தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

P202233.htm-பூதத்தாழ்வார்

  • 3.3 பூதத்தாழ்வார்

     

    அன்பை விளக்காக்கி, ஆர்வத்தை நெய்யாக்கி, சிந்தனையை
    விளக்குத் திரியாக்கி ஒளிவிடுகின்ற ஞானச்சுடரை, ஞானத்தமிழ்
    கொண்டு ஏற்றுகின்றேன் எனத் தம் சொல் மாலையைத்
    தொடங்கியவர் பூதத்தாழ்வார்.

    ஐம்புலன்கள் ஆகி நின்றவனும், ஐம்பெரும் பூதங்களாகி
    உலகத்து உயிர்களை வாழ வைப்பவனும் உலகளந்த பிரான்
    எனத் தம்ºள் பெருமாளைக் காணும் ஆழ்வார் தம் மனம்
    திருமாலைத் தேடி ஓடுகின்றது என்று தம் நிலையை
    வெளிப்படுத்துகின்றார்.

    மலர்கள் நிறைந்த கொடி கொம்பை நாடிப் படர்வது போல,
    தம் மனம் நிலவைக் கடந்து வானத்தின் உச்சியை நோக்கி,
    அருள் செல்வம் வழங்கும் பெருமானைத் தேடி ஓடுகின்றது
    என ஓர் உவமை வழி விளக்குகின்றார்.

    தளிர்கள் நிறைந்த கொடி படர்வதற்குக் கொம்பைத் தேடுவது
    இயல்பு. அதுபோல இறைப்பற்று மிகுந்திருக்கும் தம் உயிர்
    அருள் நிறைந்திருக்கும் இறைவனை நாடிச் செல்வது இயல்பு
    என்பதைப் பெறவைக்கின்றார் பூதத்தார்.

    மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்புலன்களும்
    இறைவன் என்று சொன்ன பின்பு அப்புலன்கள் நல்வழிச்
    செல்வது இயற்கைதானே!

    3.3.1 அவதாரங்கள்

    • கிருஷ்ண - ராம அவதாரம்

    கண்ணனாய்ப் பாரதப் போரில் தேரை ஓட்டிச் சென்றான்;
    இராமனாய் மாயமானின் பின் சென்று சீதையைப் பிரிந்தான்;
    பாம்பணையில் பள்ளி கொண்டான் (3298) எனத் தம் மனத்து
    உள்ள     வேங்கடத்தானை - தேவாதி தேவனைப்
    போற்றுகின்றார் பூதத்தார்.

    • வாமன அவதாரம்

    மாவலியிடம் குள்ள வடிவினனாகச் சென்று மூன்று அடி
    மண்கேட்டு, பின் வடிவம் பெரிதாகி ஓர் அடியால்
    மண்ணையும், மற்றோர் அடியால் விண்ணையும் அளந்து,
    மூன்றாவது அடியை மாவலி அரசனின் தலையில் வைத்து
    அவன் அகந்தையை அவித்தவன். கருமாணி (கரிய நிறத்து
    பிரம்மச்சாரியாய்) இரந்த கள்வன் எனப் பல பாசுரங்களில்
    ñ£¬ôப் பாடியுள்ளார்.

    • நரசிம்ம அவதாரம்

    வரத்தின் வலிமையும், உடல் வலிமையும் இரணியனை
    அகங்காரம் படைத்தவனாக ஆக்கியன; நரசிம்மனாகத்
    தோன்றி அதை அழித்தான் திருமால். அப்படிப்பட்ட
    திருவடியை நாம் வணங்குவோமாக எனப் பாடுகின்றார்.

    வரம் கருதித் தன்னை வணங்காத வன்மை
    உரம் கருதி மூர்க்கத் தவனை நரம்கலந்த

    சிங்கமாய்க் கீண்ட திருவன் அடியிணையே
    அங்கண்மா ஞாலத் தமுது

    (3367)

    (மூர்க்கத்தவன் = இரணியன், திருவன் = திருவினை
    உடையவன், நரம் கலந்த சிங்கம் = நரசிங்கம்)

    அவன் திருவடிகள் இந்த உலகத்தவர்களுக்கு அமுது ஆகும்.

    3.3.2 மண்ணும் விண்ணும் வேண்டேன்

    பாரதக் கதையின் பெரும் பொருளாக இருப்பவன் கண்ணன்;
    கதையின் திருமொழியாக நின்றவன் திருமால்; உன்னை மொழி
    வழியே காணப் பணிக்க வேண்டும் (3347).

    மண்ணுலகம் ஆளேனே; வானவர்க்கும் வானவனாய்
    விண்ணுலகம் தன்னகத்து மேவேனே - நண்ணித்

    திருமாலைச் செங்கண் நெறியானை - எங்கள்
    பெருமாளைக் கைதொழுத பின்

    (3373)

    ‘மண்ணுலக ஆட்சியோ, வானுலக ஆட்சியோ தேவையில்லை.
    எமக்கு ஒரு குறையும் இல்லை, எங்கள் பெருமாளை
    வணங்கிய பிறகு’ என்கிறார்.

    3.3.3 இறப்பும் நிகழ்வும் எதிர்வும்

    நிலையற்ற மனிதனை / அரசனை / மனித வாழ்க்கையைப்
    பாடிப் பரிசில் பெறுவதை விட்டு, இம்மைக்கும் மறுமைக்கும்
    இன்பம் பயக்கும் இறைவனின் புகழ்பாட முன்வந்தனர்
    ஆழ்வார்கள். மக்களின் வாழ்வில் - சமுதாயத்தில் மாற்றத்தை
    ஏற்படுத்தினர். அதற்குத் தங்கள் வாழ்வை மெழுகுவர்த்தியாக
    ஆக்கிக் கொண்டனர்.

    இருந்தமிழ்நல் மாலை இணையடிக்கே சொன்னேன்
    பெருந்தமிழன் நல்லேன் பெரிது

    (3357)

    (இருந்தமிழ் = பெருந்தமிழ்)

    எனத் தமிழால் பக்திப் பாடல்கள் பாடி மகிழ்ந்தனர்.

    பணிந்தேன் திருமேனி; பைங்கமலம் கையால்
    அணிந்தேன் உன்சேவடிமேல் அன்பால்

    (3348:1-2)

    கண்டேன் திருமேனி யான்கனவில் ஆங்கவன்கைக்
    கண்டேன் கனலுஞ் சுடராழி - கண்டேன்
    உறுநோய் வினையிரண்டும் ஓட்டுவித்த பின்னும்
    மறுநோய் செறுவான் வலி

    (3350)

    (கனலும் = தீஉமிழும், ஆழி = சக்கரம்)

    இறைவன் அருளால் திருவுருவைக் கண்டேன்; அவன் கையில்
    சக்கரம் கண்டேன்; என் வினைகளாகிய நோயைப்
    போக்கினான். பிறவியாகிய நோய் மறுபடியும் வராதவாறு
    அழித்த அவன் திறமையையும் கண்டேன் எனச் சொல்லி,
    மக்களை     இறைவன்     மீது     நம்பிக்கை வைக்க
    நெறிப்படுத்துகின்றார் ஆழ்வார்.

    3.3.4 பகலும் இரவும்

    பகல் நேரத்திலும் இரவில் தூங்கும்போது கனவிலும்
    இறைவனை நினைக்கும் ஆழ்வார்,

    பகற்கண்டேன்; நாரணனைக் கண்டேன் கனவில்
    மிகக்கண்டேன் மீண்டவனை மெய்யே; - மிகக்கண்டேன்
    ஊன்திகழும் நேமி ஒளிதிகழும் சேவடியான்
    வான்திகழும் சோதி வடிவு

    (3364)

    (ஊன் = தசை, நேமி = சக்கரம் )

    3.3.5 நிலையாமை

    இளமை நீங்கி முதுமை அடைந்து உடல்நலியும் முன்பு
    இறைவனாகிய வேங்கடவனை நினைத்து வழிபடுங்கள் (3323)
    என்பது அப்பாசுரம்.

    இப்படி, பக்தி இயக்கக் காலத்தில் தோன்றிய பக்தி
    இலக்கியங்கள் மேற்குறித்தவற்றையும் பாடின. ஆனால்
    அவற்றைமட்டும் பாடி மக்களை அவர்களின் வாழ்க்கையை
    அச்சப்படும்படி செய்யாமல் வாழ்வை அழகு உடையதாக,
    மகிழ்ச்சி உடையதாக மாற்ற வேண்டும். அதற்கு மனம்
    இன்றியமையாதது.     அந்த     மனத்தை இறைவனிடம்
    செலுத்துங்கள். நிலைத்த பொருளும் நிலைத்த இன்பமும்
    பெறுவீர்கள் என அறிவூட்டின.


    தன்மதிப்பீடு : வினாக்கள் - I

    1.
    முதல் மூவர் எனப் போற்றப்படும் ஆழ்வார்கள்
    யாவர்?
    2.
    பஞ்ச பூதங்கள் - பொருள் தருக.
    3.
    பொய்கை ஆழ்வாரின் முதல் பாசுரத்தின்
    தொடக்கத்தை எழுதுக.
    4.
    ‘அன்பே தகளியா’ எனத் தொடங்கும்
    பாசுரத்தை அருளியவர் யார்?
    5.
    ‘ஞானத்தமிழ்’ என்னும் சொல் எந்தத்
    திவ்வியப் பிரபந்தத்தில் உள்ளது?
புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 11:36:05(இந்திய நேரம்)