தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

P202234.htm-பேயாழ்வார்

  • 3.4 பேயாழ்வார்

     

    திருக்கண்டேன்; பொன்மேனி கண்டேன் திகழும்
    அருக்கன் அணிநிறமும் கண்டேன் - செருக்கிளரும்
    பொன்னாழி கண்டேன்; புரிசங்கம் கைக்கண்டேன்
    என்னாழி வண்ணன்பால் இன்று

    (3384)

    (அருக்கன் = சூரியன், சங்கம் = சங்கு, ஆழிவண்ணன் =
    கடல்நிறமுடையவன்)

    இப்படித் திருமாலைக் கண்டதால் ஏழ்பிறப்பும் அறுத்தேன்
    எனத் தம் பாசுரத்தைத் தொடங்குகின்றார் பேயாழ்வார்(3385).

    உலகத்தை விளக்காக்கினார் பொய்கை ஆழ்வார். அன்பை
    விளக்காக ஆக்கி ஞானச் சுடர்விளக்கை ஏற்றி ஞானத்தமிழ்
    கொண்டு வழிபட்டார் பூதத்தாழ்வார். பேயாழ்வாரோ முன்
    இருவரையும் விஞ்சி திருக்கண்டேன் எனப் பாடி, "மருந்தும்
    பொருளும் அமுதமும் திருந்திய செங்கண்மால் தான்
    "
    எனப் போற்றுகின்றார்.

    3.4.1 வழிபாடு

    திருவல்லிக்கேணியில் பெருமாளைச் சேவித்து மகிழ்ந்த
    ஆழ்வார், அச்செய்தியை,

    சென்றநாள் செல்லாத செங்கண்மால் எங்கள்மால்
    என்றநாள், எந்நாளும் நாளாகும் - என்றும்
    இறவாத எந்தை இணையடிக்கே யாளாய்
    மறவாது வாழ்த்துகஎன் வாய்

    (3400)

    எனப் பாடுகின்றார். இறைவனை வாழ்த்திய நாள்களே நல்ல
    நாள்கள். கழிந்த நாட்கள் மட்டுமல்ல, வர இருக்கின்ற நாளும்
    நல்ல நாளாகும். எனவே இறைவனை வாய் வாழ்த்திக்
    கொண்டே இருக்கவேண்டும் என வேண்டுகின்றார்.

    கடுமையான நோன்பு நோற்று இறைவனை வழிபட வேண்டாம்
    என்பது ஆழ்வார் காட்டும் வழி.

    பொருப்பிடையே நின்றும் புனல்குளித்தும் ஐந்து
    நெருப்பிடையே நிற்கவும் நீர்வேண்டா - விருப்புடைய
    வெஃகாவே சேர்ந்தானை மெய்ம்மலர்தூய்க்
                 கைதொழுதால்
    அஃகாவே தீவினைகள் ஆய்ந்து

    (3459)

    திருவெஃகாவில் கோயில் கொண்டுள்ள திருமாலை மலர் தூவி
    வழிபட்ட அளவில் தீவினைகள் நீங்கும் என்பது பொருள்.
    கடுந்துறவு இறைவனை அடையும் வழி என்பதிலிருந்து
    தம்மையும், மக்களையும் விடுவித்துக் கொள்ள விரும்பிய
    ஆழ்வார்களின் சிந்தனையை வெளிப்படுத்தும் பாசுரமே
    மேலே கூறிய பாசுரம் ஆகும்.

    3.4.2 அவதாரங்கள்

    பஞ்ச பாண்டவர்களுக்காக அன்று பாரதப்போர் செய்தான்;
    கம்சன் அனுப்பிய பேய்வடிவில் வந்த பூதகியின் பால் உண்டு
    அவளை அழித்தான்; பேய்ச்சிபால் உண்ட பெருமானை
    ஆய்ச்சியர்கள் பாலூட்டி வளர்த்தனர். இப்படிப்பட்ட
    சிறப்புக்குரியவன் திருமால் எனப் போற்றுகின்றார் ஆழ்வார்.

    • மராமரம், மான்மறி, குறளுரு

    இராமன் ஏழு மராமரங்களை எய்தவன்; சீதைக்காக மாயமான்
    வடிவில் வந்த மாரீசனை அம்பு எய்து கொன்றவன்; குறள்
    உருவில் மாவலியிடம் நிலம் கொண்டவன் எனக் கதைக்
    குறிப்புகளைச் சொல்லி ஆழியானின் புகழ்பாடுகின்றார்
    பேயாழ்வார்.

    • மாமுதலை

    திருமாலை வழிபடுவதற்குத் தாமரை மலர் பறிக்கச் சென்றது
    கஜேந்திரன் என்னும் யானை; அங்கு, குளத்துள் கிடந்த
    முதலை, அதன் காலைப் பற்றியது. திருமாலின் பெயரைச்
    சொல்லி யானை அலற, அவன் சக்கரத்தைச் செலுத்தி
    ஆழ்ந்த நீரில் வளர்ந்த பெரிய முதலையைக் கொன்றான்.


    ........................................... குட்டத்துக்

    கோள்முதலை துஞ்சக் குறித்தெறிந்த சக்கரத்தான்

    (3482)

    அதுபோல அடியாரின் துன்பம் பொறுக்கமுடியாத அவனது
    திருப்பாதம் தமக்குச் சார்ந்து வாழும் இடம் என்பர்
    பேயாழ்வார்.

    • விளங்கனி

    கன்றினைத் தடியாகக் கொண்டு விளங்கனி மேல் எறிந்தவன்
    கண்ணன். அவன் மலை எப்படிப்பட்டது காண்போமா!

    பார்த்த கடுவன் சுனைநீர் நிழற்கண்டு
    பேர்த்தோர் கடுவன் எனப்பேர்த்து - கார்த்த
    களங்கனிக்குக் கைநீட்டும் வேங்கடமே மேனாள்
    விளங்கனிக்குக் கன்றெறிந்தான் வெற்பு

    (3451)

    சுனைநீரில் தன் நிழலைக் கண்ட கடுவன் (ஆண்குரங்கு)
    வேறு ஓர் குரங்கு அங்கே இருப்பதாக எண்ணி, வேறு ஓர்
    இடத்திற்குச் சென்றது; அது களங்கனியை உண்ணக்
    கைநீட்டும் வேங்கடமலை. அந்த மலைதான் விளங்கனி
    வடிவில் வந்த அசுரனை அழித்த மலை என இயற்கை
    வருணனையோடு     தம்     மனங்கவர்ந்த     திருமாலின்
    திருச்செயல்களையும்     விளக்குகின்றார்.    ‘மேனாள்
    குழக்கன்று கொண்டெறிந்தான் குன்று
    ’ திருவேங்கடம்
    (3454) என்று மொழிகின்றார்.

    3.4.3 வண்ணம்

    திருமலையில் இருப்பவனின் வண்ணம், எப்படிப்பட்டது?

    நிறம்வெளிது செய்து பசிது கரிதென்று
    இறையுருவம் யாமறியோம் எண்ணில் - நிறைவுடைய
    நாமங்கை தானும் நலம்புகழ வல்லளே
    பூமங்கை கேள்வன் பொலிவு

    (3439)

    வெண்மையோ, சிவப்போ, பச்சையோ, கருமையோ தெரியாது.
    தாமரை மலரில் வீற்றிருக்கும் கலைமகளும், திருமகள் தன்
    மணவாளனின் தோற்றப் பொலிவைப் பேச வல்லவளோ
    என்கின்றார்.

    3.4.4 வலைப்படுத்தேன்

    திருமாலின் ஐம்படைகள்(3419), பற்றிப் பேசும் ஆழ்வார்,
    கண்கள் திருமாலைக் காணவேண்டும் (3417), கைகள்
    அடியளந்த மாயனின் பாதங்களைத் தொழவேண்டும் என்பர்.

    ஐம்புலன்களையும் மனம் போன போக்கில் அலையவிடாமல்
    மனம் ஒன்றி நின்றால், ஏழு பிறப்பையும் நீக்கலாம்.

    (வலைப்படுத்தேன் - என் பிடிக்குள் அடக்கினேன்)

    உய்த்துணர் வென்னும் ஒளிகொள் விளக்கேற்றி
    வைத்தவனை நாடி வலைப்படுத்தேன்

    (3477)

    இப்படி மாயனை நெஞ்சில் நிறுத்தலாம்; நிலையாகப் பள்ளி
    கொள்ளச் செய்யலாம் எனத் தம் அனுபவத்தைச்
    சொல்மாலையால் எடுத்து உணர்த்துகின்றார் பூதத்தார்.

    • கிருஷ்ணன்

    கிருஷ்ண அவதாரச் செயல்களைச் சுட்டி அக்கண்ணனைக்
    கண்கள் காணவேண்டும். மாயவனின் பல பெயர்களைச்
    சொல்லுவோம். நாராயணா எனச் சொல்லி இருகையால் கூப்பி
    வணங்குவோம். என்றெல்லாம் தம் நெஞ்சுக்கும் கூறுவதாக
    இப்பாசுரம் அமைந்துள்ளது.

    நாமம் பலசொல்லி நாராய ணாஎன்று
    நாம்அங்கை யால்தொழுதும் நன்னெஞ்சே!-வாமருவி
    மண்ணுலகம் உண்டுமிழ்ந்த வண்டறையும் தண்துழாய்
    கண்ணனையே காண்க நம்கண்

    (3391)

    கண்ணனைக் கண் காணவேண்டும் என்னும் பாசுரம் நாம்
    முதல் பாடத்தில் சொன்ன சிலப்பதிகாரம் காட்டிய
    சிந்தனையோடு ஒத்திருப்பது எண்ணத்தக்கது.

    அறிவு என்னும் தாளைக் (பூட்டு) கொண்டு ஐம்புலன்களை
    அடக்கி, கதவுக்குள் அடைத்து வைத்து நான்கு வேதங்களைச்
    சொல்லி நன்கு உணர்பவர்கள் கண்ணனை - பாற்கடல்
    வண்ணனை - பாம்பணையின் மேல் துயில்வானை உணரலாம்
    (3375).

    அவன் அறிவு சான்ற நூல்களின் பொருளாக உள்ளான்
    (நூற் கடலான் 3394) ஆலிலை மேல் துயின்றவன். இப்படிக்
    கண்ணனி்ன் செயல்களைக் காட்டிக் காட்டி ஈடுபாட்டை
    வெளிப்படுத்துவன பேயாழ்வார் பாசுரங்கள்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 11:36:26(இந்திய நேரம்)