தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

புற இலக்கியத்தில் பெருந்திணை

  • 6.7 புற இலக்கியத்தில் பெருந்திணை

    தலைவன் தலைவி பெயர் சுட்டப்பட்டதால் அகத்தில் இருக்க வேண்டிய பெருந்திணைப் பாடல் புறப்பாடல் ஆகிறது. புறநானூற்றில் இடம் பெறுகிறது.

    6.7.1 புறநானூறு

    புறநானூற்றில் ஐந்து பாடல்கள் பெருந்திணையில் அமைந்துள்ளன.

    வையாவிக் கோப்பெரும் பேகன் தன் மனைவி கண்ணகியைத் துறந்து நல்லூர்ப் பரத்தையிடம் உறவு கொண்டிருந்தான். இதனைக் கண்ட கபிலர், பரணர், அரிசில்கிழார், பெருங்குன்றூர்கிழார் ஆகிய நால்வரும் பேகனிடம் கண்ணகியின் துயரத்தைக் கூறுகின்றனர்; அவளுடன் சேர்ந்து வாழுமாறு வேண்டுகின்றனர்.

    நின்னும்நின் மலையும் பாட இன்னாது
    இகுத்த கண்ணீர் நிறுத்தல் செல்லாள்
    முலையகம் நனைப்ப விம்மிக்
    குழல்இனை வதுபோல் அழுதனள் பெரிதே

    (புறநானூறு-143 : 12-15)

    ”பேகனே! உன் ஊருக்கு யான் வந்து உன்னையும் உன் மலையையும் பாடினேன். அப்போது வேதனையுற்று வடித்த கண்ணீரை நிறுத்த முடியாமல், மார்பு நனைய விம்மிக் குழல் அழுவதுபோல் அழுதாள் ஒருத்தி” எனக் கூறுகிறார் கபிலர்.

    பேகன் பெருங்குன்றூர்கிழாருக்குப் பரிசில் தர முன் வந்தான். ஆனால் புலவரோ அதை மறுக்கிறார்.

    ”நேற்று நான் செவ்வழிப் பண்ணைப் பாடி வந்தேன். ஒருத்தி கண்ணீர் விட்டு வருந்தினாள். அவிழ்ந்த கூந்தலை உடையவள் அவள். அவள் தன் கூந்தலை முடித்து மகிழ நீ அருள வேண்டும். இதுவே நான் வேண்டும் பரிசில்” என்கிறார் புலவர். (புறநானூறு - 147)

    இப்பாடல்கள் பேகனுக்குப் பரத்தையிடம் தோன்றிய பொருந்தாக் காதலைக் கூறுகின்றன; மேலும் கண்ணகி பேகனிடம் கொண்ட மிகுந்த காதலால் புலம்புவது காரணமாகவும் இப்பாடல்கள் பெருந்திணை ஆகின்றன.

புதுப்பிக்கபட்ட நாள் : 17-07-2018 10:43:53(இந்திய நேரம்)