Primary tabs
-
6.4 பிற இலக்கியங்களில் கைக்கிளை
திருக்குறள், நாயன்மார் பாடல்கள், ஆழ்வார் பாடல்கள், முத்தொள்ளாயிரம், சில சிற்றிலக்கியங்கள் ஆகியவற்றில் ஒருதலைக் காதல் மரபைக் காண முடிகின்றது.
அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும்என் நெஞ்சு
(குறள் - 1081)எனத் ‘தகையணங்குறுத்தல்’ அதிகாரத்திலும்,
இருநோக்கு இவள்உண்கண் உள்ளது ஒருநோக்கு
நோய்நோக்குஒன்று அந்நோய் மருந்து
(குறள்-1091)எனக் ‘குறிப்பறிதல்’ அதிகாரத்திலும் ஆண்பாற் கைக்கிளையைக் காண முடிகின்றது.
”இவள் தெய்வப் பெண்ணோ? அழகு மயிலோ? கனமான குழையை அணிந்து உள்ளதால் மானிடப் பெண்ணோ? என்று என் உள்ளம் மயங்குகிறது” (குறள் 1081) என்று தலைவன் தன் ஒருதலைக் காதலை உணர்த்துகிறான்.
”மை தீட்டப் பெற்ற இவளின் கண்களில் இரு விதப் பார்வைகள் உள்ளன. ஒன்று காமநோயை உண்டாக்குகிறது. மற்றது அந்நோய்க்கு மருந்தாகிறது” (குறள் 1091) என்றும் தலைவன் தன் கைக்கிளைக் காதலை உணர்த்துகிறான்.
அன்பினால் இறைவனை அடையத் துடிக்கும் ஆன்மா, தன்னைப் பெண்ணாகவும் இறைவனைத் தலைவனாகவும் கொண்டு அன்பு செலுத்தும். இந்நிலையை நாயக-நாயகி பாவம் என்பர்.
சைவ சமய அடியார்களாகிய நாயன்மார்களும், வைணவ சமய அடியார்களாகிய ஆழ்வார்களும் இறைவனைத் தலைவனாக்கி, தம்மைத் தலைவியராய் ஆக்கி நாயக-நாயகி பாவத்தில் பல பாடல்களைப் புனைந்துள்ளனர்.
தலைவியின் ஒருதலைக் காதலான பக்தியைத் தாய் கூறுவது போல நாவுக்கரசர் பாடியுள்ளார். தலைவனுடைய பெயரையும், நிலையையும், ஊரையும் கேட்டு, அதைச் சொல்லிச் சொல்லி, அவன் மேல் பித்தாகிறாள் தலைவி. தாய்-தந்தை சமூகக் கட்டுப்பாடு எல்லாவற்றையும் விடுத்துத் தன்னை மறந்து, தன் பெயரையும் மறந்து, இறைவன் திருவடியே தஞ்சமெனக் கிடக்கிறாள் அவள். இதனைச் சொல்கிறது தேவாரப் பாடல் :
முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்
மூர்த்தி அவன்இருக்கும் வண்ணம் கேட்டாள்
பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்
பேர்த்தும் அவனுக்கே பிச்சி ஆனாள்
அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்
அகன்றாள் அகலிடத்தார் ஆசா ரத்தை
தன்னை மறந்தாள்தன் நாமம் கெட்டாள்
தலைப்பட் டாள்நங்கை தலைவன் தாளே!
(நாவுக்கரசர் தேவாரம்,6 : 25-7)பிற்காலத்தில் தோன்றிய கோவை, உலா, தூது, கலம்பகம், குறவஞ்சி போன்ற சிற்றிலக்கியங்கள் கைக்கிளைக் காதல் அமைந்த இலக்கியங்கள் ஆகும். தெய்வம் அல்லது அரசன் மீது ஒரு பெண் கொண்ட காதலை இந்த இலக்கியங்கள் காட்டுகின்றன.
முத்தொள்ளாயிரம் என்ற பிற்கால இலக்கியம் கைக்கிளைத் திணையின் வளர்ச்சி நிலைக்கு நல்ல சான்றாகும். சேர, சோழ, பாண்டிய மன்னர் மீது பெண்கள் கொள்ளும் ஒருதலைக் காதலை இந்நூல் முழுதும் காண முடிகிறது.
ஒரு பெண் உலா வரும் சேர மன்னன் கோதையைக் காணச் செல்கிறாள்; கதவைத் திறக்கிறாள்; நாணம் வந்ததால் வீட்டினுள் செல்கிறாள்; மீண்டும் கதவருகே செல்கிறாள்; நாணத்தால் வீட்டினுள் திரும்புகிறாள். பெரும் பணக்காரர் இல்லத்தில் சென்று நிற்கத் தயங்கும் ஏழை போல் அவள் நெஞ்சு போவதும் வருவதுமாகத் தடுமாறுகிறது.
ஆய்மணிப் பைம்பூண் அலங்குதார்க் கோதையைக்
காணிய சென்று கதவுஅடைத்(ந்)தேன்- நாணிப்
பெருஞ்செல்வர் இல்லத்து நல்கூர்ந்தார் போல
வரும்செல்லும் பேரும்என் நெஞ்சு
(முத்தொள்ளாயிரம்,16)(ஆய்மணிப் பைம்பூண் = ஆராய்ந்து எடுத்த இரத்தின மணியால் ஆன மாலை; அலங்குதார் = அசைந்தாடும் மலர்மாலை; காணிய = காண்பதற்காக; நல்கூர்ந்தார் = வறுமையுற்றவர் (ஏழை))