவனுள் காதல் பெருக்கெடுக்கிறது.
யாதுஒன்றும் வாய்வாளாது இறந்துஈவாய் கேள்!
“கேட்டவர்க்கு எதையும் வாய்திறந்து சொல்லாமல் போகின்றவளே, கேள்” என்று அவன் தொடர்ந்து கூறுகிறான். இவை எல்லாம் சொல்எதிர் பெறாஅன் சொல்லி இன்புறல் என்ற தொல்காப்பிய நூற்பாத் தொடரை நினைவூட்டுகின்றன.
நீயும் தவறிலை, நின்னைப் புறங்கடைப்
போதர விட்ட நுமரும் தவறு இலர்
நிறைஅழி கொல்யானை நீர்க்குவிட் டாங்குப்
‘பறைஅறைந் தல்லது செல்லற்க’ என்னா
இறையே தவறுடை யான்
(அடிகள் : 30-34)“அழகால் பிறரைக் கவர்ந்து இழுக்கும் பெண்ணே! நீ குற்றம் உடையவள் இல்லை. உன்னை இங்குச் செல்ல விட்ட உறவினரும் குற்றம் உடையவர் அல்லர். கொல்லும் இயல்புடைய யானையை நீர்நிலைக்கு அனுப்பும் போது பறைசாற்றி மக்களுக்குத் தெரிவிப்பது போல, நீ செல்லும் போதும் பறை முழக்காமல் செல்லக் கூடாது என்று உன்னைத் தடுத்து ஆணையிடாத அரசனே குற்றம் உடையவன்” என்கிறான் அந்த இளைஞன்.
இப்பாடலில் கைக்கிளை இலக்கணமாகிய பாதுகாவலற்ற
(மருந்தற்ற) துன்பம் எய்தல், நன்மை தீமை இரண்டும் கூறித் தன்னை அவளோடு இணைத்துப் பார்த்துப் புலம்புதல், அவளுடைய பதில் பெறாமல் அவனே புலம்பி இன்புறல் ஆகியவை அமைந்திருப்பதைக் காணலாம்.