தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

பெருந்திணை

  • 6.5 பெருந்திணை

    பெருந்திணை விளக்கம், பெருந்திணையின் வகைகள், அக இலக்கியங்களிலும், புறநானூற்றிலும் பெருந்திணை அமைந்துள்ள தன்மை ஆகியவற்றை இப்பகுதியில் அறியலாம். பெருந்திணை பாடிய புலவர் பெயர்களையும் அறியலாம்.

    · விளக்கம்

    பெருந்திணையைப் பொருந்தாக் காமம் அல்லது ஒவ்வாக் கொள்ளும் காதலே பெருந்திணை ஆகும். இப்பொருத்தமின்மை பற்றிப் பெருந்திணையின் இலக்கணத்தில் விளக்கமாகக் காணலாம்.

    6.5.1 பாடிய புலவர்கள்

    கலித்தொகையில் மருதம், முல்லை, நெய்தல் திணைகளில் அமைந்த பதினான்கு பாடல்கள் பெருந்திணைக்கும் உரியனவாக உள்ளன. புறநானூற்றில் ஐந்து பாடல்கள் (பாடல் எண்கள் 143, 144, 145, 146, 147) பெருந்திணையைச் சார்ந்துள்ளன.

    மருதக்கலியில் இரண்டு பாடல்களும் (எண்:62,94, ஆசிரியர் மருதனிள நாகனார்) முல்லைக்கலியில் இரண்டு பாடல்களும் (எண் : 112, 113, ஆசிரியர் சோழன் நல்லுருத்திரன்) நெய்தல் கலியில் பத்துப் பாடல்களும் (பாடல் எண் 138 முதல் 147வரை, ஆசிரியர் நல்லந்துவனார்) பெருந்திணையில் அமைந்தவை ஆகும்.

    புறநானூற்றில் 143ஆவது பாடலைக் கபிலரும், 144, 145ஆவது பாடல்களைப் பரணரும், 146ஆவது பாடலை அரிசில்கிழாரும், 147ஆவது பாடலைப் பெருங்குன்றூர் கிழாரும் பாடியுள்ளனர்.

    6.5.2 இலக்கணம்

    தொல்காப்பியர் பெருந்திணையின் நான்கு கூறுகளை விளக்குகிறார்.

    ஏறிய மடல்திறம் இளமை தீர்திறம்
    தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறம்
    மிக்க காமத்து மிடலொடு தொகைஇச்
    செப்பிய நான்கும் பெருந்திணைக் குறிப்பே
    (தொல்காப்பியம்,பொருளதிகாரம், அகத்திணையியல், 56)

    (மிடலொடு = மாறிய திறனொடு, முறையற்ற செயலொடு; செப்பிய = சொல்லப்பட்ட)

    ஏறிய மடல் திறம், இளமை தீர்ந்த திறம், தெளிவு அற்ற மிகுந்த காமம், காமம் மிகுந்து விடுதலால் செய்யும் வரம்பு கடந்த செயல்கள் ஆகிய நான்கும் பெருந்திணையைக் குறிப்பன என்பது இந்நூற்பாவின் கருத்து. இனி இவற்றைத் தனித்தனியே விளக்கிக் காணலாம்.

    · ஏறிய மடல் திறம்

    இது மடல் ஏறுவதைக் குறிக்கும். மடலேறுதல் ஆணுக்கு மட்டுமே உரியது. தலைவன் மடல் ஏறுவேன் எனச் சொல் அளவில் கூறுவது கைக்கிளையளவில் நிற்கும். உண்மையில் தலைவன் மடல் ஏறிவிடுவது பெருந்திணையாகி விடும்.

    தான் விரும்பும் தலைவியை மணக்க இயலாத நிலை ஏற்படும்போது தலைவன் மடல் ஏறுகிறான். அதைக் கண்ட தலைவி இரங்கி அவனுக்கு உடன்படுகிறாள். அவ்வாறு அவளை அடைந்த விதத்தைத் தலைவன் தன்னைச் சேர்ந்தோருக்குத் தெரிவிக்கின்றான். (கலித்தொகை, பாடல் 138) இப்பாடலில் தலைவன் தலைவியை அடைகிறான். எனினும் அடைந்த விதம் (மடலேறுதல்) அன்பின் ஐந்திணைக்குப் பொருந்துவதாக இல்லை. நாணமற்ற ஒரு செயலால் களவைப் பலர் அறிய வெளிப்படுத்தி விட்டமையால் இது பெருந்திணை ஆயிற்று. தலைவன் பூளைப்பூ, ஆவிரம்பூ, எருக்கம் பூ ஆகியவற்றைத் தொடுத்து மடல் குதிரையில் கட்டி, ஊர்க்கடைத் தெருவில் மடல் ஏறி,

    எல்லீரும் கேட்டீமின் என்று
    படரும், பனைஈன்ற மாவும் சுடர்இழை
    நல்கியாள் நல்கி யவை

    (அடிகள் : 11-13)

    (எல்லீரும் = எல்லோரும் ; கேட்டீமின் = கேளுங்கள்; படர் = துன்பம்; மா = குதிரை; நல்கியாள் = என்னால் காதலிக்கப்பட்டவள்; நல்கியவை = கொடுத்தவை)

    ”விளங்கும் அணியை உடைய என்னால் விரும்பப்பட்டவள் எனக்குக் காதலித்துத் தந்தவை வருத்தமும், வருத்தத்தால் உண்டான பனை மடலால் செய்த குதிரையும் ஆகும்” என்பது பொருள்.

    ஒளி பொருந்திய அணியை உடையவள் என்னால் பொறுத்துக் கொள்ள இயலாதபடி காம நோயை எனக்குத் தந்தாள். அந்நோயால் என் உயிர் அழுந்தியது. நெருப்பில் பட்ட மெழுகாய் உருகித் தேய்கிறது. இஃது எல்லாரும்
    இரக்கப்படுமாறு இருப்பது”

    இப்பாடலைக் கேட்டு அவள் இரங்கித் தன்னை ஏற்றதாகக் கூறுகிறான்.

    · இளமைதீர் திறம்

    பெருந்திணையின் இரண்டாவது வகையாகக் குறிப்பிடப்படுவது இளமை தீர் திறம் ஆகும்.இளமை நீங்கிய நிலையில் கொள்ளும் காதல் இளமை தீர் திறம் ஆகும். இது மூன்று வகையில் அமையலாம். தலைவி முதியவளாகத் தலைவன் இளையவனாக இருக்கலாம் ; தலைவன் முதியவனாகத் தலைவி இளையவளாக இருக்கலாம்; இருவருமே இளமை தீர்ந்தவர்களாகவும் இருக்கலாம். ஒரு குறளனும் (குள்ளன்) கூனியும் முதலில் ஊடிப் பேசிப் பின் கூடுகின்றனர். ஒருவரையொருவர் உருவத்தைக் கொண்டு இகழ்ந்து பேசுகின்றனர். (கலித்தொகை, பாடல் -94)

    நீருள் நிழல்போல் நுடங்கிய மென்சாயல்
    ஈங்குஉருச் சுருங்கி
    இயலுவாய் ! நின்னொடு உசாவுவேன்

    (அடிகள் : 2-4)

    (நுடங்கிய = அசைந்து தெரிந்த ; ஈங்கு = இங்கு; உரு= உருவம்; உசாவுவேன் = பேசுவேன்)

    ”கரையில் நின்ற ஒரு பொருளின் நிழல் நீருக்குள் தெரிவது போல் கூன் கொண்டு உருவம் சுருங்கி நடப்பவளே! உன்னோடு நான் பேச வேண்டும்” என்று இப்பாடலில் கூனியைப் பார்த்துக் குறளன் கூறுகிறான். அதற்கு அவள்,

    காண்தகை இல்லாக் குறள்நாழிப் போழ்தினான்
    ஆண்டலைக்கு ஈன்ற பறழ்மகனே ! நீ எம்மை
    வேண்டுவல் என்று விலக்கினை ; நின்போல்வார்
    தீண்டப் பெறுபவோ மற்று?
    (அடிகள் : 5-8)

    (காண்தகை இல்லா = கண்ணால் பார்க்கத் தகுதி இல்லாத; குறள் = குள்ளம்; நாழி = நேரம்;ஆண்டலை = ஒரு பறவை, ஆந்தை; பறழ் = குஞ்சு)

    ”கண்ணால் பார்க்கச் சகிக்க முடியாத குள்ளனாகப் பிறப்பதற்குரிய நேரத்தில்,ஆந்தைப் பறவைக்கு அதன் பெட்டை ஈன்ற குஞ்சான மகனே! நீ என்னை விரும்புவேன் என்று மேலே போகாமல் தடுத்தாய். உன்னைப் போன்று குறளனாக இருப்பவர் என்னைத் தீண்டப் பெறுவாரோ?”

    என்று பதில் தருகிறாள். தொடர்ந்து இருவரும் மாறிமாறி இவ்வாறு விளையாட்டாய்ப் பேசிக் கொண்டபின் காம ஒழுக்கம் மேற்கொள்கின்றனர்.

    'உருச் சுருங்கி இயலுவாய்’ என்றும் ‘கொக்குரித்தாற் போலத் தோன்று பவளே’ என்றும் சொல்வதனால் தலைவி உருவம் சுருங்கியமையும், உடலில் தோல் சுருங்கியமையும் உணர்த்தப்படுகின்றன. இதனால் தலைவியின் இளமை தீர்ந்த முதுமை சுட்டப்படுகின்றது.

    ‘ஆண்டலைக்கு ஈன்ற பறழ் மகனே’ என்பதால் தலைவனின் இளமை தீர்ந்த திறம் சுட்டப்படுகின்றது. உருவப் பொருத்தமின்மை, பருவப் பொருத்த மின்மை ஆகிய இரண்டுமே இக்காதலைப் பெருந்திணைக் காதலாக அடையாளம் காட்டுகின்றன.

    வேறு குறைபாடுகள் இன்றித் தலைவனும் தலைவியும் வயது முதிர்ந்தபின் காமம் கொள்வதற்கு ஒரு காரணம், இளமையில் பொருள் தேடுதல் போன்றவற்றால் போதுமான காம நுகர்ச்சி இல்லாமல் போவதே ஆகும். அதனையும் பெருந்திணை என்றே கொள்வர்.

    · தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறம்

    இது அறிவுத் தெளிவு அற்றுக் காமத்தில் மிகுதல் ஆகும். இது பெரும்பான்மை தலைவிக்கு உரியது.

    தலைவன் பிரிந்திருக்கும் காலத்தில் வருந்தியிருக்கும் தலைவியைத் தோழி தேற்றுவாள். ஆனால் தேறுதல் பெறாத தலைவி, காமம் மிகுந்திடப் பிறர் கேட்பத் தன் காமத்தையும் அதனால் தான்படும் துன்பத்தையும் எடுத்துரைப்பாள்.

    கலித்தொகையின் 142ஆவது பாடல் இதற்குத் தகுந்த சான்றாகும்.

    பெண்ணின்றி
    யாவரும் தண்குரல் கேட்ப.. எழில்உண்கண் ஆயிதழ் மல்க அழும்

    (அடிகள் : 8-12)

    ‘பெண்தன்மை இல்லாமல், பிறர்க்குக் கேட்காமல் சொல்ல வேண்டிய காதல் வேதனை பற்றிய செய்தியை எல்லாருக்கும் கேட்கும்படி கூறி அழுகின்றாள்’ எனத் தோழியர் பேசுகின்றனர்.

    ‘ஞாயிறே! அவரைத் தேடிப் பார்த்து எனக்குத் தா. அப்போதுதான் உயிர் திரியாக, என் நெஞ்சமே அகலாக எரிகின்ற என் காமத்தீ அவியும்’ எனத் தன் காம வெப்பத்தை வெளிப்படையாகப் பேசுகிறாள்.

    இவ்வாறு தேறுதல் ஒழிந்த காமத்தின் வெளிப்பாடு பெருந்திணையாயிற்று.

    · மிக்க காமத்து மிடல்

    காமம் மிகுந்துவிடுதலால் செய்யும் முறை கடந்த செயல்களைக் குறிப்பது இது. பிரிந்து செல்ல வேண்டிய தலைவன், பிரிய வேண்டாம் எனத் தலைவியோ தோழியோ வற்புறுத்தாத நிலையிலும், காம மிகுதியால் தன் பயணத்தை நிறுத்திவிடுதல், தலைவியிடம் பணிந்து நின்று வேண்டுதல், மணவாழ்வில் மனைவி விடுத்தலால் வேறு பெண்டிரை நாடிச் செல்லுதல் போன்றவை ஆணின் ‘மிக்க காமத்து மிடல்’ ஆகும்.

    “யார் இவன் என்னை விலக்குவான்?” (கலித்தொகை, 112 : 1) எனத் தொடங்கும் கலித்தொகைப் பாடலில், ”நின் பெற்றோர் சொல்லாடாது நிற்க எனக் கூறினரே அன்றிச் சேர வேண்டாமெனக் கூறினரோ?”என்று தலைவன் தலைவியிடம் கேட்கிறான். அவளும் சேர உடன்படுகிறாள். இவ்வாறு மிக்க காமத்தால் அவளைக் கூடுவதால் இது பெருந்திணை ஆயிற்று.

    தலைவன் வருவதாகக் கூறிய பருவம் வந்தபோது 'இது அப்பருவம் தான் என்றும், அப்பருவம் அன்று' என்றும் தலைவி மயங்குதல் போன்றவை பெண்ணின் ‘மிக்க காமத்து மிடல்’ ஆகும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 10:29:27(இந்திய நேரம்)