Primary tabs
-
6.1 இதழ்களின் சுதந்திரம்
இதழ்களின் சுதந்திரம் (Freedom of the Press) என்பது இன்றியமையாததாகும். இதழியல் சுதந்திரம் என்பது இதழியல் வளர்ச்சியோடு இணைந்த ஒன்றாகும். முதலில் இதழ்களின் சுதந்திரம் பற்றிய பொருள் விளக்கத்தைக் காண்போம்.
பிரஸ் (Press) என்ற ஆங்கிலச் சொல்லை, தமிழில் முதலில் பத்திரிகை என்று மொழிபெயர்க்கின்றோம். அச்சிடுவதற்கு உரிய கருவிகளையும் எந்திரங்களையும் கொண்ட அச்சகம் என்றும் பொருள் உண்டு. விரிந்த பொருளில், பொதுச் செய்திகளையும் அவை பற்றிய கருத்துரைகளையும் கொண்ட இதழ்களைக் குறிக்கும் வகையில் இதனைப் பயன்படுத்துகின்றனர். ‘இங்குச் செய்தித்தாட்கள், மலர்கள், செய்திப்பணிகள், இதழ்களில் பணிபுரியும் எல்லா வகை இதழாளர்கள் ஆகிய அனைத்தையும் குறிக்கும் வகையில் பத்திரிகை என்ற சொல்லைப் பயன்படுத்துகிறோம்’ என்பார் மா.பா. குருசாமி.
பத்திரிகை என்பதன் மாற்றாக இதழ் / இதழியல் என்ற சொல்லைக் கையாளலாம். இதழியல் சுதந்திரம் என்ற தொடருக்குப் பலரும் பலவாறு பொருள் கூறுகின்றனர். எந்த வகையான சட்டத்தடையோ கட்டுப்பாடோ இல்லாமல் எதனையும் அச்சிட்டு வெளியிடுவதை இதழியல் சுதந்திரம் என்பர்.
இதழியல் சுதந்திரம் என்பதைப் பலவாறு குறிப்பிடுகின்றனர்.
-
விருப்பு வெறுப்பின்றிச் செய்திகளை வெளியிடுதல்.
-
அரசின் கட்டுப்பாடில்லாமல் செயல்படுதல்.
-
விளம்பரதாரர்கள், செல்வாக்குப் படைத்தவர்கள் முதலியவர்களின் தலையீடின்றி இருத்தல்.
-
நிதிக்கும் ஏனைய பிறவற்றிற்கும் மற்றவர்களைச் சாராமல் இருத்தல்.
எனப் பல்வேறு விதமாகப் பொருள் கூறுகின்றனர்.
இந்தியாவின் முதல் இதழியல் குழு (Press Commission) ‘பொது அதிகாரத்தின் எந்த வகையான தலையீடும் இல்லாமல் கருத்துகளைக் கொண்டிருக்கவும், செய்திகளைப் பெறவும் அச்சிட்டு வெளியிடவும் இருக்கின்ற சுதந்திரம்’ எனப் பொருள் கூறுகிறது. மேலும் ‘எதனை வெளியிட விரும்புகின்றார்களோ அதனை அரசின் முன் அனுமதியின்றி அச்சிட்டு வெளியிடப் பொது மக்களுக்கு உரிமை உண்டு. ஆனால், வெளியிடுபவர்கள் வெளியிட்ட செய்திகளுக்கு உரிய சட்டபூர்வமான பொறுப்பினை ஏற்றுக் கொள்ள வேண்டும்’ எனவும் கூறுகின்றது.
இதழியல் சுதந்திரம் என்பது மக்களாட்சியில் மக்களுக்குக் கிடைத்திருக்கக்கூடிய ஒன்றாகும். பொதுவாக மக்களாட்சியில் அச்சிடும் உரிமை (Right to Print), திறனாய்வு உரிமை (Right to Criticise), அறிவிக்கும் உரிமை (Right to Report) இதழ்களுக்கு உண்டு. இதனை, ‘இதழியல் சுதந்திரத்தில்,
-
செய்திகளின் எல்லா மூலங்களோடும் தொடர்பு கொள்ளும் சுதந்திரம்.
-
வெளியீட்டுச் சுதந்திரம்.
-
சுற்றுக்கு விடும் சுதந்திரம் (Freedom of Circulation)
என்ற மூன்று கூறுகளும் உள்ளன’ என்று இதழியல் குழு கூறுகிறது.
தகவல் உரிமைகள் மையம் (Freedom of Information Centre) என்பது கொலம்பியாவிலுள்ள மிசௌரி பல்கலைக் கழகத்தில் உள்ளது. அந்த மையம், இதழியல் சுதந்திரம் என்பதற்கு,
-
செய்திகளைப் பெறுவதற்கு உரிமை.
-
முன் கட்டுப்பாடின்றி அச்சிடும் உரிமை.
-
தண்டனை பற்றிய அச்சமோ, அச்சுறுத்தலோ இன்றி அச்சிடும் உரிமை.
-
தகவல் தொடர்புக்கு வேண்டிய வாய்ப்புகளையும் சாதனங்களையும் பெற்றுக் கொள்கின்ற உரிமை.
-
சட்டப்படி செயல்படும் அரசோ, சட்டத்திற்குப் புறம்பாக மக்களோ தலையிடாமல் செய்திகளைப் பரப்புகின்ற உரிமை.
எனப் பொருள் தருகிறது.
மேற்கூறிய விளக்கங்களின் அடிப்படையில் இதழ்களின் சுதந்திரம் என்பது கூட்டுச் சுதந்திரம் (Collective Freedom) என்பது பெறப்படுகின்றது.
-