Primary tabs
-
2.4 உள்ளடக்க அடிப்படையிலான இதழ்கள்
கால அளவு, வெளியாகும் செய்திகளின் தன்மை முதலியவற்றின் அடிப்படையில் வகைப்படுத்தினாலும் இதழ்களில் வெளியாகும் செய்திகளின் அடிப்படையில் இதழ்களை வேறுபடுத்தி அறியலாம். இதனை உள்ளடக்க அடிப்படையிலான பகுப்பு எனலாம். இவ்வகையிலான பகுப்பு மிக நீண்டதாகவும் முடிவற்றதாகவும் உள்ளமை நினைவில் கொள்ளத்தக்கதாகும். பெரும்பான்மையும் இடம் பெறும் செய்திகளின் அடிப்படையிலும் சிலவற்றை வரையறை செய்யலாம். அவை வருமாறு :
(1)
அயல்நாட்டுத் தூதரக இதழ்கள்
(2)
அரசியல் இதழ்கள்
(3)
அறிவியல் இதழ்கள்
(4)
இலக்கிய இதழ்கள்
(5)
கலை இதழ்கள்
(6)
சமய இதழ்கள்
(7)
சிறுவர் இதழ்கள்
(8)
சோதிட இதழ்கள்
(9)
தனிச்சுற்று இதழ்கள்
(10)
திரைப்பட இதழ்கள்
(11)
தொகுப்பு இதழ்கள்
(12)
தொழில் இதழ்கள்
(13)
பன்மொழி இதழ்கள்
(14)
புலனாய்வு இதழ்கள்
(15)
பொருளாதார இதழ்கள்
(16)
பொழுதுபோக்கு இதழ்கள்
(17)
மகளிர் இதழ்கள்
இந்தப் பட்டியல் முடிவற்றதாகவும் விரிந்து இடமளிக்கும் தன்மைமிக்கதாகவும் உள்ளது என்பது எண்ணத்தக்கதாகும். இந்தப் பகுப்பினை ஒவ்வொன்றாக வரையறுத்துக் காண்போம்.
2.4.1 அரசியல் இதழ்கள்அரசியல் செய்திகள் மட்டும் வெளியிடும் இதழ்கள் அரசியல் இதழ்கள் என வரையறுக்கப்படுகின்றன. பல்வேறு அரசியல் கட்சிகளும் தங்களது கட்சிக்கென இதழ்களை நடத்துகின்றன. இந்தியாவில் உள்ள கட்சிகள் அனைத்தும் வட்டார மொழிகளிலும் ஆங்கிலத்திலும் இதழ்களை நடத்துகின்றன. இவற்றில் நாளிதழ்கள், வார, மாத இதழ்கள் அடங்கும். பிற இதழ்களைப் போல இந்த அரசியல் கட்சி இதழ்கள் பொது மக்களால் விரும்பிப் படிக்கப்படாவிட்டாலும், கட்சியைச் சேர்ந்தவர்கள் படிக்கிறார்கள்.
சான்று :
திராவிடர் கழகம் - விடுதலை
கம்யூனிஸ்ட் கட்சி - ஜனசக்தி
- அயல்நாட்டுத் தூதரக இதழ்கள்
ஒரு நாட்டில் உள்ள பிற நாட்டுத் தூதரகங்கள் நடத்தும் இதழ்கள் இவ்வகை இதழ்கள் ஆகும். இவ்விதழ்களில் அவ்வந்நாட்டுச் செய்திகள், தூதரகம் உள்ளநாட்டு மக்களுக்கு அறிமுகப்படுத்தப்படுகின்றன. தூதரகம் அமைந்துள்ள நாட்டின் மொழியில் இத்தூதரக இதழ்கள் உள்ளன.
சான்று:
இரஷ்யத் தூதரகம் இந்தியாவில் வெளியிட்ட சோவியத்நாடு (தற்பொழுது இல்லை) இதழ்.
அறிவியல் தொடர்பான பல்வேறு துறைகளில் வெளியாகும் இதழ்களை அறிவியல் இதழ்கள் என வரையறுக்கலாம். இவ்விதழ்களில் அந்தந்த அறிவியல் துறைசார்ந்த ஆய்வுகள், வளர்ச்சி, புதிய கண்டுபிடிப்பு முதலிய செய்திகள் இடம்பெறுகின்றன. இத்தகைய அறிவியல் இதழ்கள் மாத இதழ்களாகவும், காலாண்டு, அரையாண்டு இதழ்களாகவும் வெளியாகின்றன. வட்டார மொழியைவிட இவ்வறிவியல் இதழ்கள் ஆங்கில மொழியில் தான் அதிகமாக வெளியாகின்றன. அறிவியல் இதழ்கள் பெரும்பாலும் தொழில்நுட்பக் கழகத்தின் பிரதிநிதிகள் அல்லது நிபுணர்களால் வெளியிடப்படுகின்றன. இவை, பொது மக்கள் ஆதரவைப் பெறவில்லை எனினும், அவ்வத்துறை சார்ந்தவர்களால் பெரிதும் விரும்பப்படுகின்றன.
சான்று:
வேளாண் மைத் துறை:
மேழிச்செல்வம், ஏர்முரசு - மாத இதழ்
உணவுப் பொருள் :
பனைச்செல்வம், கரும்பு - மாத இதழ்
மருத்துவ இதழ்கள் :
கட் (GUT) - மாத இதழ் பிரிட்டிஷ் ஜர்னல்ஆப்சர்ஜரி- மாத இதழ்
நல்வாழ்வு இதழ் :
பேமிலிஹெல்த்; நல்வாழ்வு - மாத இதழ்
கணினித் துறை :
தமிழ்க் கம்ப்யூட்டர்-மாத இதழ்
தொழில் சார்ந்த இதழ்கள் பொருள் உற்பத்தி, வர்த்தகம் பற்றிய செய்திகளை வெளியிடுபவையாக உள்ளன. அவ்வத்துறை சார்ந்த நிபுணர்களால் இவ்விதழ்கள் வெளியிடப்படுகின்றன. நாடு தழுவியனவாக இல்லாமல் இவ்வகை இதழ்கள் உலகு தழுவியனவாக உள்ளன.
தொழிற்சங்கம் சார்ந்த செய்திகள் வெளியானால் அவை தொழிற்சங்க இதழ்கள் எனப்படுகின்றன.
சான்று:
சகோதரன் (சிம்சன்-கூட்டுக் கம்பெனிகளின் தேசீயப் பணியாளர் சங்க வெளியீடு)
தொழில் உற்பத்தி, விவசாய விளைபொருள் உற்பத்தி, அவற்றின் கொள்முதல் மற்றும் விற்பனை விலைகள் பற்றிய செய்தி வெளியிடும் இதழ்கள் மார்க்கெட் நிலவர இதழ்கள் எனப்படுகின்றன. வர்த்தக நிறுவனங்கள் தங்களுக்கெனத் தனியாக வெளியிடும் இதழ்கள் வர்த்தக நிறுவன இதழ்கள் அல்லது வளாக இதழ்கள் எனப்படுகின்றன.
சான்று :
சக்தி சர்க்கரை நிறுவன இதழ்.
2.4.4 இலக்கிய, கலை, திரைப்பட, பொழுதுபோக்கு இதழ்கள்
இலக்கியம், கலை, திரைப்படம், பொழுதுபோக்கு ஆகியவற்றிற்கெனத் தனித்தனி இதழ்கள் வெளிவருகின்றன.
- இலக்கிய இதழ்கள்
சிறுகதை, நாவல், நாடகம், கவிதை, கட்டுரை முதலிய இலக்கிய வகைகள் பல்வேறுபட்ட படைப்பிலக்கியவாதிகளால் இதழ்களில் படைக்கப்படுகின்றன. பெரும்பாலும் இவை பொழுதுபோக்கு இதழ்களில் இடம்பெறுகின்றன. ஆழமான இலக்கியத்திற்கு எனத் தனித்த இலக்கிய இதழ்கள் தற்போது வெளியாகின்றன.
சான்று :
குமுதம் தீராநதி ;
காலச்சுவடு
கவிதை மட்டும் வெளியாகும் இதழ்களைக் கவிதை இதழ்கள் எனவரையறுக்கலாம்.
சான்று:
பொயட் - ஆங்கிலக் கவிதை இதழ்- மாதம் ஒருமுறை.
கதைகள் மட்டும் வெளியாகும் இதழ்கள் உண்டு. இவற்றைக் கதை இதழ்கள்/புதின இதழ்கள் எனலாம்.
சான்று :
ராணிமுத்து ;
நாவல் டைம்ஸ்
- கலை இதழ்கள்
இசை, சிற்பம், ஓவியம், நடனம் முதலிய கலைகளுக்கு எனத் தனித்த இதழ்களைக் கலைகளுக்கான இதழ்கள் என வரையறுக்கலாம். இவை அவ்வத்துறை சார்ந்த செய்திகளையும், இன்றிமையா நிகழ்ச்சிகளையும், மாநாடுகள், விழாக்கள் பற்றிய செய்திகளையும் வெளியிடுகின்றன.
சான்று :
சரிகமபதநி:
ஸ்ருதி - இசை பற்றிய மாத இதழ்கள்
நாளிதழ்கள், வார, மாத இதழ்கள் முதலியவை கலைகளுக்கு எனத் தனித்த இடமளித்தாலும், இவ்வாறு தனித்த கலை இதழ்களும் உண்டு.
- திரைப்பட இதழ்கள்
திரைப்படம் பற்றிய தொழில்நுட்பம், படப்பிடிப்பு, திரைப்படக் கலைஞர்கள் பற்றிய செய்திகள் முதலியன திரைப்பட இதழ்களின் உள்ளடக்கமாகும். பொதுவாக இந்திய இதழ்களில் வார, மாத, இதழ்களும் திரைப்படச் செய்திகளுக்கு இடமளிக்கின்றன. சான்றாக வார இதழான குமுதம் இதழின் நடுப்பக்கத்தில் வரும் படம் மற்றும் திரைப்படச் செய்திகளைக் குறிப்பிடலாம். தமிழ் மொழியில் திரைப்பட இதழ்கள் பொழுதுபோக்கு அம்சங்கள் நிரம்பியவையாக உள்ளன.
சான்று :
சினிமா எக்ஸ்பிரஸ் ;
பிலிமாலயா
- பொழுதுபோக்கு இதழ்கள்
பொதுமக்களால் விரும்பிப் படிக்கப்படுகிற கதை, கட்டுரை, திரைப்படம், துணுக்கு முதலிய பொழுதுபோக்கு அம்சங்கள் நிரம்பிய இதழ்களைப் பொழுதுபோக்கு இதழ்கள் எனலாம். இவ்விதழ்களை ஜனரஞ்சக இதழ்கள் என்றும் உரைப்பர்.
சான்று :
குமுதம், ஆனந்த விகடன்
மகளிருக்கென, சிறுவர்களுக்கென இதழ்கள் பல உள்ளன.
- மகளிர் இதழ்கள்
மகளிர் தொடர்பான அழகுக்குறிப்புகள், சமையல் குறிப்புகள், வீட்டுக்குறிப்புகள், கலை, கைவேலை, உடல்நலம், ஆன்மிகம், கதைகள், பண்டிகை, ஆடை வகை, வீட்டுப் பராமரிப்பு முதலிய செய்திகள் இடம்பெறும் இதழ்களை மகளிர் இதழ்கள் எனலாம். அதாவது மகளிரே இவ்விதழ்களுக்கான வாசகர்கள் ஆவர்.
சான்று :
மங்கையர் மலர்,
பெண்மணி
- சிறுவர் இதழ்கள்
சிறுவர்களுக்கான இதழ்களை எல்லா நாடுகளும் வெளியிடுகின்றன. படங்கள் நிறைந்தனவாகவும், கதைகள் அதிகம் கொண்டனவாகவும் சிறுவர் இதழ்கள் உள்ளன. வாசகர்களாக மட்டுமின்றிப் படைப்பாளர்களாகவும் சிறுவர்கள் உள்ளனர். சிறுவர் இதழ்கள் சிறுவர்களது உள்ளத்தைப் பண்படுத்துகின்றன. அறஉணர்வு, நீதிபோதனை சார்ந்த கதைகள், புராணம், வரலாறு, கல்வி, அறிவியல் தொடர்பான கதைகள், கட்டுரைகள் முதலியன எளிய நடையில் வெளியாகின்றன.
சான்று :
சுட்டி விகடன், அம்புலிமாமா
சமயக் கருத்துகளை வெளியிடுவதற்கெனத் தனியாகவும், சோதிடம் பற்றிய செய்திகளுக்கெனத் தனியாகவும் இதழ்கள் வெளியிடப்படுகின்றன.
- சமய இதழ்
இந்திய இதழியல் வரலாற்றில் தொடக்க இதழியல் முயற்சிகள் சமயத்தோடு தொடர்புடையவை. இவ்வகை இதழ்கள் பொதுவானதாகும், குறிப்பிட்ட சமயம் சார்ந்தும், ஆதீனங்கள், மடம் முதலிய அமைப்புகள் சார்ந்தும், கோவில்கள் சார்ந்தும் வெளிவருவது உண்டு.
பொதுவான ஆன்மீக இதழ் :
குமுதம் பக்தி ஸ்பெஷல்,
ஆலயம், சமயம் சார்ந்த இதழ் :
முஸ்லிம் முரசு,ஞான பூமி.
சேவை நிறுவனம் சார்ந்த இதழ் :
ஞானசம்பந்தம் (தருமபுர ஆதீனவெளியீடு)
கோயில் சார்ந்த இதழ் :
திருமலை (திருப்பதி தேவஸ்தான இதழ்).
- சோதிட இதழ்
சோதிடம் தொடர்பான செய்திகளை வெளியிடும் இதழ்களைச் சோதிட இதழ்கள் எனலாம். நாளிதழ், வார, மாத இதழ்கள் சோதிடத்துக்காகத் தனியே இடம் ஒதுக்குகின்றன.
சான்று :
ஜோதிட ரத்னா
மேற்குறிப்பிட்டவை தவிர, செய்திகளின் தொகுப்பாகவும், ஒரே இதழில் பல மொழிகளில் செய்திகள், கருத்துகள் இடம்பெறுவதாகவும், புலனாய்வுச் செய்திகளை வெளியிடுவதற்காகவும், தனிச்சுற்றுக்காகவும் இதழ்கள் வெளி வருகின்றன.
- தொகுப்பு இதழ்கள்
செய்திகள், நாட்டு நடப்புகள், நிகழ்வுகள் முதலியவற்றைத் தொகுத்து வெளியிடும் இதழ்களைத் தொகுப்பு இதழ்கள் என வரையறுக்கலாம். கிட்டத்தட்ட நாளிதழ்ச் செய்திகளின் தொகுப்பாக இவ்வகை இதழ்கள் உள்ளன.
சான்று :
கல்கண்டு, முத்தாரம், மஞ்சரி.
- பன்மொழி இதழ்கள்
ஓர் இதழிலேயே பல மொழிகளில் செய்திகள், கதை, கட்டுரைகள் இடம் பெறுவதுண்டு. இவற்றைப் பன்மொழி இதழ்கள் எனலாம்.
சான்று :
திருமலை இதழ்
- புலனாய்வு இதழ்கள்
செய்திகளின் பின்னணி, அரசியல், சமூகவியல் குற்றங்கள் முதலியவற்றின் பின்னணியைத் துப்பறிந்து வெளியிடும் இதழ்களைப் புலனாய்வு இதழ்கள் என வரையறுக்கலாம்.
சான்று :
ஜூனியர் விகடன் ,
தராசு
- தனிச்சுற்று இதழ்கள்
குறிப்பிட்ட வாசகர்களுக்காக மட்டும் இதழ்கள் வெளிவருகின்றன. இவை பெரும்பான்மை வாசகர்களைச் சென்று அடைவதில்லை. ஆகவே, இதில் வரும் செய்திகளும் வரையறை உடையவையாக உள்ளன.
சான்று:
தமிழ்ப்பாவை - எழுத்தாளர்களுக்கான இதழ்