Primary tabs
-
3.6 தொகுப்புரை
சங்க இலக்கியங்களிலும் சிலப்பதிகாரத்திலும் திருமாலைப்
பற்றிய குறிப்புகளையும் வழிபாடுகள் பற்றியும் நீங்கள் முன்பே
படித்திருக்கிறீர்கள். அதனால் இவ்வழிபாட்டு முறை தொடர்ந்து
வந்ததை அறிகிறோம். அடுத்து வந்த காலப்பகுதியில்
ஆழ்வார்கள் இதனை முதன்மைப்படுத்திப் பாசுரங்களை
இயற்றியருளினர். இவையே திவ்வியப்பிரபந்தமாகும்.இந்தப் பாடத்தில் முதலாழ்வார்களும் திருமழிசை ஆழ்வாரும்
ஆற்றிய தொண்டினை விரிவாகக் கண்டோம். ஆழ்வார்கள்
திருமாலை வழிபடு தெய்வமாகக் கொண்டனர். தாம் பெற்ற
இன்பத்தைச் சாதாரணக் குடிமக்களும் பெறவேண்டும் என்று
விரும்பினர். பிறப்பில் மேல் கீழ் என்பது இறைவனை வழிபடத்
தடைக்கல்லாக இருக்கக்கூடாது எனத் துணிந்தனர். எனவே
இறைவனை மனம் ஒன்றி உள்ளன்போடு வழிபட்டால் போதும்,
அவன் அருள் கிட்டும் என எளிய தமிழில் பாசுரங்கள்
இயற்றினர். ஊர் ஊராக எழுந்தருளி இருக்கும் திருமால்
கோயில்களைப் பற்றிப் பாடினர்.அந்தந்த ஊரில் வாழும் மக்கள் தம் கடவுளை வழிபட வழி
ஏற்படுத்திக் கொடுத்தனர்.முதல் மூவரும், திருமழிசை ஆழ்வாரும் தம் பாசுரங்களில்
பயன் உரைக்கும் பாசுரங்களைப் பாடவில்லை. எனினும்
இறைவனை வழிபடுவதால் பெறும் பயனைப் பாசுரங்களின்
இடை இடையே சுட்டியுள்ளார்கள். ஆழ்வார்களுள்
காலத்தால் முற்பட்டவரான இவ்வாழ்வார்கள் நால்வரும்
வைணவ பக்தி இலக்கியம் செழித்து வளரவும் பரவவும்
வித்திட்டவர்கள்.