பண்புத் தொகை என்பது, ஆகிய என்னும் பண்பு உருபு
மறைந்து நிற்கப் பண்புப் பெயரோடு பண்பிப்
பெயர்
தொடர்வதாகும்.
பண்பு, வண்ணம், வடிவம், அளவு, சுவை முதலியனவாகும்.
பண்பை உடையது எதுவோ அது பண்பி எனப்படும்.
ஆகிய என்பது, பண்புக்கும்
பண்பிக்கும் உள்ள
ஒற்றுமையை விளக்குவதற்காக வரும் இடைச்சொல். இதனைப்
பண்பு உருபு என்பர்.
(எ-டு)
செந்தாமரை - வண்ணப் பண்புத் தொகை
வட்ட நிலா - வடிவப் பண்புத் தொகை
முத்தமிழ் - அளவுப் பண்புத் தொகை
இன்சொல் - சுவைப் பண்புத் தொகை
இவை விரியும்பொழுது,
செம்மையாகிய தாமரை,
வட்டமாகிய நிலா, மூன்றாகிய தமிழ், இனிமையாகிய சொல்
என்பதாகும்.
இருபெயரொட்டுப் பண்புத்தொகை என்பது, ஆகிய என்னும்
பண்பு உருபு மறைந்து நிற்கப் பொதுப் பெயரோடு சிறப்புப்
பெயரோ, சிறப்புப் பெயரோடு பொதுப் பெயரோ ஒரு பொருள்
குறித்து வருவதாகும்.
(எ-டு)
தலைவர் அப்துல்கலாம்
பலா மரம்
முதல் தொடரில் தலைவர்
என்னும் சொல் பொதுப்
பெயர். அப்துல்கலாம் என்னும் பெயர்
சிறப்புப் பெயர்.
இத்தொடர் பொதுப் பெயரோடு சிறப்புப் பெயர் தொடர வந்த
இருபெயரொட்டுப் பண்புத் தொகை. பொதுப் பெயரும் சிறப்பு
பெயரும் ஒருவரையே குறித்து வந்தது கவனிக்கத் தக்கது.
இரண்டாம் தொடரில்
பலா என்பது மர வகைகளில்
ஒன்றின் சிறப்புப் பெயர். மரம் என்பது
பொதுப் பெயர்
.இத்தொடர் சிறப்புப் பெயரொடுப் பொதுப் பெயர் தொடர வந்த
இருபெயரொட்டுப் பண்புத் தொகை. சிறப்புப் பெயரும் பொதுப்
பெயரும் ஒரு பொருளையே குறித்து வந்தன.
தலைவர்,
பலா என்னும் சொற்கள் பண்புப் பெயர்
ஆகாவிடினும் பண்புத் தொகை போல ஆகிய என்னும் உருபு
பெற்று ஒரு பொருளைச் சிறப்பிப்பதனால் இத்தொடர்கள்
பண்புத் தொகைத் தொடர்களாகக் கருதப் பெறுகின்றன.
பண்பை விளக்கும் மொழிதொக் கனவும்
ஒருபொருட்கு இருபெயர் வந்தவும் குணத்தொகை (நன்னூல்-365)