Primary tabs
-
6.6 தேசத் தலைவர்களின் இதழ்கள்
இந்திய விடுதலைப் போராட்டத்திற்கும் சமுதாயச் சீர்திருத்தத்திற்கும் தேசத் தலைவர்கள் இதழ்களையே தேர்ந்தெடுத்தனர்.
இராஜாராம் மோகன்ராய் பிராமனிகல் மேகசின், சம்பாத் கௌமுதி, மீரட்-அல்-அக்பர் முதலிய இதழ்களை ஆங்கிலம், பெர்சியன், உருது ஆகிய மொழிகளில் வெளியிட்டார். இவற்றின் மூலம் இந்து சமயம், விடுதலை, சமுதாயச் சீர்திருத்தம் முதலியவை பற்றிய கருத்துக்களை வெளிப்படுத்தினார்.
திலகர் கேசரி, மராட்டா என்ற இரு இதழ்கள் மூலம் விடுதலை வேள்வியை வளர்த்தார். ஹரிஜன், யங் இந்தியா இதழ்கள் மூலம் காந்தியடிகள் தீண்டாமை, ஆதிக்க எதிர்ப்பு ஆகியவற்றை மக்களிடம் நிலைநாட்டினார்.
அல்ஹிலால் என்பது மௌலானா அபுல்கலாம் ஆசாத்தின் இதழாகும். யுகாந்தர் அரவிந்தர் நடத்திய இதழ். பாரதியார் இந்தியா இதழை நடத்தினார். நேரு நேஷனல் ஹெரால்ட் இதழ் மூலம் சுதந்திர உணர்வைப் பரப்பினார்.
6.6.1 இந்திய விடுதலையும் இதழியல் சுதந்திரமும்
ஆதிக்க எண்ணம் கொண்ட ஆங்கில ஏகாதிபத்தியம் இதழ்களைச் சட்டத்தின் மூலம் ஒடுக்க முற்பட்டது. வில்லியம் போல்ட்ஸின் முயற்சியும் ஹிக்கியின் இதழும் தொடக்கத்திலேயே நசுக்கப்பட்டன.
இதழ்கள் பதிவுச் சட்டம், பறிமுதல், வாய்ப்பூட்டுச் சட்டம் முதலியவற்றால் இந்திய இதழ்கள் நசுக்கப்பட்டன. இதழ்களை நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டனர். கடுமையான தண்டனைகளும், அபராதங்களும் இதழ்களை ஒடுக்க முற்பட்டன. எனினும் அடக்குமுறையால் விடுதலை வேட்கை கிளர்ந்து எழுந்தது. இந்தியா 1947ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15ஆம் நாள் விடுதலை பெற்றது. பின்னர் இந்திய அரசு சில சட்டங்கள் மூலம் இதழ்களை வரையறைப்படுத்தியது.
1975ஆம் ஆண்டில் மத்திய அரசு நெருக்கடி நிலையைக் கொண்டு வந்தது. மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டன; இதழ்களின் சுதந்திரம் நசுக்கப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இதழ்களுக்குத் தணிக்கை முறை வந்தது.
தணிக்கைக்கு உட்பட்ட இதழ்கள் வெற்றிடங்களுடன் வெளியாயின. எவ்வாறேனும் உண்மையை மக்களுக்கு எடுத்துரைக்க இந்திய இதழ்கள் போராடின. 1977 மார்ச் வரை இந்திய இதழ்களுக்கு இந்தச் சோதனை இருந்து வந்தது. பின்னர் வந்த தேர்தலில் நாட்டில் அரசியல் மாற்றம் ஏற்பட்டது. இம்மாற்றம் இதழ்களின் பணியால் ஏற்பட்ட விளைவாகும். இவ்வாறு இதழ்கள் ஆட்சி மாற்றத்திற்கு வழிகோலின என்பது இதழ்களின் வலிமையை நமக்கு உணர்த்துகின்றது எனலாம்.