தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Diploma Course - P20416-இந்தியாவில் இதழியல் சுதந்திரம்

  • 6.5 இந்தியாவில் இதழியல் சுதந்திரம்

    இந்திய இதழியல் வரலாறு என்பது இதழியல் சுதந்திரத்திற்கான போராட்ட வரலாறு என்றால் மிகையில்லை. மேலும், இந்திய விடுதலைப் போராட்ட வரலாறும் இதழியல் சுதந்திரத்திற்கான போராட்டமும் இணைந்தே உள்ளன எனலாம்.

    6.5.1 முதல் இதழியல் முயற்சி

    கல்கத்தாவில் கிழக்கிந்தியக் கம்பெனியில் பணியாற்றிய வில்லியம் போல்ட்ஸ் (William Bolts) என்பவர் 1766ஆம் ஆண்டு இதழ் ஒன்றைத் தொடங்க முயற்சி செய்தார். அம்முயற்சியைக் கண்டு அஞ்சிய கம்பெனியார் அவரைப் பணியிலிருந்து அகற்றினர். எனினும், தனது முயற்சியைக் கைவிடாத வில்லியம் போல்ட்ஸ் செய்தித்தாள் பற்றி மேலும் ஓர் அறிக்கையை வெளியிட்டார். அதனால் ஆத்திரம் கொண்ட அரசு அவரை இந்தியாவிலிருந்து ஐரோப்பாவிற்கு நாடு கடத்தியது. இந்தியாவின் முதல் இதழியல் முயற்சி முளையிலேயே கிள்ளி எறியப்பட்டது.

    6.5.2 ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி

    கிட்டத்தட்டப் பதினான்கு ஆண்டுகள் கழித்து ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி (James Augustus Hicky) என்பார் 1780ஆம் ஆண்டு ஜனவரி 29இல் கல்கத்தாவில் பெங்கால் கெசட் அல்லது கல்கத்தா ஜெனரல் அட்வர்டைசர் என்ற இதழைத் தொடங்கினார். ஆங்கில மொழியில் வார இதழாக இந்த இதழ் வெளியானது. விளம்பரங்கள், அறிக்கைகள் முதலியவற்றிற்கு முதலிடம் தந்த ஹிக்கி ஆங்கிலேயர்களின் நடவடிக்கைகளையும் தமது இதழ்களில் இடம் பெறச் செய்தார். ஆங்கிலேய கவர்னர் வாரன் ஹேஸ்டிங்ஸ், உச்ச நீதிமன்ற நீதிபதி எலிஜா இம்பே (Elijah Impay) ஆகியோரும் ஹிக்கியின் கணைகளில் இருந்து தப்பவில்லை. இதனால் அவதூறு வழக்கு இடப்பட்டு ஹிக்கியின் இதழ் தடைசெய்யப்பட்டது. இரண்டே ஆண்டுகளில் 1782இல் பெங்கால் கெசட் இதழ் நின்றது. எனினும் ஹிக்கி இந்தியச் செய்தித்தாளின் தந்தையாகவும், பெங்கால் கெசட் இந்தியாவின் முதல் செய்தி இதழாகவும் சிறப்புப் பெற்றுள்ளமை நினைவில் கொள்ளத் தக்கதாகும்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 12:51:44(இந்திய நேரம்)