தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

4.3 பல்வகைப் படங்கள்

  • 4.3 பல்வகைப் படங்கள்

    இதழ்களில் இடம்பெறும் படங்கள் பல்வேறு வகையின. அவற்றுள் முக்கியமானவை கருத்துப் படங்கள், கேலிச் சித்திரங்கள் ஆகியவையாகும்.

    பொது மக்களுடைய எண்ணங்களைப் எதிரொலிக்கும் வகையில் கருத்துப் படங்கள் இதழ்களில் இடம் பெறுகின்றன. தொடர்களால் அமையும் தலையங்கத்தைப் போலவே, படங்களின் வாயிலாகக் கருத்தைத் தெரிவிப்பது கருத்துப் படம் ஆகும். இந்தியாவில் 1857இல் டெல்லி கெசட் என்ற இதழிலும், தமிழ்நாட்டில் பாரதியாரின் இந்தியா என்ற இதழிலும் முதன் முதலாகக் கருத்துப் படம் வெளியிடப்பட்டது. பின்னர்த் தேசபக்தன், விநோதினி, காந்தி முதலிய இதழ்களிலும் கருத்துப் படங்கள் இடம்பெற்றன. இன்றைக்குப் பல இதழ்களும் கருத்துப் படங்களை வெவ்வேறு வகைகளில் வெளியிடுகின்றன. முன்பு போல் முதல் பக்கத்தில் இப்போது நாளேடுகள் வெளியிடுவதில்லை. அரசியல், சமுதாயம், விலை உயர்வு, சமுதாயச் சிக்கல்கள், மரணங்கள், அழிவுகள், விளையாட்டு இவை போன்ற பலவற்றையும் கருத்துப் படத்தின் கருத்துக்கு உட்படுத்துகின்றன. கருத்துப் படத்தில் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. கருத்துப்படம் வரையும் ஓவியர்களுக்கு அறிவுத் திறனும், நகைச்சுவையுணர்வும், கற்பனைத் திறனும் தேவை. கருத்துப் படங்கள் மக்களைச் சிந்திக்க வைக்க வேண்டும்.

    பொதுவாகக் கருத்துப்படங்களை அவற்றை வெளியிடும் முறையின் அடிப்படையில் மூன்று வகைகளாகப் பகுக்கலாம்.

    தலையங்கக் கருத்துப் படம் (Editorial Cartoon)

    ஆசிரியரின் தலையங்கத்திற்கு அரண் செய்யும் வகையில் தலையங்கத்தை ஒட்டிச் சில கருத்துப் படங்களை வெளியிடுவதுண்டு. ஆனந்த விகடன், கல்கி, குமுதம் போன்றவற்றில் இத்தகைய படங்களைக் காணலாம்.

    அரசியல் கருத்துப் படங்கள் (Political Cartoons)

    அரசியல் நடவடிக்கைகளைக் கிண்டல் செய்ய வெளியிடும் கருத்துப் படங்கள் இப்பிரிவினுள் அடங்கும்.

    கட்டத்திற்குள் கருத்துப் படம் (Box Cartoon)

    படிப்பவர்களின் கருத்தைக் கவர, ஒரு கட்டம் கட்டிக் கருத்துப் படங்களை வெளியிடலாம்; தினத்தந்தியில் வெளிவரும் ‘ஆண்டிப் பண்டாரம்’ இந்த வகையைச் சேர்ந்தது.

    தினமணி வெளியிட்ட மதியின் கருத்துப் படங்கள் பலவும் மக்களைச் சிந்திக்க வைத்தன. ஆர்.கே.லக்ஷ்மன் வரைந்த கருத்துப் படங்கள் இந்திய அளவில் புகழ் பெற்றவை ஆகும்.

    கருத்துப் படங்கள் போலவே கேலிச் சித்திரங்களும் படிப்பவர்களைக் கவர்கின்றன. சிற்சில கோடுகளைக் கொண்டு எளிதாக, ஆனால் நகைச்சுவையோடு, கேலி செய்வதாக, பல கோணல்களில் வரையப்படும் இப்படங்கள் படிப்பவர்களை ஈர்ப்பதோடு சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கின்றன.

    கருத்துப் படங்களில் கருத்துக்கு முதலிடம். கேலிச் சித்திரங்களில் தனி நபர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. தனிநபர்களுக்குரிய தோற்றம், பழக்கம் இவற்றின் வாயிலாக அவர்களை அடையாளம் காட்டுவார்கள். நேரு என்றால் சட்டையில் ஒரு ரோசாப் பூ, தமிழ்வாணன் என்றால் கருப்புக் கண்ணாடி, எம்.ஜி.ஆர் என்றால் தொப்பியும் கருப்புக் கண்ணாடியும், இந்திரா காந்தி என்றால் சிறிதளவு நரை கலந்த தலை முடி, கூரிய மூக்கு அடையாளம் இவைபோல் சிலவற்றைப் பின்பற்றுவார்கள்.

    கேலிச் சித்திரங்கள் நகைச்சுவையோடு இருக்கலாமே தவிர, யாரையும் இழிவு படுத்துவதாக அமைந்துவிடக் கூடாது. இதுவும் பொதுமக்கள் கருத்தாகவே இருக்க வேண்டும். இதழாளர் தம் சொந்தக் கருத்தாக இருக்கக் கூடாது. ஸ்ரீதர், சாரதி, கோபுலு, மதன் (ஆனந்தவிகடன்), தாணு, மதி, கணு (ராணி), ராகி, R.K.LAXMAN (The Illustrated weekly of India), ABU (The Indian Express) முதலானோர் இத்துறையில் வல்லுநர்கள் என்பர்.

    கருத்துப் படங்கள், கேலிச் சித்திரங்கள் மட்டுமல்லாமல் வேறு வகையான பிற படங்களும் இதழ்களில் இடம் பெறுகின்றன.

    துணுக்குப் படங்கள்

    துணுக்குகளுக்கும் படங்கள் வரையப்படுகின்றன. துணுக்கில் இடம்பெறும் கருத்தை இப்படங்கள் முந்திக் கொண்டு நுணுக்கமாக நகைச்சுவையுடன் வெளிப்படுத்துகின்றன.

    கதை, கவிதைப் படங்கள்

    கதை, கவிதை போன்ற படைப்பு இலக்கிய வகைகளுக்கும் இதழ்களில் படங்கள் வரையப்படுகின்றன. வார, மாத இதழ்கள் இவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன. கதைகளில் வரும் கதாபாத்திரங்களுக்கு ஏற்ற படத்தை வரைந்து, கதாபாத்திரங்களை நம் மனத்தில் பதிய வைக்கின்றனர்.

    சிற்றிதழ்களில் மிகுதியாக நவீன வகை ஓவியங்கள் இடம் பெறுகின்றன.

    இவற்றோடு அட்டைப் படத்திலும், விளம்பரங்களிலும் சிறந்த படங்கள் வருகின்றன. நிழற்படங்களும் வருகின்றன. ஓவியங்களும் இடம் பெறுகின்றன.

    சமுதாய, அரசியல், அறிவியல் அறிஞர்களின் வாழ்க்கை வரலாறுகள் குழந்தைகளுக்குரிய பாங்கில் சித்திரக் கதைகளாக வெளியாகின்றன. பெரியார் பிஞ்சு என்னும் சிறுவர் இதழில் பெரியார் ஈ.வெ.ரா வாழ்க்கை வரலாறு இவ்வாறு தரப்படுகிறது.

    தலைவர்கள், சான்றோர்களின் வாழ்க்கையில் எடுக்கப்பட்ட நிழற்படங்கள் தொகுக்கப் பெற்று, அவர்களின் பிறந்த அல்லது இறந்த நாளில் வெளியாகும் இதழில் இளமைக்காலம் முதல் மறைவுக் காலம் வரையிலான படங்கள் முழுமையான அளவில் வெளியிடப்படுகின்றன.

    ஒன்று போலவே தோன்றும் இருவேறு படங்கள் வரைந்து அவற்றில் 7 வித்தியாசங்களைக் காண்க என்ற உய்த்துணர்வுத் திறன், பார்வைக் கூர்மைத் திறன் அறியும் விளையாட்டு முறையிலும் படங்கள் வெளியாகின்றன.

    படங்கள் நிறைந்த நாளிதழ் என்ற குறிப்புடன் தினத்தந்தி வெளியாகிறது. இது படங்களின் தேவையைத் தெளிவாக உணர்த்துகிறது அல்லவா?

    அறிவியல் கருத்துகளை எளிமையாகவும், விரைவாகவும் புரிந்து கொள்ளப் படங்கள், வரைபடங்கள் எப்போதும் பயன்படுத்தப்படுகின்றன என்பதை அறிவீர்கள்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 13:14:40(இந்திய நேரம்)