தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

4.1 இதழ்களில் படங்கள்

  • 4.1 இதழ்களில் படங்கள்

    1841இல் முதன்முதலாகச் செய்தித்தாள்களில் படங்கள் வெளியிடும் முறை தோன்றியதாகக் கூறுவர். 1900இல் ஈயப் படக்கட்டை தயாரிக்கும் முறை தோன்றிய பின்னர் இதழ்களில் படங்கள் மிகுதியும் வரத் தொடங்கின. தாள் தயாரிப்பும் பல்வேறு வகையான அச்சு மைகளின் கண்டுபிடிப்பும் படங்களின் வளர்ச்சியை விரைவுபடுத்தின. இன்று எல்லா இதழ்களிலும் படங்கள் வெளியிடப்படுகின்றன.

    பொதுவாக இதழ்களில் இடம் பெறும் படங்களை இரண்டு வகைப் படங்கள் என்று வரையறுக்கலாம்.

    (1)

    நிழற்படங்கள்

    (2)

    வரைபடங்கள்

    இன்றைய காலக்கட்டத்தில் நிழற்படக் கலைஞர்களையும் வரைபடக் கலைஞர்களையும் இதழ்கள் பணியில் அமர்த்திக் கொள்கின்றன. அவர்கள் பணி செய்வதற்கான வசதி வாய்ப்புகள் அலுவலகங்களிலும் அளிக்கப் பெறுகின்றன.

    இதழ்களில் வெளிவரும் நிழற்படங்களைக் கீழ்க்காணும் முறையில் இதழாளர் வகைப்படுத்துவர்.

    செய்தி நிகழ்ச்சிப் படங்கள் (News Event Photos)

    முக்கியமான செய்தியை வெளிக்காட்டும் படங்கள் இந்த வகையில் அடங்கும். எடுத்துக்காட்டு: முதலமைச்சர் பதவியேற்பு விழா

    உருவப் படங்கள் (Portrait Pictures)

    செய்தியில் வருபவர்களை அறிமுகப்படுத்தும் படங்களை வெளியிடலாம். நோபல் பரிசு பெற்றவர்களின் உருவப் படங்கள், அமைச்சரவையில் இடம் பெறுபவர்களின் படங்கள் போன்றவற்றை எடுத்துக்காட்டாகக் கூறலாம்.

    கவர்ச்சிப் படங்கள் (Cheese Cake shots)

    சில இதழ்களில் ‘நடுப்பக்கப் படங்கள்’ என்று வெளியாகும் பாலுணர்வைத் தூண்டும் படங்களையும், காதலுணர்வை வெளிக்காட்டுபவை போன்ற கவர்ச்சிப் படங்களையும் இதற்குச் சான்றாகக் கூறலாம்.

    செயல் விளக்கப் படங்கள் (Action Shots)

    ஒரு செயலைச் செய்கின்ற பொழுது எடுக்கின்ற படங்களுக்குத் தனிச் சிறப்பு உண்டு. உயரம் தாண்டும் நிலையில் எடுக்கப்பட்ட படம், விளையாட்டு வீரர்கள் ஓட்டப் பந்தயத்தில் ஓடும் நிலையில் எடுக்கப்பட்ட படம் போன்றவை இத்தலைப்புக்குப் பொருந்தி வருவன ஆகும்.

    வடிவமைப்புப் படங்கள் (Pattern shots)

    விளம்பர நோக்கில் உற்பத்தி செய்த பொருள்களின் வடிவமைப்பு வெளிப்படும் வகையில் எடுக்கப் பெற்ற படங்களைச் செய்தித் தாள்கள் வெளியிடலாம். புதிய தொலைக்காட்சிப் பெட்டிகள், கார், ஸ்கூட்டர், மோட்டார் சைக்கிள் போன்றவற்றின் படங்கள் இப்பிரிவில் அடங்கும்.

     

    உற்பத்திப் பொருள் படங்கள் (Product Shots)

    பொதுவாக, தொழிற்சாலைகள் உற்பத்தி செய்கின்ற பலவகைப் பொருட்களை (வீட்டுப் பயன்படு பொருட்கள்) விளக்கும் படங்களை வெளியிடலாம்.

    நிழற்படக் கலைஞர்கள் தற்காலத்தில் தொழில் நுட்பத் திறன் வாய்ந்தவர்களாகவும், அதற்கேற்ற நிழற்படக் கருவிகளைப் பயன்படுத்தும் திறமை உள்ளவர்களாகவும் திகழ்கின்றனர். அதற்கேற்ப, திறன்மிக்க கருவிகளும் பயன்பாட்டில் வந்து விட்டன.

    நிழற்படங்கள் செய்திகளின் விளக்கமாக அமைகின்றன. செய்திக்கு நிழற்படம் கூடுதலான வரவேற்பையும் பெற்றுத் தரும்; செய்தியைப் படிக்கும் ஆர்வத்தையும் உண்டு பண்ணும்.

    நிழற்படக் கலைஞர்கள், செய்தியாளர் கூறும் செய்திகளுக்குப் படத்தை எடுத்துத் தருவார்கள். அதில் அவர்களின் காலத்திற்கேற்பச் செயல்படும் திறன் (சமயோசிதம்), படைப்பாற்றல், உத்திகளைக் கையாளும் திறன் இவையெல்லாம் சேரும்போது படங்கள் கூடுதலான வரவேற்பைப் பெறுகின்றன.

    எடுக்கப்பட்ட நிழற்படங்களை அப்படியே செய்தித்தாளில் வெளியிடுவதில்லை. செய்தி ஆசிரியரோ, நிழற்படப் பிரிவு ஆசிரியரோ படத்தில் தேவை இல்லாதவற்றை அகற்றி, எப்படி அதனை வெளியிட வேண்டுமென்று முடிவு செய்கின்றனர். இப்படி வேண்டாதவற்றை அகற்றி, வெளியிட வேண்டியவற்றைத் தீர்மானித்தலை வெட்டுதல் (Crop or Trim) என்று அழைப்பர். படம் தெளிவாக அமைய இது உதவும். படத்திற்குத் தலைப்பிடுதலும் (Caption) ஒரு கலை. ஏனென்றால் நல்ல ‘தலைப்பு’ படத்திற்கு மேலும் சிறப்பினைக் கொடுக்கும். தலைப்பு மிகச் சுருக்கமாகவும், கருத்தைக் கவரும் விதத்திலும் அமைய வேண்டும்.

    ஓரிடத்தில் படத்தையும் மற்றோர் இடத்தில் செய்தியையும் வெளிட்டு, படிப்போரின் ஆவலைத் தூண்டும் வகையிலும் தலைப்பினை வெளியிடலாம். சான்றாக, முரண்பட்ட கருத்துக்கொண்ட அரசியல் கட்சித் தலைவர்கள் இருவர் சிரிக்கும் படத்தை ஓரிடத்தில் வெளியிட்டு 'இவர்கள் ஏன் சிரிக்கிறார்கள்?' (காண்க 7ஆம் பக்கம்) என்று தலைப்பிடலாம்.

    சில சமயங்களில் நிழற்படச் செய்தியாளர்களுக்கு இன்னல் நேர்வதும் உண்டு. அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல், அரிதான படங்களை எடுத்தளித்து வரலாறு படைக்கவும் இவர்களால் முடியும். இந்திய அளவில் படங்களோடு செய்திகளைப் பொலிவுடன் தரும் இதழ்களில் குறிப்பிடத்தகுந்ததாக ‘தி இல்லஸ்டிரேட்டட் வீக்லி ஆப் இந்தியா’ அமைந்துள்ளதாகக் கூறுவர். 1993ஆம் ஆண்டு இதில் வெளியிடப்பட்ட சிறப்பான நிழற்படங்களை எல்லாம் தொகுத்து, சென்னையில் கண்காட்சி வைக்கப்பட்டிருந்ததும் ஒரு செய்தியாகும்.

    இதழ்களில் கண்ணுக்கு விருந்தாக அமைபவை நிழற்படங்கள் மட்டும் அல்ல; ஓவியங்களும் ஆகும். ஓவியங்கள் பொதுவாக நாளேடுகளில் அதிகமாக வருவது இல்லை. கேலிச் சித்திரம், துணுக்கு போன்றவை மட்டுமே வரும். ஆனால் வார இதழ்கள், திங்கள் இதழ்கள், இரு திங்கள் இதழ்கள் ஆகியவற்றில் ஓவியங்கள் மிகுதியாக இடம் பெறுகின்றன. சிற்றிதழ்களில் நவீன ஓவியங்கள் நிறைய இடம் பெறுகின்றன. லதா, அரஸ், மணியம் செல்வன், மருது, ஆதிமூலம், ஜெயராஜ், உமாபதி, மாருதி போன்றோர் பலரும் தொடர்ச்சியாக இதழ்களில் படம் வரைகின்றனர்.

    1.

    செய்திகளைப் படிப்பவர் மனத்தில் ஆழப் பதிக்கும் திறன் கொண்டவை எவை?

    2.

    முதன் முதலில் செய்தித்தாள்களில் படம் வெளியிடும் முறை எப்போது தோன்றியது?

    3.

    இதழ்களில் வெளியிடப்படும் படங்களின் வகை எத்தனை? அவை யாவை?

    4.

    படங்களைத் தருவதில் சிறந்ததாகக் கருதப்படும் தமிழ் மற்றும் ஆங்கில இதழ்கள் எவை?

    5.

    இதழ் ஓவியம் பற்றிக் குறிப்பு எழுதுக.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 13:14:32(இந்திய நேரம்)