Primary tabs
-
2.1 இதழ்கள்
பொதுவாக, அச்சிட்ட செய்திகளையும் கருத்துகளையும் பரப்ப வெளிவருகின்ற எல்லாவற்றையும் இதழ்கள் என்ற பொதுச் சொல்லால் குறிப்பிடலாம்.
2.1.1 இதழ்களின் வரையறைஉலக ஆங்கில என்சாட்ரா அகராதி பின்வருமாறு இதழ்களை வரையறை செய்கிறது:
செய்திகளைச் சேகரிப்பதும், சேகரித்த செய்திகளைச் செம்மையாக்கி, தொலைக்காட்சி, வானொலி, நாளிதழ்கள், வார, மாத இதழ்கள் முதலிய தகவல் தொடர்புச் சாதனங்கள் வழி செய்திகளாகவும் கட்டுரைகளாகவும் பிற இலக்கிய வகைகளாகவும் வெளியிடுவதும் ஆகிய அனைத்துப் பணிகளையும் செய்வன இதழ்கள் என்று உரைக்கப்படுகின்றது. தகவல் தொடர்புச் சாதனங்களின் வழி இலக்கிய வகைமைகளாகச் செய்திகளைத் தனித்த நடையில் எழுதுவதும் வெளியிடுவதும் ஆகிய செயல்கள் முதலியவற்றை மேற்கொள்வனவற்றையும் இதழ்கள் எனலாம். இதழ்கள் வெளியாகும் கால அடிப்படையிலும் உள்ளடக்க அடிப்படையிலும் வகைப்படுத்தி வரையறுக்கலாம். சான்றாக நாள்தோறும் வெளியாகும் இதழ்களை நாளிதழ்கள் எனலாம்.
2.1.2 இதழ்களின் வகைகள்இதழ்கள் பல்வேறு அடிப்படைகளில் வகைப்படுத்தப்படுகின்றன. இதழ்கள் வெளிவரும் கால அடிப்படையிலும், இடம்பெறும் செய்திகள் மற்றும் யாருக்காக வெளியிடப்படுகின்றன என்ற அடிப்படையிலும், தர அடிப்படையிலும் (Quality) வகைப்படுத்தப்படுகின்றன. இதழ்களின் உள்ளடக்க அடிப்படையிலும் வேறுபடுத்தி வகைகளாக்கப்படுகின்றன.
- கால அடிப்படை
பெரும்பாலும் இதழ்கள் வெளியாகும் காலத்தின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன. நாள்தோறும் வெளியானால் நாளிதழ் என்றும், வாரந்தோறும் வெளியானால் வார இதழ் என்றும், மாதந்தோறும் வெளியானால் மாத இதழ் என்றும், ஆண்டுதோறும் வெளியாகும் இதழ்கள் ஆண்டிதழ் என்றும் அழைக்கப்படுகின்றன.
கால அடிப்படையிலான இதழ்களின் பகுப்பை வரைபடம் மூலம் விளக்கலாம்.
- தர அடிப்படை
வெளியாகும் செய்திகள் மற்றும் எவ்வகையான வாசகர்களுக்காகப் பிரசுரமாகின்றன என்ற அடிப்படையில் இதழ்களைப் பகுக்கலாம். (1) தரமான இதழ்கள் (2) பொது மக்கள் இதழ்கள் (3) நச்சு இதழ்கள் எனப் பிரிப்பர்.
துறை சார்ந்த ஆராய்ச்சி இதழ்களைத் தரமான இதழ்கள் என்றும், பொழுதுபோக்கிற்காகப் பொது மக்கள் படிக்கும் இதழ்களைப் பொது மக்கள் இதழ்கள் என்றும் படிப்பவர்களின் உள்ளத்தை நஞ்சாக்கும் இதழ்களை நச்சு இதழ்கள் என்றும் வரையறுக்கலாம்.
- உள்ளடக்க அடிப்படை
இதழ்களில் இடம் பெறும் செய்திகள் மற்றும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டும் இதழ்களை வரையறைப்படுத்தலாம். அதாவது வெளியிடப்படும் செய்திகள் மற்றும் படைப்புகள் எதைப் பற்றிக் குறிப்பிடுகின்றன என்ற அடிப்படையில் இதழ்கள் வகைப்படுத்தப்படுகின்றன. இவ்வகையான பகுப்பு மிக நீண்டதாகவும் விரிவானதாகவும் உள்ளமையைப் பாடத்தின் போக்கில் காணலாம்.